தேசியத்தையும் தெய்வீகத்தையும் காக்கும் சிதம்பரம் நடராஜர் கோயில்!

தேசியக்கொடி ஏற்றப்படும் சிதம்பரம் கோயில்
தேசியக்கொடி ஏற்றப்படும் சிதம்பரம் கோயில்
Published on

ந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாட நம் நாடே தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் பல புகழ் பெற்ற ஆலயங்கள் உண்டு. ஆனால், அங்கெல்லாம் நடக்காத ஒரு அற்புத நிகழ்வு, இந்திய சுதந்திர தினத்தன்று நம் தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெறுகிறது. அது என்ன என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

சிதம்பரம் நடராஜர் கோயில் உலகப் புகழ் பெற்றது. பல சிறப்புகள் வாய்ந்தது. நம் நாடு சுதந்திரம் அடைந்து (1947) முதல் சுதந்திர தினத்தைக் கொண்டாடியபொழுதும் முதல் குடியரசு தினத்திலிருந்தும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள 152 அடி உயரம் கொண்ட கிழக்கு கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது. அதற்கு முன் இக்கோயிலைப் பற்றிய சுருக்கமாக சிறப்புகளைப் பார்ப்போம்.

சிதம்பரம் நடராஜர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இது காவிரி வடகரை சோழ நாட்டுத் சிவ தலங்களில் ஒன்றாகும். இந்தக் கோயில் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் காலையில் முதல் கால பூஜை முடிந்த பிறகு கனக சபையில் நடராஜர் பாதத்திற்குக் கீழ்  தேசியக் கொடியை வெள்ளி தட்டில் வைத்து தீட்சிதர்கள் சிறப்பு வழிபாடு செய்வார்கள். நாட்டின் நலனுக்காகவும் மக்கள் நோய் நொடியின்றி வாழவும் இந்த பூஜை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. பின்னர் மேள தாளம் முழங்க தேசியக் கொடியை ஊர்வலமாகக் கொண்டு வந்து 152 அடி உயரம் உள்ள கிழக்கு சன்னிதி கோபுரத்தில் அந்த தேசியக் கொடியை தீட்சிதர்கள் ஏற்றுவார்கள். பின்னர் அங்கு இருக்கும் பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பிப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
நாளை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைப்புத்தரிசி பூஜை!
தேசியக்கொடி ஏற்றப்படும் சிதம்பரம் கோயில்

தேசியக் கொடி ஏற்றும் நடைமுறை என்பது இந்திய அளவில் வேறு எந்த கோயிலிலும் நடைபெறாத ஒரு நிகழ்வு. சிதம்பரம் நடராஜர் கோயிலில் மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. காலையில் ஏற்றப்படும் தேசியக் கொடியை மாலையில் இறக்கி வைத்து விடுவார்கள். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கூறியது போல், தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள். அதை இக்கோயிலில் காணலாம். இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று இந்த அற்புத நிகழ்வைக் காண உங்களுக்கு வாய்ப்பு கிடைப்பின் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள நீங்களும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு வரலாமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com