
கங்கை நதி ஓடும் இடங்களில் எல்லாம் கங்கா ஆரத்தி விசேஷமாக நடைபெறுவது வழக்கம். அதுவும் குறிப்பாக, வாரணாசியில் கங்கா ஆரத்தியைப் பார்க்க மிகவும் அற்புத அழகாக இருக்கும். ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் கங்கை நதிக்கரையில் சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் வரை இந்த கங்கா ஆரத்தி நிகழ்வு நடைபெறுகிறது.
ஏழு ஆடவர்கள் ஒரே மாதிரி பட்டாடை உடையணிந்து கங்கை ஆற்றை நோக்கி வணங்கிப் பாராட்டி பாடல்கள் பாடுவார்கள். கமகமவென மணம் வீசும் ஊதுபத்திகளை ஏற்றி கங்கை நதிக்குக் காட்டி இந்த ஆரத்தி நிகழ்வு தினசரி ஆரம்பமாகும். ஏழு பேரும் ஒரே மாதிரியான பெரிய சங்கினை எடுத்து ஒரே நேரத்தில் ஊதுவது காணக் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
தூபக்காலில் சாம்பிராணியை இட்டு தலைக்கு மேல் உயர்த்தி அதை கங்கைக்கு ஆரத்தியாகக் காட்டிய பிறகு, அதில் கற்பூரக் கட்டிகளை வைத்து மீண்டும் கங்கை நதிக்கு ஆரத்தி காட்டுவார்கள். ஐந்து தலை நாகத்தின் வடிவினை போல் இந்த தூபக்கால் கொண்டதாக இருக்கும் என்பது விசேஷம்.
தொடர்ந்து மயிலிறகை விசிறி போல் வீசிய வண்ணம் கங்கையைப் போற்றிப் பாடுவர். மிகப் பெரிய தீபங்களை ஏற்றி கைகளில் ஏந்தி வலப்புறமாக கடிகாரச் சுற்று போல சுற்றி, நான்கு திசைகளிலும் காட்டும் இந்த ஆரத்தி காட்சி பார்க்கும் அனைவரையும் பரவசத்துக்கு உள்ளாக்கும்.
இந்த கங்கா ஆரத்தியை நிகழ்வைக் காண தினமும் இங்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர். தவிர, கங்கா நதியில் பெரிய மற்றும் சிறிய படகுகளில் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்தி, அதில் அமர்ந்தும் பக்தர்கள் இந்த ஆரத்தி தரிசனத்தைக் கண்டு தரிசிக்கின்றனர்.
மணியோசை, முழக்கங்கள், தூபக்குச்சிகள், தியான விளக்குகள் ஆகியவற்றுக்கு மேற்கொள்ளப்படும் கங்கா ஆரத்தி பார்க்க கண்கொள்ளாக் காட்சியாகும். வாரணாசியில் மிகவும் பிரபலமான இந்த கங்கா ஆரத்தி நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால் தரிசிக்கப்பட்டு அவர்களின் மனங்களை பரவசப்படுத்துகிறது. ‘ஸுபா-இ-பனாரஸ்’ என அழைக்கப்படும் காலை நேர கங்கா ஆரத்தி வேத வசனங்களுடன் ஆரம்பமாகி முடிவடைகிறது. கங்கா தசராவும் வாரணாசியில் பக்தர்களால் கண்டு தரிசிக்கப்படும் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்வாகும்.