கேரள கலாச்சாரத்தின் குறியீடாக 'ஆறன்முளா கண்ணாடிகள்' மிகவும் குறிப்பிடத்தக்கவை.
கேரளாவில் மலையாளப் புத்தாண்டு தினத்தை 'விஷூக்கனி' என கொண்டாடுவார்கள். அதில் மங்களப் பொருள்கள் வரிசையில் 'ஆறன்முளா கண்ணாடி' யையும் தவறாமல் இடம் பெறும்.
கலப்பு உலோகக் கண்ணாடி
'ஆறன்முளா கண்ணாடி' என்பது கையால் செய்யப்பட்ட உலோக கலப்பு கண்ணாடி ஆகும். திருவனந்தபுரத்தில் இருந்து 116 கிலோமீட்டர் தூரத்தில் பந்தனம் திட்டாமாவட்டத்தில் உள்ளது 'ஆறன்முளா' என்கிற சிறிய ஊர். இங்கு இக்கண்ணாடி தயாராவதால்தான் இது 'ஆறன்முளா' கண்ணாடி என்ற பெயர் தோன்றியது.
இந்த கண்ணாடிகள் தொன்றுதொட்டு மக்களின் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த கண்ணாடி இருக்கும் இடத்தில் அதிர்ஷ்டம், செழுமை, நேர்மறை ஆற்றல் நிலவும் என்பது மக்கள் நம்பிக்கை. அதனால் தான் கேரள மக்கள் 'விஷீகனி' அன்று தங்கள் முகத்தை இந்த கண்ணாடியில் குடும்பத்துடன் பார்த்து மகிழ்வார்கள்.
தகரம், தாமிரம் சேர்ந்த உலோக கலவையால் இந்த கண்ணாடியை தயாரிக்கின்றனர். இந்த தொழில்நுட்பம் தெரிந்த சில குடும்பங்களால் மட்டுமே பாரம்பரியமாக இந்த வகை கண்ணாடிகள் உருவாக்கப்படுகின்றன. இந்த கண்ணாடிகளை தயாரிக்க நேரமும், உழைப்பும் , அதிகமாக தேவைப்படும். ஒவ்வொரு கண்ணாடியையும் மெழுகு அச்சில் உலோக கலவையை வார்த்து கைகளால் தனித்தனியே உருவாக்குகிறார்கள். கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும் சட்டங்கள் நுணுக்கமான வேலைபாடுகளால் மிளிறக் கூடியவை. உருவாக்கிய பின் துல்லியமாக பாலிஷ் செய்து விற்பனை செய்வார்கள்.
தொழில் நுட்பத்தில் கை தேர்ந்த 'விஸ்வகர்மா' சமூகத்தைச் சேர்ந்த 8 குடும்பங்கள் வெகு காலத்துக்கு முன்னர் வரவழைக்கப்பட்டு, அவர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தான் இப்போதும் கண்ணாடியை தயாரித்து வருகிறார்கள்.
இதன் சிறப்பு:
அழகு பதிந்திருக்கும் இந்த கண்ணாடியை விழாக்களின் போது அலங்கரிப்பார்கள். பிறருக்கு பரிசாக கொடுப்பார்கள். குறிப்பாக திருமண வைபங்கள், புதுமனை புகு விழாக்கள், போன்ற விழாக்களில் 'ஆரன்முளா' கண்ணாடிகள் நிச்சயம் இடம்பெறும். அழகு சாதனப் பொருள் என்பதை தாண்டி, சாஸ்திர சம்பிரதாயம் போன்றவைகளுக்கும் கேரளாவின் கலாச்சாரத்தின் குறியீடாகவும் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது ஆறன்முளா கண்ணாடிகள்.