நாளை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைப்புத்தரிசி பூஜை!

நிறைப்புத்தரிசி பூஜை
நிறைப்புத்தரிசி பூஜை
Published on

விவசாயம் செழிக்கவும், மக்களின் வறுமை நீங்கவும், உலக மக்களின் பசி. பஞ்சம் தீரவும் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும் நிறைப்புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் நிறைப்புத்தரிசி பூஜை நாளை ஆகஸ்ட் 12 அன்று நடைபெற உள்ளது. இந்த பூஜைக்கான நெற்கதிர்கள் இன்று காலை கேரள மாநிலம் அச்சன் கோயிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

அச்சன் கோயிலில் இருந்து காலை 5 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட திருவாபரணப் பெட்டி வாகனத்தில் நிறைப்புத்தரிசி நெற்கதிர்கள் ஏற்றப்பட்டு சபரிமலைக்கு ஊர்வலம் தொடங்கியது. காலை ஆறு மணி அளவில் செங்கோட்டை விரைவு பேருந்து பணிமனை பகுதியில் நிறைப் புத்தரிசி ஊர்வலத்திற்கு திரு ஆபரண பெட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, கோட்டைவாசல் கருப்பசாமி கோயில் வழியாக ஆரியங்காவு ஐயப்பன் கோயில், புனலூர் கிருஷ்ணன் கோயில், பத்தினம் திட்டா, நிலக்கல் உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்கள் ஆகியவற்றின் சார்பாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஊர்வலம் செல்லும் வழியில் 36 கோயில்களுக்கு நிறைப்புத்தரிசி நெற்கதிர்கள் வழங்கப்படும். மாலை நாலு மணிக்கு இந்த ஊர்வலம் பம்பை சென்றடைகிறது.

அங்கு கணபதி கோயிலில் நெற்கதிர்களுக்கு பூஜை நடைபெறுகிறது. நெற்கதிர்களை கொண்டு செல்வதற்காக விரதம் இருந்து வரும் 54 பக்தர்கள் பம்பையில் இருந்து 54 நெற்கதிர் கட்டுகளை சன்னிதானத்திற்குக் கொண்டு செல்வார்கள்.

இதையும் படியுங்கள்:
சோலார் எனர்ஜியால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
நிறைப்புத்தரிசி பூஜை

இதனைத் தொடர்ந்து நாளை அதிகாலை 4 மணிக்கு சுவாமி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனத்திற்கு பிறகு நெற்கதிர்களுக்கு பூஜை செய்யப்பட்டு கருவறை உள்ளே கொண்டு சென்று அடுக்கப்படும். பிறகு 5.45 மணி முதல் 6.30 மணி வரை நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அதையடுத்து நிறைப்புத்தரிசி நெற்கதிர்கள் கைக்குத்தல் மூலம் அரிசி ஆக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு அரிசி பாயசம் நெய்வேத்தியம் செய்து  படைக்கப்படும். பிறகு பக்தர்களுக்கு அந்தப் பிரசாதம் விநியோகிக்கப்படும். இதுவே சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைப்புத்தரிசி பூஜை என்று அழைக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com