
மக்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத மணிக்கூண்டுகள்!
“இராயப்பேட்டை மணிக்கூண்டுக்கு ஒரு டிக்கெட்...
"சார் தண்டையார்பேட்டை மணிக்கூண்டு ஒண்ணு...
"தங்கசாலை மணிக்கூண்டு போகுமா சார்?"
"டவுட்டன் மணிக்கூண்டு நிக்குமா சார்?“
சென்னை நகர மக்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றிருக்கின்றன, மணிக்கூண்டுகள்! அவை சுமந்து நிற்கும் வரலாற்றை பார்ப்போம்.
மணிக்கூண்டு என்பது நான்கு திசைகளிலிருந்தும் பார்க்கக்கூடிய வகையில் நான்கு கடிகாரங்கள் பொருத்தப்பட்ட ஒரு அமைப்பாகும்.
ஆரம்ப கால மணிக்கூண்டுகளில் கடிகாரம் இருந்ததில்லை. அதில் வெறும் வெண்கல மணி மட்டுமே பொருத்தப்பட்டு இருந்தது. சுற்றுப் புறத்திலுள்ள மக்களை பிரார்த்தனைக்கு அழைப்பதே அந்த மணிக்கூண்டுகளின் முக்கிய பணியாக இருந்து வந்தது.
புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த காலனிய அதிகாரிகள், ஒவ்வொரு நாளும் சரியாக இரவு 8.00 மணிக்கு பீரங்கிக் குண்டுகளை முழங்கச் செய்து நேரத்தை அறிவித்தனர். இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் குண்டு வீச்சு அச்சுறுத்தலால் 1943ல் இந்த வழக்கம் நிறுத்தப்பட்டது.
அப்போது, கைக்கடிகாரம் என்பது விலை உயர்ந்த பொருளாக இருந்தது. சிலரால் மட்டுமே வாங்கி பயன் படுத்தக்கூடிய நிலை. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வெண்கல மணிக்கு பதிலாக நான்கு பக்கமும் கடிகாரம் பொருத்தப்பட்டு, மணிக்கூண்டுகள் பொதுமக்களுக்கு காலத்தை காட்டி வந்தன.
1. பழமை வாய்ந்த டவுட்டன் மணிக்கூண்டு
சென்னை நகரில் முதன் முதலில் அமைக்கப்பட்டது டவுட்டன் மணிக்கூண்டு. இது 1900 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் கட்டப்பட்டது. சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள டவுட்டன் சந்திப்பில் அமைந்திருக்கிறது. இது பழமையான மணிக்கூண்டாக திகழ்கிறது.
2. இராயப்பேட்டை மணிக்கூண்டு
1930 ஆம் ஆண்டு இராயப்பேட்டை மணிக்கூண்டு கட்டப்பட்டது. இந்த மணிக்கூண்டு இராயப்பேட்டையில் வெஸ்ட் காட் சாலை, ஒயிட்ஸ் சாலை, ஜெனரல் பீட்டர்ஸ் சாலை மற்றும் பைகிராப்ட்ஸ் சாலை சந்திப்பில் அமைந்துள்ளது.
இந்த மணிக்கூண்டில் பொருத்தப்பட்டுள்ள கடிகாரங்கள், ஜார்ஜ் டவுன் ரத்தன் பஜார் சாலையில் உள்ள கனி அன்ட் சன்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. ஈரானை பூர்வீகமாகக் கொண்ட ஹாஜி மிர்சா கனி நமாசி என்பவரால் சவுத் இந்தியா வாட்ச் கம்பெனி பெயரில் 1909 ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், பட்டாளம், திருவொற்றியூர், சூளை ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட மணிக்கூண்டுகளுக்கான கடிகாரங்களை உருவாக்கியது.
3. தண்டையார்பேட்டை மணிக்கூண்டு
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1940 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இது சில ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய சென்னை தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் வருவதையொட்டி புதுப்பித்தல் வேலை நடைபெற்றது. அதன் பின்னர் மீண்டும் புதிய வண்ணங்களோடு, புதுப்பொலிவுடன் செயல்படத் தொடங்கியது.
4. தங்கசாலை மணிக்கூண்டு
பேசின் பிரிஜ் சாலை – பழையச் சிறைச்சாலை, வடக்கு வால் சாலை – தங்கசாலைத் தெரு சந்திப்பில் அமைந்துள்ளது, தங்கசாலை மணிக்கூண்டு. 1948 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதன் உயரம் 60 அடி. கடிகாரத்தின் ஒவ்வொரு முகப்பும் அலுமினியத்தால் ஆனது. கடிகார முகப்புகள் 4 அடி விட்டம் உடையது. அன்றைய சென்னை மேயராக இருந்த யு.கிருஷ்ணாராவ் இந்த மணிக்கூண்டைத் திறந்து வைத்தார்.
சென்னையில் மொத்தம் 14 மணிக்கூண்டுகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. மணிக்கூண்டுகளின் நகரம் என்று சென்னைக்கு ஒரு பெயரும் உண்டு. ஆனால், தற்போது பாதிக்கும் மேல் மணிக்கூண்டுகள் பல்வேறு காரணங்களால் இடிக்கப்பட்டு விட்டன.
ஒரு நூற்றாண்டு வரலாற்று சான்றுகளாக எஞ்சி நிற்கும் மணிக்கூண்டுகள், பல்லாயிரம் மக்களுக்கு காலம் காட்டி வந்தன.
இன்று நவீன தொழில் நுட்ப அலைபேசிகளும், ஸ்மார்ட் கைக்கடிகாரங்களும் மக்கள் பயன்படுத்த தொடங்கி விட்ட நிலையில், கால மாற்றத்தால் மணிக்கூண்டுகள் தன்னையும் மேம்படுத்திக்கொண்டு, பேருந்து நிலைய பெயர்களாக, சென்னை நகரின் முக்கிய அடையாளங்களாக தன்னை நிலை நிறுத்தி வருகின்றன.