
நீங்கள் விரும்புவது அச்சத்தினாலும் கிடைக்காது. ஆசையினாலும் கிடைக்காது. அதற்கான திறமையினால் தான் வரும். யாராக இருந்தாலும் எந்த அளவுக்குத் தகுதி இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் கிடைக்கும். கூடுதலாகவும் கிடைக்காது. குறைவாகவும் கிடைக்காது. எதிர்பார்ப்பது எப்போதும் செய்யும் வேலைகளில் கவனத்தைச் சிதறடித்துவிடும். மாறாக திறமையுடனும், தீர்மானத்துடனும் எதையும் அணுகினால் நடப்பது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். வெற்றி தோல்வி எல்லாம் நம் மனதில்தான் இருக்கிறது. வாழ்க்கையில் பலவித சூழ்நிலைகள் அமைகின்றன. எந்தச் சூழ்நிலை நமக்கு சாதகமாக இருக்கிறதோ அதை வெற்றி என்று கொண்டாடுகிறோம். எந்த சூழ்நிலை நமக்கு சாதகமற்றுப் போகிறதோ அதை தோல்வி என்று துக்கம் கொள்கிறோம்.
மிக மோசமான சூழ்நிலையிலும் ஏதோ ஒரு நன்மை இருக்கிறது. அதைக் கவனித்துக் கவர்ந்து கொள்வதில்தான் உங்கள் உண்மையான வெற்றி இருக்கிறது. இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் வெடித்த காலம். அடால்ப் ஹிட்லரின் நாஜி அமைப்பு பல லட்சம் அப்பாவி மக்களை சிறை பிடித்துக் கொடுமை படுத்தியது. முக்கியமாக யூதர்களாக இருந்தவர்கள் எல்லாவிதமான அராஜகங்களுக்கும் உட்படுத்தப்பட்டார்கள். பல குடும்பங்கள் சிதறடிக்கப்பட்டது. மிச்சம் இருந்தது 13 வயது சிறுமியும் அவளது எட்டுவது சகோதரனும்தான். அவர்களைப்போல் பல குடும்பங்களில் இருந்து எத்தனையோ சிறுவர் சிறுமியர்கள் ஆட்டு மந்தை போல் ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர். மூன்று குளிர் இரவுகள் கழித்து ஒரு ரயில் வந்தது. சிறுவனும் சிறுமியும் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறினர். சிறுவன் தன் ஷூக்களைத் தவறிவிட்டதாக தன் அக்காவிடம் கூற அவள் இவனை ஆவேசமாக திட்டி தீர்த்து விட்டாள்.
அடுத்த ரயில் நிலையத்தில் பெண்களையும் பையன்களையும் தனித்தனியே அடைத்து விட்டனர். அந்தப் பெண்ணால் தம்பியைப் பார்க்க முடியவில்லை. போர் நின்ற பிறகு மூன்று ஆண்டுகள் சிறையிலிருந்து வந்தவள் தன் குடும்பத்தில் யாரும் உயிரோடு இல்லை என அறிந்தாள். தம்பியை கடைசியாக பார்த்தபோது திட்டித் தீர்த்தாளே அதுதான் கடைசியாக பேசிய வார்த்தைகள். அவள் உருகினாள். மனதில் உறுதி பூண்டாள். யாருடன் இனி பேசினாலும் அது அவர்களுடன் பேசும் கடைசி பேச்சாக இருந்தால் எப்படிப் பேசுவேனோ அப்படித்தான் பேசப் போகிறேன். இந்த உறுதி எடுத்ததால் அவளால் மகானாக வாழ முடிந்தது. பேரிழப்பை சந்தித்தாலும் அதிலிருந்து ஒரு நன்மையை அடைய முடிந்தது.
நாம் யாருடன் பேசினாலும் அவர்களை மறுபடியும் பார்க்கப் போகிறீர்களா என்ற உத்தரவாதம் கிடையாது. என்பதை கவனத்தில் வைத்துப் பேசுங்கள். உங்கள் எதிர்பார்ப்பைத் தள்ளி வைத்துவிட்டு உங்கள் மகனிடம் உற்ற நண்பனாகப் பழகுங்கள். அவனுடைய திறமைகளை தீட்ட உறுதுணையாக இருங்கள். எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அதில் கிடைக்கிற கூடிய நன்மையில்தான் கவனம் வைப்பேன் என்ற விழிப்புணர்வு ஒருவருக்கு இருந்தால் வாழ்க்கையே வெற்றிதான். தோல்வியே கிடையாது.