நவீன கால சமையலறைகளில் நான் ஸ்டிக் பாத்திரங்கள் இன்றியமையாத அங்கம் வகிக்கின்றன. இதில் உணவு ஒட்டாமல் இருப்பதால், சமையல் எளிதாகி, பாத்திரங்களை சுத்தம் செய்வதும் எளிமையாகிறது. ஆனால், இந்த நன்மைகளுடன் சில சந்தேகங்களும் எழுகின்றன. நான்ஸ்டிக் பூச்சு உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா? எந்த வகையான நான் ஸ்டிக் பூச்சு பாதுகாப்பானது? இந்த கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
நான்-ஸ்டிக் பூச்சு என்றால் என்ன?
நான்ஸ்டிக் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் பூச்சு பொதுவாக Teflon அல்லது பாலி டெட்ரா ப்ளுரோ எத்திலின் (PTFE) என்ற வேதிப்பொருளால் ஆனது. இந்த பூச்சு பாத்திரத்தின் மேற்பரப்பில் ஒரு மெல்லிய அடுக்கை உருவாக்கி உணவு ஒட்டாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
நான்ஸ்டிக் பாத்திரங்களில் உணவு ஒட்டாமல் இருப்பதால் சமையல் எளிதாகி, குறைந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இதனால் பாத்திரங்களை எளிதாக சுத்தம் செய்துவிடலாம். இதன் மூலமாக பல்வேறு விதமான உணவுகளை இந்த பாத்திரத்தில் எளிதாக சமைக்க முடியும்.
இதன் தீமைகள் என்று பார்க்கும்போது அதிகப்படியான வெப்ப நிலையில் நான் ஸ்டிக் பூச்சு சிதைந்து நச்சுப் பொருட்களை வெளியிடலாம். இவை உணவுப் பொருட்களில் கலந்து, உடலுக்கு பாதகம் விளைவிக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நான் ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தும்போது அதன் மேற்பூச்சு உரிந்து போகலாம். எனவே, நான் ஸ்டிக் பாத்திரங்களை மிதமான வெப்ப நிலையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த பாத்திரங்களில் எண்ணெய் அல்லது நீர் இல்லாமல் அதிக சூடுபடுத்த வேண்டாம்.
உலோகக் கரண்டிகள் அதன் மேற்பூச்சை சேதப்படுத்தி, ஆபத்தை உண்டாக்கும். ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் பாத்திரத்தில் பூச்சு சேதமடைந்து இருந்தால் அதை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். பாத்திரங்களை மென்மையான துணியை பயன்படுத்தி சுத்தம் செய்யவும்.
மாற்று பாத்திரங்கள்:
நான் ஸ்டிக் பாத்திரங்களுக்கு பதிலாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் சிறந்த மாற்றாக அமையும். இவை நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டவை என்பதால், பல்வேறு வகையான சமையலுக்கு ஏற்றதாக இருக்கும். அதேபோல, இரும்பு பாத்திரங்களும் நீண்ட காலம் உழைக்கும். அல்லது, செராமிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவது உடல் நலத்திற்கு பாதுகாப்பானவை.
என்னதான் நான் ஸ்டிக் பாத்திரங்கள் சமையலை எளிதாக்கினாலும் அவற்றை பாதுகாப்பாக பயன்படுத்துவது முக்கிய. வெப்பநிலையை தவிர்த்து, சேதமடைந்த பாத்திரங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் அவசியம். நீங்கள் நீண்ட காலம் சமையல் பாத்திரங்களை பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால் நான் ஸ்டிக் பாத்திரங்கள் உங்களுக்கு ஒத்து வராது.