ஒரே இரவில் எழுதப்பட்ட கோடெக்ஸ் கிகாஸ் (Devils Bible) மீதான மர்மம்..!
உலகில் இறைத்தன்மை மற்றும் அதற்கு எதிரான தீய சக்திகள் என்ற இரு வேறு இயக்கங்கள் உண்டு என்பது அனைவரின் கருத்து. இன்பம் துன்பம், இருள் ஒளி, நேர்மறை எதிர்மறை இது அனைத்துமே கலந்தது தான் உலகம் என்பது தெரியும்.
அதேபோல் விடை தெரியாத பல மர்ம முடிச்சுகள் கொண்ட வரலாற்று இடங்கள், நபர்கள் மற்றும் சம்பவங்கள் நம்மை வியக்க வைப்பதுண்டு. அமானுஷ்யமான பல நிகழ்வுகளை வாழ்வில் ஒரு முறையாவது நாம் கேள்விப்பட்டிருப்போம்.
தற்போது டெக்னாலஜி பெருகி வந்தாலும் இது போன்ற சம்பவங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்பதுதான் உண்மை. இது உண்மையா அல்லது பொய்யா என்பதை ஆராய்வதை விட இதில் உள்ள சுவாரசியங்களை நாம் அறிந்து வியக்கலாம். அது மட்டுமே நம்மால் செய்ய முடிந்த ஒன்று.
இப்போதும் உலகமே உற்றுநோக்கி அதிசயப்பட வைக்கும் ஒரு நூலை பற்றி இங்கு காண்போம்.
ஸ்வீடன் நாட்டின் நேஷனல் லைப்ரரி அது. 1858 ஆம் வருடத்தில் ஒரு நாள் இரவு அனைவரும் சென்று விட்டார்கள் என்று நினைத்து அதன் காவலாளி லைப்ரரியின் கதவுகளை பூட்டி விட்டு சென்றுவிட அங்கு பணிபுரிந்த லைப்ரரியன் உள்ளே மாட்டியிருக்கிறார். அடுத்த நாள் அவரைக் காணவில்லை என்று லைப்ரரியை திறந்து பார்க்க அவர் மனநிலை பாதித்தவராக பயந்து நடுங்கி ஒரு மேஜை அடியில் பதுங்கி இருந்துள்ளார்.
பின் மருத்துவர்களின் கண்காணிப்பில் தேறியவர் அன்று இரவு நடந்ததை சொல்கிறார். லைப்ரரியில் இருந்த 'கோடெக்ஸ் கிகாஸ்' எனும் புத்தகம் அதாவது 'டெவில்ஸ் பைபிள்' எனப்படும் மிகப்பெரிய புத்தகம் திடீரென அந்தரத்தில் சுழன்றதாகவும் அதைச் சுற்றி லைப்ரரியில் இருந்த புத்தகங்கள் சுற்றியதாகவும் அதை பார்த்து பயந்து போய் தான் மேஜை அடியில் பதுங்கியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். இது மிகப்பெரிய செய்தியாகியது அன்று.
ஸ்வீடன் லைப்ரரியில் உள்ள சாத்தானின் பைபிள் என்று அழைக்கப்படும் நூல் மீதான மர்ம முடிச்சுகள் இன்றும் பலரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதை பற்றிய சிறிய பார்வை இங்கு.
எதனால் இது சாத்தானின் பைபிள் என்று அழைக்கப்படுகிறது என நினைக்கலாம். இது உண்மையில் பைபிள் வசனங்களை தாங்கிய புனித நூல் தான். ஆனால் இதன் ஒரு பக்கத்தில் பெரிய பிரம்மாண்டமான சாத்தானின் உருவ அமைப்பு வரையப்பட்டிருக்கிறது. இதனாலும் இது சாத்தானின் பைபிள் என்று அழைக்கப்பட காரணமாக இருந்திருக்கலாம்.
அத்துடன் இதன் அடிப்படையில் நேர்ந்த பல அமானுஷ்ய சம்பவங்கள் இதை உறுதிப்படுத்தும் வண்ணம் உள்ளது எனலாம். புத்தகம் என்று நாம் சாதாரணமாக குறிப்பிடும் கோடெக்ஸ் கிகாஸ் உண்மையில் இரண்டு பேர் தூக்கக் கூடிய அளவுக்கு மிகப்பிரமாண்டமான புத்தகம் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். 91 சென்டிமீட்டர் உயரம் 50.5 சென்டிமீட்டர் அகலம் அத்துடன் 75 கிலோ எடை கொண்ட மிகப்பிரமாண்டமான இந்த புத்தகத்தின் பக்கங்கள் வெறும் காகிதங்களால் வடிவமைக்கப்படவில்லை என்பது வியப்பு.
கிட்டத்தட்ட 160 கழுதைகளின் தோலை இதன் பக்கங்களாக்கி அதில் பைபிள் எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த பிரம்மாண்டமான புத்தகம் ஒரே நாள் இரவில் எழுதப்பட்டதாக சொல்லப்படுவது தான் இங்கு மிகப் பெரிய ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் தருகிறது. இதன் பின்னால் உள்ள மர்மங்களை பலர் ஆராய்ந்ததின் விளைவாக சில விஷயங்கள் பொதுமக்கள் கவனத்திற்கு வந்துள்ளது. ஆனால் இது அனைத்தும் யூகங்களின் அடிப்படையில் ஆகவும் இருக்கலாம் என்பது ஒரு சாராரின் கருத்து. அப்படி என்ன ஆய்வுகளின் முடிவுகள்?
முதலில் அந்த புத்தகம் எங்கிருந்து வந்தது? 1600 ஆவது வருடத்தில் 30 வருட போர் என ஐரோப்பிய தேசத்தில் ஒரு போர் நடைபெற்றது. கத்தோலிக்க மதத்தை பரப்பும் பொருட்டு இந்த போர் 30 வருடங்கள் தொடர்ந்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஐரோப்பிய தேசம் தனது பலத்தை இழந்து பல புது நாடுகளாக பிரிந்து இருக்கிறது. அந்த தருணத்தில் ஸ்வீடனின் ராணுவம் ப்ராக் என்னும் இடத்தில் இருந்த கிருத்துவ சாமியார்கள் வைத்திருந்த பொருட்களை எடுத்துச் சென்றார்கள் எனவும் அதிலிருந்து ஒரு பொருள்தான் இந்த சாத்தானின் பைபிள் என சொல்கிறார்கள். இதை எடுத்துச் சென்ற ஸ்வீடன் ஆர்மி தனது நாட்டின் நேஷனல் லைப்ரரியில் இதை பாதுகாப்பாக வைத்திருக்கிறது என்கிறார்கள்.
இந்த சாத்தானின் பைபிள் ஸ்வீடன் வந்ததிலிருந்து ஏற்பட்ட பல சம்பவங்கள் பலருக்கும் அச்சத்தையே தந்துள்ளது. உதாரணமாக 1967 இல் ஸ்டாக் ஹோம் நகரில் நிகழ்ந்த தீ விபத்தில் லைப்ரரியில் உள்ள புத்தகங்களும் தீப்பிடிக்க யாரோ ஒரு சிலர் இந்த புத்தகம் எடுத்து மாடியில் இருந்து வீசியுள்ளனர். அப்போது இருவர் இந்த புத்தகத்தின் மூலம் மரணம் அடைந்துள்ளனர். அது மட்டும் இன்றி மேலும் அங்கு தீ விபத்து நடந்துள்ளது.
இப்படி சிறு சிறு தீமை தரும் அமானுஷ்ய சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அதில் ஒன்று தான் லைப்ரரியன் சொன்னதும்.
இந்த புத்தகத்தின் பின்னணியில் ஒரு கதையும் நிலவுகிறது. பாவத்தின் அடையாளமாகி போன ஒரு பாதிரியார் தனது கிடைத்த மரண தண்டனையில் இருந்து தப்பிக்க சாத்தானை உதவிக்கு அழைத்ததாகவும் அந்த சாத்தானே பைபிளை எழுதி தந்ததாகவும் தன்னை எவரும் மறக்கக்கூடாது என்பதற்காகவே தனது உருவத்தை அதில் பதித்து விட்டு தன்னை எப்படி வேண்ட வேண்டும் என்ற சிறு சிறு குறிப்புகளையும் எழுதி வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இது அனைத்தும் கட்டுக்கதைகளாகவே இருந்தாலும் இவ்வளவு பிரமாண்டமான புத்தகத்தை யார் எழுதியிருப்பார்கள் எனும் விபரம் இதுவரை அறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரம் சாத்தான் இருக்கும் பக்கத்தின் எதிர்பக்கம் ஜெருசலம் எனும் புனித நகரத்தின் ஓவியமும் இருக்கிறது. தீமைகளை அளிக்க இறையை வேண்டுவோம் எனும் குறியீடாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள்.
தற்போது எந்த அமானுஷ்ய சம்பவங்களும் நடைபெற்ற வில்லை எனினும் இதை எழுதிய விதம் பற்றிய தகவல்கள் இன்னும் தெரியவில்லை. எது எப்படியோ இது போன்ற மர்ம முடிச்சுகள் பலரது கற்பனைகளுக்கு தீனி போடுவதுடன் அதைக் கேட்கும் நமக்கும் சுவாரசியமாகவும் உள்ளது எனலாம்.