இந்த உலகில் நன்மை என்று ஒன்றிருந்தால் தீமை என்பதும் இருக்கும். கடவுள் இருக்கிறார் என்று நம்பும் பலர், சாத்தான் இருக்கிறது என்று சொன்னால் பெரிதும் நம்புவதில்லை. ஆனால், இவை இரண்டுமே இருக்கும் இடம் எதுவென்று தெரியுமா? அதைப்பற்றி தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டிக் கதையை காண்போம்.
ஒரு முனிவர் மரத்தடியில் அமர்ந்து தவம் செய்துக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த வழியாக சென்றுக் கொண்டிருந்த அந்த நாட்டின் அமைச்சர் அவரை பார்த்துவிட்டு அவரிடம் சென்று, ‘ஐயா! கடவுளும், சாத்தானும் இருப்பது உண்மையா?' என்று கேட்கிறார்.
இதைக்கேட்ட முனிவர் கோபத்தோடு கண்களை திறந்து, ‘உனக்கு அறிவு இருக்கிறதா இல்லையா? நான் தவத்தில் அமர்ந்திருப்பது தெரிந்தும் கேள்வி கேட்கிறாய்? உன்னைப்போல முட்டாளுக்கு யார் அரசவையில் பதவிக்கொடுத்தது?’ என்று கோபமாக கேட்கிறார்.
இதைக் கேட்டதும் அமைச்சருக்கு சரியான கோபம் வந்துவிட்டது. தன்னுடைய வாளை எடுத்து முனிவரின் கழுத்தில் வைத்து அழுத்திக்கொண்டே சொல்கிறார், ‘யாரைப் பார்த்து முட்டாள் என்று சொல்கிறாய்! அரசவையில் என் மதிப்பும், மரியாதையும் என்னவென்று தெரியுமா? எனக்கு வரும் கோபத்திற்கு உன் தலையை வெட்ட வேண்டும்' என்று ஆத்திரத்துடன் சொல்கிறார்.
இப்போது முனிவர் சிரித்துக்கொண்டே, 'சாத்தான் இருக்கிறதா என்று கேட்டாயே? உன்னை அழிக்கும் இந்தக் கோபம்தான் உண்மையான சாத்தான்' என்றுக் கூறினார்.
இதைக் கேட்ட அமைச்சர் தன்னுடைய செயலை நினைத்து வருத்தப்பட்டு முனிவரின் காலில் விழுந்து, ‘ஐயா! என்னை மன்னித்து விடுங்கள்! ஏதோ அவசரத்தில் தவறு செய்துவிட்டேன்’ என்று கண்ணீர் மல்க சொல்கிறார். இதைப் பார்த்த முனிவர் சிரிர்த்துக் கொண்டே, ‘இந்த அன்பு நிறைந்த உன் உள்ளம்தான் கடவுள்’ என்று சொல்கிறார்.
இந்தக் கதையில் வந்ததுப்போல. கடவுளும், சாத்தானும் நம்முள்ளேதான் இருக்கிறார்கள். நாம் யாராக இருக்க வேண்டும் என்பதும் நம் கையிலேதான் உள்ளது. மற்றவர்களிடம் கடவுளை வெளிக்காட்ட வேண்டுமா அல்லது சாத்தானை வெளிக்காட்ட வேண்டுமா? என்பது நாம் நடந்துக்கொள்ளும் விதத்தைப் பொருத்தே அமைகிறது. இதைப் புரிந்துக்கொண்டு செயல்பட்டால், வாழ்க்கை நன்றாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.