இன்று உலகம் முழுவதும் நள்ளிரவு 12 மணிக்குக் கடிகாரம் ஒலித்ததும், வானவேடிக்கை வெடிக்க, கேக் வெட்டி "ஹாப்பி நியூ இயர்" என்று கொண்டாடுகிறோம். ஆனால், எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? ஏன் சரியாக டிசம்பர் 31 அன்று ஒரு வருடம் முடிய வேண்டும்? இது இயற்கையாக அமைந்ததா அல்லது யாராவது திட்டமிட்டு உருவாக்கியதா? உண்மையில், நாம் இன்று கிழிக்கும் காலண்டருக்குப் பின்னால், பண்டைய அரசர்களின் அதிகாரமும், மதத் தலைவர்களின் சீர்திருத்தங்களும், குழப்பமான வரலாறும் ஒளிந்துள்ளது.
ஆரம்ப காலத்தில் ரோமானியர்கள் பயன்படுத்திய நாட்காட்டியில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களே கிடையாது. பண்டைய ரோம் நகரில் மார்ச் மாதம் தான் ஆண்டின் தொடக்கமாக இருந்தது. அவர்களது கணக்குப்படி ஒரு வருடத்தில் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. கடும் குளிர் நிலவும் நாட்களை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. அந்த நாட்களைப் பெயரிடப்படாத காலமாகக் கருதினர்.
அரசியல் சூழ்ச்சி!
கி.மு. 700-களில் ஆட்சி செய்த நுமா பொம்பிலியஸ் என்ற மன்னர் தான், இந்த இடைவெளியை நிரப்ப ஜனவரி மற்றும் பிப்ரவரியை அறிமுகப்படுத்தினார். ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. அன்றைய அரசியல்வாதிகள் தங்கள் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்காக, மாதங்களின் நாட்களைத் தங்கள் இஷ்டத்திற்கு மாற்றி அமைத்தனர். இதனால் பண்டிகைகள் மற்றும் பருவங்கள் மாறிமாறி வந்து மக்களுக்குப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின.
சீசர் போட்ட அடித்தளம்!
இந்தக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் தான் ஜூலியஸ் சீசர். கி.மு 46-ம் ஆண்டில், எகிப்திய வானியல் அறிஞர்களின் உதவியோடு, சூரியனை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய காலண்டரை அவர் வடிவமைத்தார். அதுவே 'ஜூலியன் காலண்டர்'. அவர்தான் ஆண்டின் தொடக்கத்தை ஜனவரி 1-ம் தேதிக்கு மாற்றினார். அப்படித் தொடக்கம் ஜனவரி 1 என்று முடிவான பிறகுதான், டிசம்பர் 31 என்பது ஆண்டின் இறுதி நாளாகத் தானாகவே அமைந்தது.
போப் செய்த திருத்தம்!
சீசரின் கணக்கு நன்றாக இருந்தாலும், அதிலும் ஒரு சிறிய பிழை இருந்தது. நூற்றாண்டுகள் செல்லச் செல்ல, பருவக்காலங்களில் சுமார் 10 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டது. இதைச் சரிசெய்ய, 1582-ம் ஆண்டு போப் கிரிகோரி XIII என்பவர், லீப் வருடக் கணக்கீட்டில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். இதுவே இன்று நாம் பயன்படுத்தும் 'கிரிகோரியன் காலண்டர்'. இந்த முறை மிகத் துல்லியமாக இருந்ததால், காலப்போக்கில் உலகம் முழுவதும் வர்த்தகம் மற்றும் பயண வசதிக்காக இதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது.
எனவே, இன்று நாம் கொண்டாடும் புத்தாண்டு என்பது அறிவியல் ரீதியான ஒரு முடிவை விட, மனிதர்கள் தங்கள் வசதிக்காக உருவாக்கிக்கொண்ட ஒரு கட்டமைப்பே ஆகும். அன்றைய பேரரசர்களும், மத குருமார்களும் எடுத்த முடிவின் விளைவாகவே, இன்று உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் டிசம்பர் 31-ம் தேதியை ஆண்டின் நிறைவு நாளாகக் கொண்டாடி வருகிறோம்.