

நீல நிற வானத்தில் வெள்ளை நிற விமானங்கள் பறப்பதைதான் நாம் பொதுவாக பார்த்திருப்போம். சில நேரங்களில் இளஞ்சிவப்பு நிற விமானத்தையும் பார்த்திருக்கலாம். ஆனால் ஒரே ஒரு நாடு மட்டும் கருப்பு நிறத்தில் விமானத்தை இயக்குகிறது. அந்த வகையில் கருப்பு நிற விமானம் இயக்கும் நாடு குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் இப்பதிவில் காண்போம்.
சூரிய ஒளியை பிரதிபலிப்பதற்காக விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. வெள்ளை நிறம் சூரிய ஒளியை விமானத்தில் உள்ளே உட்புகவிடாமல் எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும். மேலும் வெண்மை நிறத்தில் விரிசல்கள் இருந்தாலும், எண்ணெய் கசிவுகள் இருந்தாலும் அல்லது ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டாலும் எளிதில் கண்டறிய முடியும்.
வானத்தில் வெள்ளை நிற விமானம் பறக்கும்போது அது பறவைகளுக்கு தெளிவாக தெரிவதால், விமானத்தின் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான 'நியூசிலாந்து' மட்டும் கருப்பு நிறத்தில் விமானத்தை இயக்குகிறது. நியூசிலாந்து நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஏர் நியூசிலாந்து இந்த கருப்பு நிறத்தை கலாச்சார காரணங்களுக்காக விமானங்களுக்கு பயன்படுத்துகிறது.
நியூசிலாந்தின் புகழ்பெற்ற ரக்பி அணியாக 'ஆல் பிளாக்ஸ்' (All Blacks) உள்ளது. இந்த அணியின் சீருடை கருப்பு நிறம் ஆகும். எனவே அவர்களை கௌரவிக்கும் விதமாகவும் நாட்டின் அடையாளமாகவும் கருப்பு நிறத்தை விமானங்களுக்கு நியூசிலாந்து தேர்ந்தெடுத்துள்ளது.
நியூசிலாந்து நாட்டின் தேசிய சின்னமான 'வெள்ளி ஃபெர்ன்' இலை, கருப்பு நிற விமானத்தில் பொறிக்கப் பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் விதமாக இது விளங்குகிறது.
உலகம் முழுவதும் இயக்கப்படும் வெள்ளை நிற விமானங்களுக்கு மத்தியில் இந்த வெள்ளி ஃபெர்ன் இலை பொறிக்கப்பட்ட கருப்பு நிற விமானம் நியூசிலாந்து நாட்டை மற்ற உலக நாடுகளில் இருந்து தனித்து அடையாளம் காட்டுகிறது. இதுவே அந்நாட்டின் சுற்றுலாத் துறைக்கும் பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது.
வெண்மை நிறம் அறிவியல் பூர்வமாக ஆக்கப்பூர்வமானது என்றாலும் நியூசிலாந்து நாடு தன்னுடைய நாட்டின் அடையாளத்தை உலகிற்கு உணர்த்தவும், கலாச்சாரம் மற்றும் பெருமைக்காகவும் , வெண்மை நிற விமானங்களை விட கருப்பு நிற விமானங்களுக்கு கூடுதல் செலவு பிடிக்கும் என்றாலும் எதையும் பொருட்படுத்தாமல் கருப்பு விமானங்களை இயக்கி வருகிறது.
தேசம் என வந்துவிட்டால் எந்த ஒரு நாடும் தன்னுடைய கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் இழக்க முன்வருவதில்லை. எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அதையும் தாண்டி உலக அளவில் தங்களுடைய நாட்டை தனித்துவமாக காட்டுவதையே பெரிதாக நினைப்பதற்கு உதாரணம் இந்த நியூசிலாந்து நாட்டின் கருப்பு நிற விமானங்கள்.