
இந்து பாரம்பரியத்தை பக்தி வழியில் வளர்த்து வரும் குழந்தையாக வைபவ் மகேஷ் என்கிற ஸ்ரீராம் மகேஷ் (வயது: 9, 4ஆம் வகுப்பு, தி பிஎஸ்பிபி மில்லேனியம் பள்ளி, கெருகம்பாக்கம்) திகழ்கிறான்.
இந்நவீன யுகத்தில் பக்திப் பண்பாட்டினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக நாமசங்கீர்த்தனத்தையும் கதாகாலட்சேபத்தையும் தனது வாழ்வியலாகக் கொண்டு வாழ்ந்து வருகிறான் இச்சிறுவன். இச்சிறுவனின் நிகழ்ச்சியை சமீபத்தில் நான் கலந்துக் கொண்ட இலக்கிய நிகழ்ச்சியில் காணும் வாய்ப்பினை பெற்றேன். அப்போது அச்சிறுவனின் பெற்றோர்களும் உடனிருந்தனர். தங்கள் மகனின் பக்திப் பயணத்தை அவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
அதனை இப்போது உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தன் தாயின் கருவில் இருந்த போதே அவர் தாயார் பாடிய கீர்த்தனைகள், பஜனைகள், ஹரிகதைகளை கேட்கும்போதே தன்னுடைய கை, கால்களை அசைத்து தன் மகிழ்ச்சியையும், ஈடுபாட்டையும் உணர்த்தி வந்தவன் இச்சிறுவன்.
இவன் தன்னுடைய 1½ வயதிலேயே தான் கேட்ட கதைகளை புதுமையாக உருவாக்கி சொல்லத் தொடங்கி விட்டதாக இச்சிறுவனின் தந்தை மகேஷ் பெருமையுடன் கூறுகிறார். அவனுடைய ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்த அவனுடைய தாயார் பரணி மகேஷ் அவனுக்கு பாடல்களுடன் கதைகளையும் கூறும் பயிற்சியினையும் அளித்தார்.
செல்வன் வைபவ் தாயிடம் கேட்கும் கதைகளைப் புரிந்துக் கொண்டு, தனது சொந்த பாணியில், பாடல்களுடன், மனதை வருடும் குரலிலும், உருக்கமான முறையில் நடித்தும், அனைத்து வயதினரையும் தனது கதாகாலட்சேப நிகழ்ச்சிகளின் மூலம் தற்போது கவர்ந்து வருகிறார். அவனுடைய தந்தைதான் அவனுடைய முதல் ரசிகராம். எந்த கதையையும் முதலில் தந்தையிடம் சொல்லிக் காட்டிய பிறகுதான் பொது வெளியில் நிகழ்ச்சிகளை நடத்திவருவதாக அவனுடைய பெற்றோர்கள் கூறுகின்றனர்.
அவனுடைய தந்தையார் அவன் இந்தக் கலையில் வளர்வதற்கு தேவையான ஊக்கத்தையும், வழிகாட்டுதலையும் அவனுக்கு வழங்கி வருவது கூடுதல் சிறப்பு. அனைவரும் சந்தோஷமாக கடவுளை நினைத்து பஜனை செய்யவும், பாட, ஆடச் செய்வதுமே வைபவின் வாழ்க்கையின் நோக்கமாக இருக்கிறது. படிப்பிலும் இவன் படுசுட்டியாம்.
கோதை ஆண்டாளான கதை, ஞானப்பழம், சர்வம் சக்திமயம் மாயக்கண்ணன், மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கருணையின் வடிவம் கந்தன், ஸ்ரீராமருக்கு உதவிய குட்டி அணிலின் கதை, ப்ரேம ஸ்வரூபன் பாண்டுரங்கன் ஆகியவை வைபவ் மேடையில் அரங்கேற்றியுள்ள சில குறிப்பிடத்தக்க கதாகாலேட்சபங்களாகும்.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் கலாச்சாரத்துறை சார்பில், இச்சிறுவனுக்கு, ’கலை இளமணி’ விருது, சிறுவயதில் பல கோவில்கள் மற்றும் சபாக்களில் கதா கலாட்சேபம் செய்ததற்காக, சென்னை மாவட்ட ஆட்சியர் டாக்டர். ரேஷ்மி சித்தார்த் ஜகடே, I.A.S. அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாம்பலம் ரோட்டரி கிளப் மூலம் 'இளம் சாதனையாளர்' விருதினையும், ’சுப்பிரமணியம் எண்டோவ்மென்ட்’ விருதினை பத்மபூஷண் டாக்டர் பத்மா சுப்ரமணியம் அவர்களிடமிருந்தும் இச்சிறுவன் பெற்றுள்ளான். திரிபுராந்தரா நடத்திய நடன விழாவில் இருந்து மாணவருக்கு வழங்கப்படும் படிப்பு உதவித்தொகையை பெற்றுள்ளார். மேலும், சாய் டிவி, IBC பக்தி சேனல், இந்தியா கிளிட்ஸ் (ஆன்மீக கிளிட்ஸ்), ஆதன் ஆன்மீகம் ,கரண் டிவி போன்ற சமூக ஊடகங்களிலும் பக்தி கலைநிகழ்ச்சிகளை இச்சிறுவன் நடத்தி வருகிறார்.
கோவிந்தபுரம்ஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ், காஞ்சி காமகோடி பீடம், காஞ்சி மடம், திருவையாறு ஐயாரப்பர் கோவில், நாகபட்டினம் நீலாயதாட்சி கோவில், பெசண்ட்நகர் ரத்தினகிரீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் பெரிய கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர் வெள்ளிசுவரர் கோவில், கும்பகோணம், மாங்காடு, விழுப்புரம், திருவெண்காடு, குன்றத்தூர், திண்டிவனம், மயிலாடுதுறை போன்ற 70க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் பக்திகலை நிகழ்ச்சிகளை இவர் நிகழ்த்தியுள்ளார்.
காஞ்சிபுரம் ஓரிக்கையில் நடந்த சாதுர்மாஸ்ய சங்கீத உபாசனை நிகழ்ச்சியில் பங்கேற்ற வைபவ், பால பெரியவாள் அவர்களிடமிருந்து மாலையும், ரக்ஷையும், வெள்ளி அம்பாள் நாணயமும், வஸ்த்திரமும் பெற்றதை மகிழ்வுடன் நினைவு கூறுகிறார் இச்சிறுவனின் தாயார்.
இச்சிறுவனின் பக்திப் பயணம் சிறப்பாகத் தொடர வாழ்த்தி விட்டு அவர்களிடமிருந்து நான் விடைப் பெற்றேன்.