அறிவுசார் வரலாற்றுச் சின்னமாக விளங்கும் கன்னிமாரா நூலகம்!

கன்னிமாரா நூலகம்
கன்னிமாரா நூலகம்
Published on

நூலகம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது கன்னிமாரா நூலகம்தான். இந்த நூலகத்தில் இல்லாத புத்தகமே இல்லை என்று கூடச் சொல்லலாம். அதைவிட, தமிழ்நாட்டுக்கு அதிலும் சென்னைக்கு முத்திரை பதிக்கும் முக்கிய இடம் கன்னிமாரா நூலகம் ஆகும். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் கன்னிமாரா நூலகத்தின் பெருமை தெரிந்து அங்கு வந்து செல்வதை நம்மால் காண முடியும். உலகில் வேறு எங்குமே காண முடியாத அளவுக்கு கன்னிமாரா நூலகம் பெருமை வாய்ந்ததாகவும், சிறந்ததாகவும் விளங்குகிறது. அதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

பெருமைகள் பலவற்றுக்கு சென்னை நகரம் பெயர் பெற்றாலும், கல்வியறிவை வளர்ப்பதில் ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவருக்கும் ஒரேவிதமாகக் கொடுத்து வரும் கன்னிமாரா பொது நூலகத்திற்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி இடம் உண்டு. இதேபோல், சென்னையின் அடையாளமாக எத்தனையோ பாரம்பரிய சின்னங்கள், கட்டடங்கள் இருந்தாலும் அறிவுசார் வரலாற்று சின்னம் எதுவென்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கன்னிமாரா பொது நூலகமே.

இன்று டிஎன்பிஎஸ்சி முதல் பல்வேறு அரசு வேலைகளுக்காக படித்து வரும் பெரும்பாலான இளைஞர்கள், ஆய்வாளர்கள் என பலருக்கும் இந்த நூலகம் உறுதுணையாக இருந்து வருகிறது. தொடக்கத்தில், அதாவது 19ம் நூற்றாண்டில் சென்னையில் சில நூலகங்கள் இயங்கி வந்தாலும் பொதுமக்களுக்கென பிரத்யேகமாக உருவாப்பட்ட நூலகம் என்றால் கன்னிமாரா நூலகத்தையே கூறலாம். இந்த நூலகம் இந்தியாவின் மிகப் பழையான நூலகங்களில் ஒன்று.

கன்னிமாரா நூலகம்
கன்னிமாரா நூலகம்

1890ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1896ம் ஆண்டு இந்த நூலகம் திறக்கப்பட்டது. நூலகம் திறக்கப்பட்டபோது அடிக்கல் நாட்டிய அப்போதைய மெட்ராஸ் மாகாண கவர்னர் கன்னிமாரா பிரபு, அதிகாரத்தில் இல்லை. ஆனாலும், அவருடைய பெயரே நூலகத்துக்கு சூட்டப்பட்டது. மெட்ராஸ் மாகாணத்தின் தலைமை கட்டடக் கலை நிபுணராக இருந்த இர்வின் என்பவர் கன்னிமாரா நூலகக் கட்டடத்தை வடிவமைத்தார். அப்போதே இந்த நூலகத்தை கட்டி முடிக்க 5 லட்ச ரூபாய்க்கு மேல் செலவானதாக சொல்லப்படுகிறது. நூலகத்தில் உள்ள மர அலமாரிகள் விலை உயர்ந்த மரங்களால் செய்யப்பட்டன. இந்தோ - சாரசெனிக் பாணியில் கன்னிமாரா நூலகம் கட்டப்பட்டது. இந்த நூலகம் 1930ம் ஆண்டு வரை ஆங்கிலேயர்களின் மேற்பார்வையில்தான் இருந்தது.

அதன் பிறகுதான் இந்திய நூலக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. இதற்கு பிறகுதான் நூல்களை உள்ளே வந்து படிக்கவும், எடுத்துச்சென்று படிக்கவும் அனுமதி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1950 ம் ஆண்டு இந்திய பொது நூலகத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்நூலகத்தில் நாட்டின் மதிப்பு மிக்க புகழ் பெற்ற பழைமையான புத்தகங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி இங்கு பாதுகாக்கப்படுகிறது.

கன்னிமாரா நூலகம்
கன்னிமாரா நூலகம்

சென்னை எழும்பூரில் பாந்தியன் சாலையில் இருக்கும் கன்னிமாரா நூலகத்தில் கிடைக்காத நூல்களே இல்லை எனலாம். வேறு எங்கும் கிடைக்காத பழைமையான நூல்கள் பலவும் இங்கு உள்ளன. அனைத்து வயதுடைய வாசகர்களைக் கவரும் வகையில் இங்கு புத்தகங்கள் நிறைந்துள்ளன. இன்றும் பல நூற்றுக்கணக்கான வாசகர்கள் இந்த கன்னிமாரா பொது நூலகத்திற்கு வருகை தந்து செல்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
குடும்பத்தில் மூத்த மகள்கள் எதிர்கொள்ளும் 10 நோய்க்குறிகள் பற்றி தெரியுமா?
கன்னிமாரா நூலகம்

அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று நினைத்த அப்போதைய தமிழக கல்வித்துறை அமைச்சர் அவினாசிலிங்கம் 1948ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல்முறையாக பொது நூலகங்களுக்கு என ஒரு சட்டம் இயற்ற முன்வந்தார். அதன்படி, இந்தச் சட்டம்1948ம் ஆண்டு இயற்றப்பட்டு, 1950ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. தொடர்ந்து கன்னிமாரா நூலகம் மாநிலத்தின் மைய நூலகமாக அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் உள்ள 4 தேசிய நூலகங்களில் ஒன்றாக சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com