இந்திய ஓவியக்கலையின் பெருமையினைக் கூறும் சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்!

சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்
சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்https://dheivegam.com

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் வரலாற்றுச் சின்னங்கள் உலகப் புகழ் பெற்றவை. புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் செல்லும் சாலையில் 17 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இந்தக் குகை ஓவியங்கள் மற்றும் சமணர் படுக்கைகள் இருந்து வருகின்றன.

தென்னக ஓவியக் கலைகளின் முன்னோடியாக இருப்பது சித்தன்னவாசல் குகை ஓவியங்கள். கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைக்கால பாண்டியர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட குடைவரை ஓவியங்கள் இன்றும் இங்கு காணப்படுகின்றன.

‘சித்தன்ன கிரி வாசல்’ என்ற பெயரிலும், ‘சிறிய அன்னல் வாழிடம்’ என்ற பெயரிலும் பண்டைய காலத்தில் இது அழைக்கப்பட்டிருக்கிறது. குகையை குடைந்தெடுக்க நூற்றாண்டு காலம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன் பின் ஆட்சி புரிந்த மன்னர்கள் காலத்தில் ஓவியங்கள் வரையப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பாறைகளுக்கு மேல் சுண்ணாம்பு பூசப்பட்டு சுண்ணாம்பு காய்ந்து போவதற்குள் இயற்கை மூலிகை சாயங்களால் தீட்டப்பட்ட சுதை ஓவியங்களாக இவை உள்ளன. முதலில் களி மண்ணும் அதன் மேல் சுண்ணாம்பும் அதற்கு மேலாக பல அடுக்குகளால் பூசப்பட்ட சாயங்களும் கொண்டு இவை வரையப்பட்டுள்ளன.

அன்னப்பறவைகள், தாமரை மலர்கள், மகர மீன்கள், சமண துறவிகள், யானை, அன்றில் பறவைகள் இரு தூண்களிலும் நடன மங்கையர், மன்னர் என அங்குக் காணப்படுகின்றன. இங்கே ஒரு தியான மண்டபமும் குடையப்பட்டிருக்கிறது. யானை மண்டபத்திற்குள் ஐம்புலன்களையும் அடக்கி சிந்தனையை ஒரு நிலைப்படுத்தி தியான நிலை அடையும்போது அதிர்வையில் இருந்து ஒலி எழுகிறது.

மூலிகைகளினால் வரையப்பட்ட ஓவியங்கள் நிறைந்து காணப்படும் இப்பகுதி தென்னிந்தியாவின் அஜந்தா குகை என்று போற்றப்படுகிறது. சித்தன்னவாசல் ஓவியங்கள் ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான மகேந்திர வர்மனால் வரையப்பட்டவை என்று சொல்லப்படுகிறது. அவருக்கு, ‘சித்திரக்கார புலி’ என்ற அடைமொழியும் உள்ளது. சமண முனிவர்கள் இந்தக் குகையில் கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை தங்கியிருந்தனர் என்பதற்கு இங்கு உள்ள கல்வெட்டுகளில் ஆதாரங்களில் இருக்கின்றன. பல்லவர் கால தமிழகம் ஓவியக்கலையிலும் சிற்பக்கலையிலும் தேர்ச்சி அடைந்து காணப்பட்டது. அதன் வரலாற்றுச் சிறப்பை இங்கு இருக்கும் ஓவியங்கள் பறைசாற்றி காட்டுகின்றன.

இங்குள்ள குன்றின் நடுவில் கிழக்கு முகத்தில் அமைந்திருக்கும் இயற்கையான குகையின் பெயர்தான் ‘ஏழடி பட்டம்.’ ஆரவார உலகை வெறுத்து அமைதியை நாடிய சமண முனிவர்கள் தங்கி இருந்த இடமாகும் இது. இந்த இயற்கை குகையில் வழவழப்பான தலையணை போன்ற அமைப்புடன் கூடிய 17 கற்படுக்கைகளைக் காணலாம். இதில் மிகப்பெரிய பழைமையான படுக்கையில் தமிழ் கல்வெட்டு ஒன்று தமிழ் பிராமி எழுத்தால் பொறிக்கப்பட்டுள்ளது.

குன்றின் மீது ஏறி குகையின் வாயிலில் உள்ள ஏழு படிக்கட்டுகளைக் கடந்து குகையினுள் நுழைவதால் இந்த இடம் ‘ஏழடி பட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.

குகை கோயிலில் 160 சதுர அடி அளவுள்ள முக மண்டபமும் அதை அடுத்து 100 சதுர அடி அளவு உள்ள சிறிய கருவறையும் உள்ளன. மேல் விதானத்திலுள்ள ஓவியம் ஒரு தாமரை குளத்தைக் காட்டுகிறது. அதில் தாமரை மலர்களும் மலராத மொட்டுக்களும் சிவன் பக்தர்கள் ஆகிய சமணப் பெரியோர்களும் காட்சி அளிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் பாணி பூரி பிரியரா? உஷார் மக்களே உஷார்!
சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்

அங்கிருக்கும் இடது பக்க தூணில் நடன மங்கையின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. வலது பக்க தூணில் நடன மங்கையின் இடது கை துதிக்கை போல் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் பறவைகள், மீன்கள் எருமைகள், யானை என பல உயிர்கள் அழகாகவும் உயிரோட்டமாகவும் வரையப்பட்டுள்ளன. இரண்டு சமணர்கள் கைகளால் தாமரை மலர்களைப் பிடித்துக் கொண்டு குளத்தின் அழகை ரசிப்பது போல் ஒரு ஓவியமும் காண்போரின் கவனம் முழுவதையும் ஈர்த்து தன்வசப்படுத்தும் விதத்தில் அழகாய் காட்சி அளிக்கிறது. இவை தமிழர்களின் கலை பண்பாட்டினை பறைசாற்றும் உயிரோட்டமுள்ள ஓவியங்களாகத் திகழ்கின்றன. நடு மண்டபத்தை அடுத்து இருக்கும் கோயிலின் வலப்பக்கமும் இடப்பக்கமும் சமண தீர்த்தங்கரர் சிலையும் சமணத் தலைவர் சிலையும் இருக்கின்றன.

தமிழகத்தில் உள்ள சித்தன்னவாசல் ஓவியங்கள் இந்திய ஓவியக்கலையின் பெருமையினை உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com