சுதந்திர இந்தியாவின் முதல் குரல் முதல் ஆட்டோமொபைல் ஹப் வரை: சென்னையின் பிரம்மாண்ட வரலாறு!

ஆகஸ்ட் 22 சென்னை தினம்!
சென்னை வரலாறு - Madras Mahajana Sabha
சென்னை வரலாறு - Madras Mahajana Sabha
Updated on

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் நிலத்தை கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்ட் பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோமான் 1639 ம் ஆண்டு ஆகஸ்ட் 22 ல்வாங்கினர். அந்த இடத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டி சென்னை நகரம், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி நிறுவனத்தின் பிரான்சிஸ் டே என்பவரால் நிறுவப்பட்டது.அதன் நினைவாக ஆகஸ்ட் 22 சென்னை தினம் கொண்டாடப் படுகிறது.

சென்னை வரலாறு:

இந்தியாவில் முதலில் நிறுவப்பட்ட வங்கி மெட்ராஸ் வங்கி ஆகும். இந்த வங்கி 1683ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது. பிரிட்டிஷ் வர்த்தகர்களும் கிழக்கிந்திய கம்பெனியும் மேற்கொண்ட வர்த்தக தேவைகளை நிறைவேற்று வதற்காக இது உருவாக்கப்பட்டது.

வங்கிகளில் மிகவும் பழமையானது இந்த மெட்ராஸ் வங்கி (The Madras Bank). பல மாற்றங்களுக்குப் பிறகு இன்று இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) ஆக உருவெடுத்துள்ளது.

1876 ம் ஆண்டு சென்னையில் கடுமையான பஞ்சம் அப்போதைய கவர்னர் "பக்கிங்காம்" என்பவர் கூவம் ஆற்றையும், அடையாற்றையும் இணைக்க கால்வாய் ஒன்றை வெட்ட நினைத்தார். மக்களுக்கு வேலையும் கொடுத்தார். அவர் நினைவாக இக் கால்வாய் பக்கிங்காம் கால்வாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர் கால்வாய் விரிவுபடுத்தப்பட்டது போக்குவரத்துக்கும் பயன்பட்டது.

'பக்கிங்ஹாம் கால்வாய்’ ஒருகாலத்தில் சென்னையின் பிரதான போக்குவரத்து மையமாக இருந்தது. இந்த கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடாவில் இருந்து தமிழகத்தின் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை வரை செல்கிறது. உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோமீட்டர்கள். உலகிலேயே ஒரே இடத்தில் நீர்வழி, நிலவழி, ரயில்வழிப் பாதை அமைக்கப்பட்ட முதல் இடம் என்ற வரலாற்று பெருமையும் இதற்கு உண்டு .

" என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" என்ற பாடலை 'இந்தியா' பத்திரிகையில் பாரதியார் வெளியிட்டார். இதன் அரங்கேற்றம் சென்னை மூர் மார்க்கெட்டில் 1908 ம் ஆண்டு நடைபெற்றது. அப்பாடலுக்கு பிரிட்டிஷ் அரசு பாரதிக்கு தந்த பரிசு என்ன தெரியுமா? ஐந்து வருட கடுங்காவல் தண்டனை.

இதையும் படியுங்கள்:
தண்ணீருக்கு அடியில் இருந்து வெளிவந்த 'மரண ரயில்வே' ரகசியம்: தாய்லாந்தில் தமிழர்களின் ரத்த வரலாறு!
சென்னை வரலாறு - Madras Mahajana Sabha

1884ம் ஆண்டில் பி. அனந்தாச்சார்லு, ஜி. சுப்பிரமணிய ஐயர் ஆகியோரால் சென்னை மகாஜன சபை தோற்றுவிக்கப்பட்டது. படித்த நடுத்தட்டு மக்களின் அரசியல் கருத்துக்களை ஒருங்கிணைக்கவும், சிவில் உரிமைகளை நிலைநிறுத்தவும் இந்த அமைப்பு முயன்றது. அதே ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், அடையாரில் நடைபெற்ற பிரம்மஞான சபையின் ஆண்டு மாநாட்டைத் தொடர்ந்து, திவான் பகதூர் ரகுநாத ராவின் மயிலாப்பூர் இல்லத்தில் "17 நபர்கள்" பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில்தான் அகில இந்திய அளவிலான அரசியல் இயக்கத்தை உருவாக்குவதற்கான வரைபடத்தைத் தயாரித்தனர். இந்தச் சென்னை முன்னெடுப்புதான், 1885-ல், இந்திய தேசிய காங்கிரஸ் உருவாவதற்கு நேரடிப் பாதையாக அமைந்தது.

1947 ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி நள்ளிரவு 12 மணி. இந்தியா எங்கும் ஒரே கொண்டாட்டம். சென்னையில் எங்கு பார்த்தாலும் மாவிலைத் தோரணம். மக்கள் ஆடிப்பாடி ஆரவாரித்து சுதந்திரத்தை வரவேற்றனர். ஆல் இந்தியா ரேடியோவில், 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று' என்ற மகாகவி பாரதியாரின் தீர்க்கதரிசனப் பாடல் இனிமையாக ஒலித்தது. பாடியவர் டி.கே.பட்டம்மாள் என்று பிரபலமான தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள்!

நிலைய டைரக்டராக இருந்த கோபாலன் அவருக்கு சன்மானமாக ஒரு செக்கை அளித்தபோது அதை வாங்க மறுத்த டி.கே.பட்டம்மாள். “விடுதலை கிடைத்ததற்கு காசு வாங்கினால் அது அபசாரம்” என்று கூறிவிட்டார்.

சென்னை வரலாறு - Madras Mahajana Sabha
சென்னை வரலாறு - Madras Mahajana SabhaImage credit - Gemini

புகழ்பெற்ற புத்தகக் கடையான ஹக்கின்பாதம் சென்னை மவுண்ட் ரோட்டில் 1884 ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதனை நிறுவியவர் 'அபேல் ஜோஸ்வா ஹக்கின் பாதம்ஸ்' இவர் சென்னை 'செரீப்பாக' 1888 ம் ஆண்டு முதல் 1889 வரை பதவி வகித்தார். இந்த வரிசையில் பல கடைகள் இருந்தாலும், முதன் முதலாக துவக்கப்பட்டதும், மிகவும் பழமையானதும் சென்னை ஹக்கிம்பாதம்ஸ்தான்.

இங்கு ஒரு முறை இங்கிலாந்து நாட்டின் பிரிட்டிஷ் பிரதமர் 'கிளமண்ட் அட்லி' விஜயம் செய்து பெருமை படுத்தியுள்ளார். ராஜாஜி, அண்ணாதுரை, லால்பகதூர் சாஸ்திரி, மைசூர் மகாராஜா, அப்துல் கலாம் போன்றவர்கள் இதன் வாடிக்கையாளர்கள்.

இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் பாதை மும்பையில் உள்ள போர் பந்தர் முதல் தானே வரை அமைக்கப்பட்டது. இந்த 34 கி.மீ தூர ரயில் பாதை 1853, ஏப்ரல் 16-ஆம் தேதி மக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. இருப்பினும், சரக்கு போக்குவரத்திற்காக இந்தியாவில் முதன்முதலில் அமைக்கப்பட்ட ரயில் பாதை சென்னையில் உள்ள செங்குன்றம் ஏரி முதல் சிந்தாதிரிப்பேட்டை பாலம் வரை 1837-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் வட்டப்பாதை ரயில் திட்டம் (Circular Railway) என்பது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நீண்டகாலமாக பயன்பாட்டில் உள்ள ஒரு ரயில் திட்டம். சென்னை புறநகர் ரயில்வே வலையமைப்பு, இந்தியாவின் மிக நீண்ட (232.5 கி.மீ) வட்ட ரயில் பாதையைக் கொண்டுள்ளது. இந்தியாவிலேயே மிக நீண்ட வட்ட ரயில் பாதையான இது சென்னை கடற்கரை, எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய முக்கிய பகுதிகளை இணைத்துச் செயல்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுடன் இயற்கையை ரசிக்க இதோ சில 'அட்வென்ச்சர்' இடங்கள்!
சென்னை வரலாறு - Madras Mahajana Sabha

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உற்பத்தியாகும் கார்களில் 50 சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை. அதேபோல மொத்த சரக்கு வாகனங்களில் 33 சதவீத சரக்கு வாகனங்கள் சென்னையில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பயணிகள் வாகனங்களில் 21% வாகனங்கள் சென்னையில்தான் தயாரிக்கப்படுகின்றன. வாகன உதிரி பாகங்களை பொருத்தவரை 35 சதவீத பாகங்களை தமிழ்நாடு தான் உற்பத்தி செய்து மற்ற பகுதிகளுக்கு வழங்குகிறது . மின்சார வாகன உற்பத்தியிலும் சென்னையின் பங்கு 35 சதவீதமாக இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com