ஹிட்லரின் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்த இந்திய மாநில முதல்வர்!

Patnaik on the 2018 Indian postal stamp
Patnaik on the 2018 Indian postal stamp
Published on

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் – ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்வர், அமரர் பிஜு பட்நாயக்கிற்கு இந்த வாக்கியம் மிகவும் பொருந்தும். பார்ப்பதற்கு மிகவும் சாதுவாகவும், மென்மையானவராகவும் தோற்றமளித்த இவர் அரிய சாதனைகளைப் படைத்தவர். அதனாலேயே இவருடைய மறைவின்போது இவர்மீது மூன்று நாடுகளின் கொடிகள் போர்த்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த விவரம் தெரியுமா?

போர் விமானத்தை இயக்குவதில் சிறந்தவர் இவர். இரண்டாம் உலகப்போர் சமயத்தில், இந்தியாவில் பிரிட்டிஷ் அரசின் ராயல் விமானப்படையில் விமானியாகப் பணியாற்றினார். இங்கிலாந்து மற்றும் அதன் நேச நாடுகளுக்குப் பொது எதிரியாக செயல்பட்டவர் ஹிட்லர். போரில் சோவியத் யூனியன் பின்னடைவைக் கண்டது. இச்சமயத்தில் போர் விமானத்தை இயக்கிய பட்நாயக், ஹிட்லரின் படைகள் மீது குண்டுகள் வீசி, அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தார். அவருடைய இந்த தீரச் செயலைப் பாராட்டும் விதமாக சோவியத் யூனியனின் உயரிய விருது அவருக்கு அளிக்கப்பட்டது; அதோடு அவர் அந்நாட்டின் கௌரவ பிரஜையாகவும் அங்கீகரிக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்:
உயிருடன் இருக்கும் ஹிட்லர்… திடுக்கிடும் தகவல்கள்!
Patnaik on the 2018 Indian postal stamp

இந்தோனேஷியா, டச்சுக்காரர்கள் ஆதிக்கத்தில் அடிமைபட்டிருந்தது. அந்நாட்டவர் யாரும், கடலைக் கடந்து சென்றுவிடாதபடி, கடற்கரைப் பகுதி முழுவதையுமே தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தது, டச்சு அரசு. அதோடு பிரதமர் சுடான் ஸாஹ்ரிர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் இந்தியாவின் உதவியைக் கோரினார். 1947, ஜூலையில், ஜவஹர்லால் நேரு அதற்கு சம்மதித்து, பிஜு பட்நாயக்கிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்.

பட்நாயக்கும் சீக்கிய ராணுவ வீரர்களை அழைத்துக் கொண்டு, மனைவியுடன் (இவரும் மிகச் சிறந்த விமானி, கணவரின் ஆலோசகர்) இந்தோனேஷிய விமான நிலையத்தில் இறங்கினார். எதிர்பார்த்ததுபோல டச்சுப் படையினர் தாக்குதல் நடத்தினர். வெகு எளிதாக அவர்களை சமாளித்து, இந்தோனேஷிய பிரதமரை மீட்டு, சிங்கப்பூர் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வந்தனர் பட்நாயக் குழுவினர். இதனால் இந்தோனேஷிய மக்களிடையே சுதந்திர வேகம் பீறிட்டுக் கிளம்ப, அவர்கள் டச்சு யதேச்சாதிகாரத்தை விரைவிலேயே விரட்டியடித்தனர். பிஜு பட்நாயக் அவர்களுடைய நாயகரானார்.

இதையும் படியுங்கள்:
எதிர்பார்ப்பைத் தள்ளி வைத்துவிட்டு, உற்ற நண்பனாகப் பழகுங்கள்!
Patnaik on the 2018 Indian postal stamp

பின்னாளில், அந்நாட்டின் அதிபர் சுகர்ணோ, பட்நாயக்கின் மீதான தன் அபிமானத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தினார். ஆமாம், அவருக்குப் பிறந்த குழந்தைக்கு பட்நாயக்கும் அவருடைய மனைவியும் வந்து, பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர்களும் அவ்வாறே சென்று, குழந்தைக்கு ‘மேகவதி‘ என்று பெயர் வைத்தார்கள். பட்நாயக், ‘பூமி புத்ரா‘ என்ற இந்தோனேஷியாவின் கௌரவ பிரஜை விருது பெற்றார். அடுத்து 1950ம் ஆண்டு அந்நாட்டின் மிக உயரிய ‘பின்டங் ஜஸா உத்மா‘ (BINTANG JASA UTMA) என்ற விருதையும் அவருக்கு அளித்து கௌரவித்தது இந்தோனேஷியா.

இடையே 1974 அக்டோபர் மாத வாக்கில் ஸ்ரீநகரில் கொள்ளையர்களும், போக்கிரிகளும் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெருமளவு பாதிப்பதால் அவர்களைக் கட்டுப்படுத்துவதும், கைது செய்வதும், நிலைமையை சீராக்குவதுமான பொறுப்பு பட்நாயக்குக்கு அளிக்கப்பட்டது. அவர் கொஞ்சமும் தயங்காமல், உறுதியான மனதோடு, டில்லியிலிருந்து பலமுறை விமானத்தைச் செலுத்தி, போர் வீரர்களை ஸ்ரீநகரில் கொண்டு சேர்த்தார். இந்தப் படையினர் வெகு எளிதாக அந்த உள்ளூர் போக்கிரிகளைக் கைது செய்து அவர்களுடைய கொட்டத்தை அடக்கினர்.

ஒடிசா மாநிலத்தின் முதல்வராக இருமுறை பொறுப்பேற்ற பிஜு பட்நாயக் 1997ம் ஆண்டு தன் 81வது வயதில் இயற்கை எய்தினார். அப்போது அவருக்கு இந்திய அரசு மரியாதையோடு ரஷ்யா மற்றும் இந்தோனேஷிய நாடுகளும் மரியாதை செலுத்தின! எப்படி? அவரது பூத உடல் மீது இந்திய தேசியக் கொடியோடு, அந்த இரு நாடுகளின் கொடிகளும் போர்த்தப்பட்டன! அதோடு அச்சமயத்தில் இந்தோனேஷியாவில் ஒரு வாரத்துக்கும், ரஷ்யாவில் ஒருநாளும் துக்கம் அனுசரிக்கப்பட்டது. ரஷ்யாவில் அனைத்து இடங்களிலும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

இந்திய சார்பில் அவர் நினைவாக 5 ரூபாய் காசும், அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com