திருமண ஊர்வலங்களில் வாள் நடனமா? உத்தரகாண்ட் பஹாடி மக்களின் 'சோலியா' நடனக் கலை!

choliya-folk-dance
choliya-folk-dance
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

சோலியா நடனம் என்பது உத்தரகாண்ட் மாநிலத்தின் குமாவோன் (Kumaon) பகுதியில் இருந்து உருவான பாரம்பரிய நாட்டுப்புற நடன வடிவமாகும். இது முக்கியமாக திருமண ஊர்வலங்களின் போதும், பிற மங்களகரமான நிகழ்வுகளின் போதும் நிகழ்த்தப்படும் ஒரு தற்காப்பு வாள் நடனம் ஆகும். இந்த கலை வடிவத்தை நிகழ்த்துபவர்கள் சாலியாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சாலியா நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்கத் தடை செய்யப்பட்டுள்ளதால் ஒரு கலைஞர் பெண் வேடமிட்டு பெண்ணின் பாத்திரத்தை ஏற்கிறார். 

உத்தரகாண்டில் பாரம்பரிய நாட்டுப்புற நடனங்களின் நீண்ட பட்டியல் இருந்தாலும் சோஃவியா நடனம் என்பது மிகவும் பழமையானது மற்றும் வரலாற்று சிறப்புமிக்கது. உத்தரகாண்டின் கலாச்சார அடையாளமாக இருந்து வரும் இந்த நடனம் குமாவோன் பிரிவின் பித்தோராகர், சம்பாவத், பாகேஷ்வர் மற்றும் அல்மோரா மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகிறது.

குமாவோனி பழங்குடியினரின் தற்காப்புக் கலையான இந்த வாள் நடனம் கேடயங்கள், தூரி மற்றும் ரான்சிங் உள்ளிட்ட பிராந்திய பித்தளை இசைக்கருவிகள் மற்றும் டோல், டமரு போன்ற தாள வாத்தியக் கருவிகளுடன் நடத்தப்படுகிறது. முக்கியமாக ராஜ்புத் திருமணங்களின்போது தீயசக்திகளை விரட்டவும், நல்வாழ்வை வேண்டியும் இந்த நடனம் ஆடப்படுகிறது. 'சோலியா' என்ற சொல் மற்றவர்களை ஏமாற்றுபவர் அல்லது தந்திரமாக ஏமாற்றுபவர் என்று பொருள்படும்.

இது 'சாலியா' என்ற வார்த்தையிலிருந்து உருவானது. இது தற்காப்பு கலைகளைப் போன்றது. அதில் எதிரிகளை தாக்குவதற்கு முன்பு அவர்களை ஏமாற்ற தந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கலை வடிவமாக, சோலியா நடனத்தையும் தற்காப்புக் கலைகளையும் இந்த நடனம் ஒன்றிணைக்கிறது.

குமாவோனின் போரிடும் சத்திரியர்களிடமிருந்து தோன்றிய சோலியா சுமார் 1000 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டது. ராஜ்புத் போர் வீரர்களின் தற்காப்பு கலை மரபுகளை மையமாகக் கொண்டு உருவானது. நடனக் கலைஞர்கள் வாள் மற்றும் கேடயங்களுடன் போலிச்சண்டையில் ஈடுபடுவதுபோல ஆடுவார்கள். இது எதிரிகளை ஏமாற்றித் தாக்கும் தற்காப்புக் கலையை அடிப்படையாகக் கொண்டது.

கலைஞர்கள் பாரம்பரிய போர்வீரர்களைப்போல உடையணிந்து, சந்தனத்தால் முகத்தை அலங்கரித்துக் கொள்வார்கள். ஹுடகி (Hudki) எனப்படும் சிறிய முரசு மற்றும் மஷக்பீன் (Mashakbeen) எனப்படும் பேக்பைப்பர் போன்ற இசைக்கருவிகள் இந்த நடனத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. வழக்கமாக 22 பேர் கொண்ட குழுவாக (நடனக் கலைஞர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள்) இந்த நடனம் ஆடப்படுகிறது. அவர்களில் 8 பேர் நடன கலைஞர்கள் 14 பேர் இசைக்கலைஞர்கள்.

இதையும் படியுங்கள்:
ஈட்டிகளுடன் பாய்ந்து வரும் குதிரைகள்! நடுங்க வைக்கும் பசோலா திருவிழாவின் பின்னணி!
choliya-folk-dance

சோலியா நடனத்தின் சிறப்பு என்னவென்றால் ஒப்பனையும் வீர ரசமும் ஒரே நேரத்தில் அதில் வெளிப்படும். சோலியா நடனத்தை ஆடும் ஆண்களின் உடைகளில் சுரிதார் பைஜாமாக்கள், நீண்ட இடுப்புக்கச்சையான சோலா அதாவது குர்தா மற்றும் அதன் மேல் அணியப்படும் பெல்ட் ஆகியவை சிறப்பாக வெளிப்படும். இது தவிர நடனக் கலைஞர்கள் தலையில் தலைப்பாகை, காதணிகள், கால்களில் குங்குரூ கட்டுகள், முகத்தில் சந்தனம் குங்குமம் அணிந்து வண்ணமயமாக காட்சி தருகிறார்கள். 'நிஷானா' (பதாகைகள்) என்ற முக்கோண சிவப்புக் கொடியை ஏந்தியபடி வாள்களை அசைத்து போருக்குச் செல்லும் வீரர்களின் தோற்றத்தைத் தருகிறார்கள்.

சோலியா என்பது அதன் மக்களுக்கு ஒரு நாட்டுப்புற நடனத்தை விட மேலானது. அது பஹாடி மக்களின் உள்ளூர் நம்பிக்கையுடன் வெகுவாக  பிணைக்கப் பட்டுள்ளது. திருமணம் அல்லது குழந்தை பிறப்பு போன்ற மங்களகரமான நிகழ்வுகள் தீயசக்திகளால் பாதிக்கப்படக்கூடியவை என்றும், எனவே சோலியா நடனம் எந்தவொரு தீங்கையும் தடுக்க உதவும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com