ராஜஸ்தானின் புகழ்பெற்ற சாரி நடனம்: நெருப்புப் பானைகளுடன் பெண்கள் ஆடும் மாயாஜால கலை!

Rajasthan Folk Dance - சாரி நடனம்
Rajasthan Folk Dance - சாரி நடனம்AI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சாரி டான்ஸ் என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆடப்படும் ஒரு புகழ்பெற்ற பாரம்பரிய நாட்டுப்புற நடனமாகும். கிராமப்புற பெண்கள் தினமும் தண்ணீர் சேகரிக்கும் முறையை மையமாகக் கொண்டு, மகிழ்ச்சியையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த நடனம் நிகழ்த்தப்படுகிறது.

சாரி நடனத்தின் சிறப்பம்சங்கள்:

நடனக் கலைஞர்கள் தங்கள் தலையில் 'சாரி' எனப்படும் பித்தளை அல்லது மண் பானைகளை வைத்து சமநிலைப்படுத்தி ஆடுவார்கள். பானையின் மீது எரியும் தியா எனப்படும் எண்ணை விளக்கு அல்லது எண்ணெயில் நனைத்த பருத்தி விதைகளை வைத்து தீப்பிழம்புகளுடன் இந்த நடனம் ஆடப்படுகிறது. தலையில் பானைகளுடன், கை கால்களின் அழகிய அசைவுகளையும் முழங்கால்களால் சுழன்று சுழல் போன்று நடனம் ஆடுவது மக்களை வெகுவாக ஈர்க்கிறது.

மங்களகரமான விழாக்களில் ஒளிரும் சாரி நடனம் மற்றும் அதன் சிறப்பம்சங்கள்:

ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மற்றும் கிஷன்கர் பகுதிகளில் வசிக்கும் குர்ஜார் (Gurjar) சமூகத்தைச் சேர்ந்த பெண்களால் இந்த நடனம் பிரதானமாக ஆடப்படுகிறது. திருமணம், ஆண் குழந்தை பிறப்பு மற்றும் பண்டிகைக் காலங்களில் இந்த நடனம் மிகவும் பிரபலம். குறிப்பாக திருமணங்களில் மணமகளின் தாயார் மாப்பிள்ளையை வரவேற்கும் பொழுது இந்த நடனத்தை நிகழ்த்துவது, ஒரு மங்களகரமான சடங்காகக் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மேட்ரியோஷ்கா பொம்மைகள், ரஷ்ய பாலே, வெங்காயக் கோபுரங்கள்: ரஷ்யாவின் காலத்தால் அழியாத கலை மரபு!
Rajasthan Folk Dance - சாரி நடனம்

டோலக், நாகடா, ஹார்மோனியம், பாங்கியா மற்றும் மஞ்ஜிரா போன்ற பாரம்பரிய இசைக்கருவிகள் இதற்கு பயன்படுத்தப் படுகின்றன. பெண்கள் பிரகாசமான ராஜஸ்தானி பாரம்பரிய ஆடைகளான காக்ரா-சோலி அணிந்து, கனமான பாரம்பரிய நகைகளுடன் கண்கவர் ஒளிரும் வடிவங்களை உருவாக்கி ஆடுவார்கள்.

இவர்கள் இந்த பாரம்பரியக் கலையை பாதுகாப்பது மட்டுமல்லாமல், நவீன பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு அதை மாற்றியமைத்து பாரம்பரியத்தையும் இன்றைய கவர்ச்சியையும் ஒருங்கே கொண்ட ஒரு சரியான கலவையாக நிகழ்த்துகிறார்கள். நுணுக்கமான நடன அமைப்பு, பல வண்ண ஆடைகள் மற்றும் பாரம்பரிய இசைக்கருவிகளின் தாள ஒலிகள் ஆகியவை பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்கிறன.

ராஜஸ்தான் ஒரு பாலைவனமாகும். அங்கு பெண்கள் தண்ணீரை சேகரிப்பதற்கு பல மைல்கள் நடந்து செல்கின்றனர். அவர்கள் தினசரி தண்ணீரை ஜாரி என்று அழைக்கப்படும் பானைகளில் சேகரிக்கின்றனர். நீர் சேகரிக்கும் இந்த வாழ்நாள் சடங்கை நடனம் மூலமாக கொண்டாடுகிறார்கள்.

Rajasthan Folk Dance - சாரி நடனம்
Rajasthan Folk Dance - சாரி நடனம்AI Image

24 கிலோ எடையைச் சுமந்து சாரி நடனம் மூலம் படைக்கப்பட்ட உலக சாதனை:

அக்டோபர் மாதம் 2024 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள ஜவஹர் கலா கேந்திராவில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற ராஜஸ்தானி நாட்டுப்புற மற்றும் பவாய் கலைஞரான சூர்யவர்தன் திராவத் சிங் என்பவர் 24 கிலோ எடை கொண்ட 7 எஃகுப் பானைகளை (சாரிகள்) ஒரே நேரத்தில் தண்ணீர்க் குவளையின் மீது சமநிலைப்படுத்தியபடி 30 நிமிடங்கள் இந்த பாரம்பரிய நடனத்தை ஆடி உலக சாதனையைப் படைத்தார்.

பவாய் நடனத்தைப் போலவே சாரி நடனத்திலும் பித்தளைப் பானைகளை தலையில் சுமந்து ஆடுவார்கள். ஆனால் இந்த நடனத்தில் அந்த பானைகளில் தீபங்கள் ஏற்றப்பட்டிருக்கும். நடனக் கலைஞர்கள் பானைகளைத் திறமையாக சமநிலைப்படுத்தியபடியே சுழலும்பொழுது தங்கள் இடுப்பை அசைத்தும், கைகளால் அசைவுகளைச் செய்தும் நளினமாக ஆடுவார்கள்.

காட்சி அழகை மேம்படுத்துவதற்காக இந்த நடனம் பெரும்பாலும் இரவு நேரங்களில் நிகழ்த்தப்படும். காரணம் ஒளிரும் பானைகளும் விளக்குகளும் இருளில் பிரமிக்க வைக்கும் தோற்றத்தைத்தரும். நடன கலைஞர்கள் தரை முழுவதும் நளினமாக நகரும்பொழுது, அவர்கள் ஒளியூட்டப்பட்ட கோலங்களை உருவாக்கி, அதனை மாயாஜாலமாகத் தோற்றமளிக்க செய்கிறார்கள்.

கிஷன்கர் மற்றும் அஜ்மீர் பகுதிகளில் வசிக்கும் குஜ்ஜர் மற்றும் சைனி சமூகப் பெண்களின் திறமை, பாரம்பரியம் மற்றும் கலை வெளிப்பாட்டை இந்த சாரி நடனம் மிக அழகாக வெளிக்கொணர்கிறது.

இந்தியாவின் மிகவும் சவாலான மற்றும் கண்கவர் நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றான சாரி நடனத்தின் கலாச்சார முக்கியத்துவம், அதை நிகழ்த்தும் சமூகங்களின் பாரம்பரியம் மற்றும் அதன் சமகால உலக சாதனை நிகழ்வுகள் குறித்த முழுமையான நளினத்தையும் நுணுக்கங்களையும் நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com