
தற்போது பெரும்பாலான வீடுகளில் தரை, சமையலறை, கழிப்பறை, அழகுக்காக என டைல்ஸின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அனைவரையும் கவரும் வகையில் விதவிதமான வண்ணங்களிலும் வடிவங்களிலும் இருக்கும் செராமிக் பொருட்கள் குஜராத் மாநிலத்தின் சிறிய நகரான மார்பி நகரத்தில் தான் 80% உற்பத்தி செய்யப்படுகிறது. இதனாலேயே இது 'இந்தியாவின் செராமிக் நகரம்' என அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் செராமிக் சந்தையை தனது கைக்குள் வைத்திருக்கும் மார்பி நகரத்தில் சுமார் 90% குடும்பம் டைல்ஸ் மற்றும் செராமிக் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் இவர்கள் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளனர்.
சர்வதேச அளவில் செராமிக் மற்றும் டைல்ஸ் விற்பனையில் சீனாவுடன் போட்டி போட்டுக்கொண்டு உலகிற்கே தரமான டைல்ஸ்கள் மற்றும் செராமிக் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.1930 களில் மார்பி நகரத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட செராமிக் மற்றும் டைல்ஸ் உற்பத்தி ஆலைகள் இன்று நாட்டிற்கே முன்னோடியாக விளங்குகின்றன.
சுமார் 900 செராமிக் உற்பத்தியாளர்கள் மார்பி நகரில் இருக்கின்றனர். இங்கு வணிக வளாகங்களில் பயன்படுத்தக்கூடிய டைல்ஸ்கள், சுவற்றில் ஒட்டப்படும் டைல்ஸ், தரைக்கு பயன்படும் டைல்ஸ், சமையலறை, அலுவலகங்களில் பயன்படும் டைல்ஸ் என அனைத்து செராமிக் வகைகளும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப ஆர்டர்களில் வடிவமைக்கப்படுகிறது.
காலத்திற்கேற்ப அடுத்தடுத்த தலைமுறைகள் விரும்பும் புதிய வடிவமைப்புகளில் டைல்ஸ்கள் வடிவமைப்பதால் தான் இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த தொழிலில் நீடித்து நிலைக்க காரணமாக இருக்கிறது. இங்குள்ள மக்களுக்கு குடும்பத் தொழிலாக இது இருப்பதால் உலகிலேயே தரம் வாய்ந்த டைல்ஸ்களின் உற்பத்தியில் குஜராத்தின் மார்பின் நகரம் தன்னிகரற்று விளங்குகிறது.
மேலும், இந்தப் பகுதியில் டைல்ஸ் தயாரிப்பதற்கு தேவையான உயர்தர மணல் மற்றும் மூலதன பொருட்கள் மிக எளிதாகவும் தரமானதாகும் கிடைப்பதால், டைல்ஸ் உற்பத்திக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாநில அரசு ஏற்படுத்தி தந்துள்ளதோடு ஆலைகளை நிறுவ நிதியுதவிகளையும் செய்கிறது.
மார்பி நகரத்தை பொருத்தவரை அகமதாபாத், ராஜ்கோட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுடன் எளிதாக போக்குவரத்து வசதி கொண்டிருப்பதால், தொழில் வளர்ச்சி பெருகி இப்பகுதி மக்கள் கோடிக்கணக்கிலான சொத்துகளுக்கு உரிமையாளர்களாக இருக்கின்றனர்.
ஆனால் அவர்கள் அவற்றை பெரிதளவில் வெளியில் காட்டிக் கொள்வது இல்லை. இங்கிருக்கும் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் செராமிக் தொழிலில் ஈடுபட்டுள்ளதால் தெருவுக்குத் தெரு கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு கிட்டதட்ட நான்கு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
காலத்திற்கேற்ற மாற்றமும், தொழில் நேர்த்தியும் இருந்தால் எக்காலத்திலும் அந்தத் தொழில் நிலைத்து நிற்கும் என்பதற்கு இந்த 'செராமிக் நகரம்' சான்றாக உள்ளது.