
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் திருட வந்த திருடர்களை முருகன் குதிரை மீது வந்து தண்டித்த கதைப் பற்றித் தெரியுமா? அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
பாம்பாட்டி சித்தர் இளம் வயதிலேயே பாம்புகளைப் பிடித்து விஷம் முறிப்பது, பாம்பு கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளை செய்துக் கொண்டிருந்தார். ஒருசமயம் பாம்பாட்டி சித்தர் நாகரத்தினம் உள்ள பாம்பைத் தேடி மருதமலைக்கு வந்தார்.
அப்போது சட்டை முனிவர் அவருக்கு காட்சித் தந்து பிறப்பின் ரகசியத்தைப் பற்றிக் கூறினார். அதன் பிறகு பாம்பாட்டி சித்தர் முருகன் சிலையை வடிவமைத்து முருகனை வேண்டி தவம் புரிந்தார். அவரின் தவத்தால் மனம் மகிழ்ந்த முருகப்பெருமான் அவருக்கு காட்சியளித்தார். பாம்பாட்டி சித்தர் வடிவமைத்த சிலை தான் இன்றைக்கும் மருதமலை கோவிலில் மூலவராக இருக்கிறது.
ஒருமுறை மருதமலை கோவிலில் சில திருடர்கள் புகுந்து கோவில் பொருட்களை கொள்ளை அடித்து செல்ல முயற்சித்தனர். அச்சமயம் முருப்பெருமான் ஒரு குதிரை மீது ஏறி வந்து அவர்களை மறித்து, கொள்ளை அடித்தப் பொருட்களை கோவிலில் பத்திரமாக சேர்த்தார். அதோடு கொள்ளை அடித்தவர்களை பாறையாகவும் மாற்றினார்.
முருகப்பெருமான் குதிரையில் வேகமாக சென்ற போது குதிரை மிதித்த ஒரு இடத்தில் பள்ளம் உண்டானது. மலைப்பாதையில் உள்ள பாறையில் இத்தடம் இன்றும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்லை ‘குதிரை குழம்பு கல்’ என்று அழைக்கிறார்கள். முருகனுக்கு வாகனம் மயில் என்றாலும் ஒரு சில ஊர்களில் விழாக் காலங்களில் முருகப்பெருமானை குதிரை மீது எழுந்தருளச் செய்வார்கள்.
முருகனின் ஏழாவது படைவீடாக கருதப்படுவது மருதமலை. மருதமலையில் உள்ள குகையில் பாம்பாட்டி சித்தர் சன்னதி இருக்கிறது. இங்குள்ள பாறையில் நாகவடிவம் காணப்படுகிறது. இந்த நாகத்தின் வடிவத்தில் தான் முருகப்பெருமான் பாம்பாட்டி சித்தருக்கு காட்சித் தந்ததாக சொல்லப்படுகிறது.
அர்த்தஜாம வேளையில் பாம்பாட்டி சித்தர் முருகனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். இதை நிரூபிக்கும் வகையில் பாம்பாட்டி சித்தர் சன்னதியில் ஒரு பாதித்திரத்தில் பால் ஊற்றி வைத்திருப்பார்கள். அடுத்த நாள் வந்து பார்க்கும் போது அந்த பால் குறைந்திருக்கும்.
மருத மரங்கள் அதிகம் இருப்பதால் இந்த மலைக்கு மருதமலை என்ற பெயர் வந்தது. நோய் தீர்க்கும் மூலிகைகளைக் கொண்ட மலையில் அருள்பவர் என்பதால் இங்கிருக்கும் முருகப்பெருமானுக்கு ‘மருதாச்சலமூர்த்தி’ என்ற பெயர் வந்தது.