
கருப்பசாமி பல்வேறு ஊர்களில் அம்மன், அய்யனார் கோவில்களிலும், பெருமாள் கோயில்களில் காவல் தெய்வமாகவும் தனித் தெய்வமாகவும் இருக்கின்றார். திருச்சி ஸ்ரீரங்கம் பகுதிகளில் பெருமாளை வணங்குபவர் கூட கருப்பசாமியை 'காட்டு சாமி' என்று பெயரில் வணங்குவர்.
கருப்பசாமி வகைகள்
கருப்பசாமியில் பிலாவடி கருப்பு (சதுரகிரி), புளியடி கருப்பு, 18ஆம் படி கருப்பு (அழகர் கோயில்), சங்கிலிக் கருப்பு, மலையாளக் கருப்பு என்று பல பெயர்களில் அழைக்கப்படுவார். சுடலை மாடன், காத்தவராயன் போன்ற நாட்டுப்புறத் தெய்வங்கள் சிவனின் மகன் என்பது போல் கருப்பசாமியை சீதையின் மகன் என்று சொல்லும் கதை உள்ளது.
சீதையின் மகன்
சீதை தன் குழந்தை லவனுடன் காட்டில் வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் தான் தங்கி இருந்த ரிஷியின் குடிலில் குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு தண்ணீர் எடுக்கச் சென்றாள். ரிஷியை நோக்கி 'உள்ளே குழந்தை தூங்குகிறான் பார்த்துக் கொள்ளுங்கள்' என்றாள். சிறிது நேரத்தில் குழந்தை எழுந்து 'அம்மா அம்மா' என்று அழுதபடி தன் தாயாரை தேடி சென்றான்.
தியானத்தில் இருந்த ரிஷிக்கு திடீரென குழந்தையின் நினைவு வந்தது. உடனே உள்ளே சென்று பார்த்தார். அந்தோ பரிதாபம் அங்கு வெறும் தூளி தான் இருந்தது. ஐயோ என்று பதறிய ரிஷி அவர் தன்னிடம் இருந்த தர்ப்பையை முறித்து அந்த தூளியில் போட்டதும் ஓர் ஆண் குழந்தை தோன்றியது. 'தூங்கு பா' என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார்.
சீதை வீட்டுக்குள் வந்து பார்த்தால் இங்கு ஒரு குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. தன்னைத் தேடி காட்டுக்குள் நடந்து வந்த அந்தக் குழந்தையைப் பார்த்தாள். இரண்டும் ஒன்று போல இருந்தது. இதில் யார் நம் குழந்தை என்ற ஐயம் அவளுக்குத் தோன்றியது. உடனே அவள் வாசலில் ஒரு கோடு கிழித்து அதில் தீயை வரவழைத்தாள். இரண்டு குழந்தைகளையும் மறுபக்கம் நிறுத்தினாள். 'உங்களுக்கு ஒரு சத்திய சோதனை. இருவரும் இந்த தீயைத் தாண்டி வாருங்கள். என்னுடைய குழந்தை எதுவோ அதை தீ தீண்டாது' என்றாள்.
சீதையின் சொல் கேட்டு குழந்தைகள் தீயைத் தாண்டி வந்தன. தர்ப்பைக் குழந்தை கருகி விட்டது. அந்த குழந்தை சீதையைப் பார்த்து 'அம்மா நானும் உன் குழந்தை தானே. நான் ஏன் இப்படி ஆகிவிட்டேன்' என்று அழுதது. சீதை அந்தக் குழந்தை அம்மா என்று தன்னை அழைத்ததால் 'நீயும் என் குழந்தை தான் நீ இங்கேயே எனக்கு காவல் இரு' என்றாள்.
பதினெட்டாம்படி கருப்பு
மதுரை அருகே உள்ள அழகர் கோயிலின் மிகப்பெரிய கிழக்கு வாசல் கதவுக்கு சந்தனம் பூசி அதையே 18ஆம் கருப்பசாமியாகக் காவல் தெய்வமாக வழிபடுவர். இக்கோவில் ஒரு நீதிமன்றம் ஆகும். இங்கு பொய் சத்தியம் செய்தால் அவர்களின் குடும்பங்கள் விளங்காது என்பர்.
தங்க உற்சவர் பன்னிருவர்
பதினெட்டாம்படி கருப்பசாமிக்குரிய நாட்டுப்புறக் கதைப்பாடலில் இன்னொரு கதை உள்ளது. இக்கோவிலில் 12 உற்சவ மூர்த்திகள் கிளிச்சிறை, ஆடகம், பசும்பொன் என்ற தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. இவற்றைக் கொள்ளையடித்துச் செல்ல மலையாளத்திலிருந்து 18 மாந்திரீகர்கள் இங்கு வந்தனர்.
அழகர் தன் பட்டர் கனவில் தோன்றி 'என் உற்சவமூர்த்திகளைக் கொண்டு செல்ல மலையாள மாந்திரீகர்கள் வந்துள்ளனர். அவர்கள் கண்ணில் அஞ்சனம் பூசி இருப்பதால் அவர்களின் உருவம் யாருக்கும் தெரியாது. நீ நிறைய மிளகு சேர்த்து வெண்பொங்கல் செய்து கொண்டு வந்து எனக்கு நெய்வேத்தியம் செய். அந்த மிளகு காரத்தில் அவர்களின் அஞ்சனம் கரைந்து அவர்களின் உருவம் வெளிப்பட்டுவிடும். நீ ஊராருக்கு சொல்லி அவர்களை பிடித்து கொடு' என்றார். பட்டரும் அதன் படி செய்தார்.
மலையாளக் கருப்பு
மலையாள மந்திரவாதிகளை ஊரார் பிடித்துக் கட்டிய போது ஒருவன் மட்டும் 'ஐயனே உன் அழகை நான் இங்கேயே இருந்து தரிசிக்கும் பாக்கியத்தை தருவீராக. நான் உனக்கு காவல் தெய்வமாக இருப்பேன்' என்று சொல்லி மற்ற ஆட்களைக் கொன்று படிகளாக்கி விட்டான். இதனால் இவனை 'மலையாளக் கருப்பு' என்பர்.
காவல் தெய்வம்
மதுரைக்குக் கள்ளழகர் புறப்பட்டு வரும்போது அவரது நகைகள் துணிமணிகள் பட்டியலை பதினெட்டாம்படி கருப்பசாமி முன்பு வாசித்துக் காட்ட வேண்டும். முன்பு கோயில் கதவைப் பூட்டிவிட்டு இரவில் சாவியை இக்கோயிலில் சாமியின் முன்பு வைப்பது வழக்கம். ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று மட்டும் கிழக்கு வாசல் கதவு திறக்கப்படும். உள்ளே 18 படிகள் உண்டு. அந்தப் படிகளில் விளக்கேற்றி வழிபடுவார்கள்.