ஐம்பது வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் சினிமா திரையரங்கங்கள் மற்றும் அதில் திரையிடப்பட்ட காட்சிகள் பற்றி நினைத்துப் பார்க்கும்போது தற்போதைய சினிமாத் துறையின் வளர்ச்சி மற்றும் வசதிகள் பிரமிக்க வைக்கின்றன என்றே சொல்லத் தோன்றுகிறது.
தற்காலத்தில் திரைப்படங்கள் வெளியானால் அதற்கான போஸ்டர்கள் ஊரெங்கும் ஒட்டப்படுகின்றன. அக்காலத்தில் இதற்காக முக்கோண வடிவத்தில் கீழ்ப்பகுதியில் இரண்டு சக்கரங்களோடு ஒரு தள்ளுவண்டி உபயோகத்தில் இருந்தது. வண்டியில் இருபக்கங்களிலும் திரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும். அதை ஒரு மனிதர் ஊரில் உள்ள தெருக்களில் காலை வேளைகளில் தள்ளிக்கொண்டே செல்லுவார். அந்த வண்டியில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களைப் பார்த்து ஊரில் எந்த திரையரங்கில் என்ன படம் ஓடுகிறது என்பதை தெரிந்து கொள்ளுவார்கள். ஒவ்வொரு திரையரங்கிலும் இதற்காக ஒரு பிரத்யேக வண்டியை உருவாக்கி வைத்திருப்பார்கள்.
தற்காலத்தில் ஒரு மல்ட்டி ப்ளக்ஸ் திரையரங்கில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல காட்சிகள் திரையிடப்படுகின்றன. ஆனால், அக்காலத்தில் ஒரு திரையரங்கத்தில் மாலை 6.30 மணிக்கு ஒரு காட்சி, இரவு பத்து மணிக்கு ஒரு காட்சி என இரண்டே காட்சிகள்தான் திரையிடப்பட்டன. தினமும் இரண்டு காட்சிகள் என்பது 1975களுக்குப் பின்னர் மூன்று காட்சிகளாகவும் பின்னர் 1980ம் ஆண்டுகளில் மதியம் பதினொரு மணி, பகல் மூன்று மணி மாலை ஏழு மணி மற்றும் இரவு பத்து மணி என நான்கு காட்சிகளாக விரிவு செய்யப்பட்டன. அந்நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புக் காட்சி காலை ஒன்பது மணிக்குத் திரையிடப்பட்டது. எழுபத்தி ஐந்தாம் ஆண்டுகளில்தான் பால்கனி மற்றும் பாக்ஸ் என்ற வசதிகள் திரையரங்குகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.
தற்காலத்தில் திரையரங்குகளில் குஷன் இருக்கைகளும், ஜெனரேட்டர் மற்றும் ஏசி வசதிகளும் உள்ளன. ஆனால், அக்காலத் திரையரங்குகளில் மூன்று விதமான இருக்கைகள் நடைமுறையில் இருந்தன. திரைக்கு அருகில் தரையில் உட்கார்ந்து பார்க்கும் விதமாக ஒரு அமைப்பு. இது தரை டிக்கெட் எனப்படும். அடுத்ததாக பெஞ்சு. இது அடுத்த அமைப்பு. இதில் சாய்ந்து கொண்டு பார்க்கும் வசதி இருக்காது. கடைசிவரை நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேதான் பார்க்க வேண்டும். மூன்றாவதும் பெஞ்சுதான். அதன் பின்புறத்தில் சாய்ந்து கொண்டு அமர்ந்து திரைப்படத்தைப் பார்க்கலாம். எழுபதுகளில் தரை டிக்கெட் 15 காசுகளும் பெஞ்சு டிக்கெட் 25 காசுகளும் சாய்ந்து பார்க்கும் வசதி கொண்ட பெஞ்சுகளுக்கு 35 காசுகளும் வசூலிக்கப்பட்டன.
அக்காலத் திரையரங்கங்களில் பெஞ்சுகளின் இடுக்குகளில் சாரை சாரையாக மூட்டைப்பூச்சிகள் இருக்கும். படம் பார்க்கத் தொடங்கியதும் அது தமது வேலையைத் தொடங்கிவிடும். அதைப் பிடித்து அடித்துக் கொண்டே
படம் பார்ப்பார்கள். படம் பார்க்கும் சுவாரஸ்யத்தில் பல ரசிகர்கள் தங்களை மூட்டைப்பூச்சிகள் கடிக்கும் விஷயத்தையே மறந்து படம் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும்போது தின்பண்டம் விற்பவர்கள் இடது கையில் ஒரு செவ்வக வடிவத்தட்டினை தங்கள் தோள் பகுதியில் வைத்து விற்பனை செய்து கொண்டே இருப்பார்கள். அதில் தேங்காய் பிஸ்கெட், கமர்கட், பட்டர் பிஸ்கட் போன்றவை இருக்கும். திரைப்படம் பார்ப்பவர்கள் அவ்வப்போது அவற்றை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே படத்தைப் பார்ப்பார்கள். இதுமட்டுமின்றி, கோலி கோடா மற்றும் கலர் சோடா போன்றவற்றையும் விற்பார்கள். மரத்தினால் செய்த ஒரு சிறிய அமைப்பில் ஐந்து சோடா பாட்டில்களை அடுக்கி எடுத்துக் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். சோடா பாட்டில்களைத் திறக்க கையில் ஒரு திறப்பனையும் வைத்திருப்பார்கள். ஒரு சோடாவின் விலை பதினைந்து காசுகள். கலரின் விலை இருபது காசுகள். அவ்வப்போது அவற்றை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு படம் பார்க்கும் சுகமே அலாதிதான்.
முன்பெல்லாம் ஒரு திரைப்படம் நூறு நாட்கள் மற்றும் நூற்றி எழுபத்தைந்து நாட்கள் ஓடினால் மாபெரும் சாதனையாகக் கருதப்பட்டது. இதைக் கொண்டாட விழாக்கள் நடைபெற்றன. ஆனால், தற்காலத்தில் ஒரு திரைப்படம் ஒரு வாரம் ஓடினாலே பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. ஒரு நாளில் தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான காட்சிகள் திரையிடப்படுவதால் வசூலும் ஆகி விடுகிறது.
அக்காலத் திரையரங்குகளில் ஜெனரேட்டர் வசதி கிடையாது. படம் ஓடிக்கொண்டிருக்கும் போது கரண்ட் கட் ஆனால் மறுபடியும் கரண்ட் வரும் வரை காத்திருக்க வேண்டும். ஒரு வேளை கரண்ட் வராமலே போனால் நமது டிக்கெட்டில் எழுதித் தந்து விடுவார்கள். அந்த டிக்கெட்டை வைத்து வேறொரு நாளில் மீண்டும் ஒரு முறை படத்தைப் பார்க்கலாம்.
இருபது ரூபாய் இருந்தால் ஒரு குடும்பமே சினிமா தியேட்டருக்குச் சென்று திண்பண்டங்கள் வாங்கி சுவைத்து சினிமாவை ரசித்து மகிழ்ச்சியோடு திரும்பியது அந்தக்காலம். ஆனால், இன்றோ ஒரு முறை குடும்பத்தோடு ஒரு திரைப்படத்திற்குச் சென்று திண்பண்டங்களை வாங்கி சாப்பிட்டுத் திரும்ப இரண்டாயிரம் ரூபாய் வரை செலவாகிறது.