பீரங்கிகளுக்கே சவால் விட்ட கோட்டை அகழிகள்: இந்திய வரலாற்றின் பிரம்மாண்ட ரகசியங்கள்!

Ancient Indian Forts - கோட்டை அகழிகள்
Ancient Indian Forts - கோட்டை அகழிகள்AI Image

கழிகள் என்பது மனித வரலாற்று பாதுகாப்பு மற்றும் இயற்கை அறிவியல் ஆகிய இரண்டு துறைகளிலும் தனித்துவமான முக்கியத்துவம் வாய்ந்தவை.

வரலாற்று சிறப்பு பெற்ற கோட்டை அகழிகள்: 

பண்டைய மற்றும் இடைக்காலங்களில் கோட்டைகள் மற்றும் அரண்மனைகளை பாதுகாக்க அகழிகள் (நீர் நிரப்பப்பட்ட ஆழமான பள்ளங்கள்) உருவாக்கப்பட்டன. எதிரிப்படைகள், குதிரைகள் மற்றும் போர் வாகனங்கள் கோட்டைச் சுவர்களை நெருங்க முடியாதவாறு இவை தடையாக இருந்தன. சில அகழிகள் மழை நீரை சேகரிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் உதவின. 

தமிழ்நாட்டின் செஞ்சிக்கோட்டை, ராஜஸ்தானின் சித்தோர் கோட்டை மற்றும் டெல்லியின் செங்கோட்டை போன்ற வரலாற்றுச் சின்னங்களின் பாதுகாப்பில் அகழிகள் முக்கிய பங்கு வகித்தன.

வரலாற்று சிறப்புமிக்க கோட்டை அகழிகள் என்பவை எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்காக கோட்டையைச் சுற்றி வெட்டப்பட்ட அகலமான, ஆழமான நீரால் நிரப்பப்பட்ட அல்லது வறண்ட பள்ளங்களாகும். இவை நமது முன்னோர்களின் பாதுகாப்பு மற்றும் சூழலியல் அறிவின் சான்றுகளாக விளங்குகின்றன.

1. வேலூர் கோட்டை அகழி (தமிழ்நாடு): 

Ancient Indian Forts - கோட்டை அகழிகள்
Ancient Indian Forts - கோட்டை அகழிகள்

விஜயநகரப் பேரரசர் காலத்தில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வேலூர் கோட்டை அதன் பிரம்மாண்டமான அகழிகளுக்கு மிகவும் பிரபலமானது. எதிரிகளிடமிருந்து கோட்டையைப் பாதுகாக்க 136 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோட்டை சுமார் 3 கிலோ மீட்டர் நீளமும், சுமார் 16 அடி ஆழம் முதல் 29 அடி ஆழம் வரையிலான பிரம்மாண்டமான அகழியைக் கொண்டுள்ளது.

 ஆசியாவிலேயே மிகச்சிறந்த மற்றும் அகலமான கோட்டை அகழிகளில் ஒன்றாகும். ராணுவ ரீதியாக மிகவும் பாதுகாப்பானதாக விளங்கும் இந்த அகழி, மழைக்காலங்களில் அதிக நீர்மட்டத்தை எட்டும். ஒரு காலத்தில் இந்த அகழியில் ஏகப்பட்ட முதலைகள் வளர்க்கப்பட்டதாகவும், இது கோட்டையின் பாதுகாப்பை பலப்படுத்தியதாகவும் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. தற்போது இந்த அகழி மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்தும் முக்கிய நீர் நிலையாக விளங்குகிறது.

2. திருமயம் கோட்டை (தமிழ்நாடு): 

Ancient Indian Forts - கோட்டை அகழிகள்
Ancient Indian Forts - கோட்டை அகழிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இக்கோட்டை 1687 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி விஜய ரகுநாத தேவரால் கட்டப்பட்டது. வரலாற்று ஆய்வுகளின் படி இதன் அகழி எதிரிகளைத் தடுக்கும் வகையில் "ரிங் கோட்டையாக" 7 சுற்று மதில் சுவர்களையும், வட்ட வடிவமான பிரம்மாண்ட அகழிகளையும் கொண்டு விளங்குகிறது.

இந்த அகழி அமைப்புகள் எதிரிகளைத் தடுத்து நிறுத்தும் முட்டுக்கட்டையாகவும், அதேசமயம் கோட்டைக்குத் தேவையான நிலத்தடி நீரை சேமிக்கும் நீர்நிலையாகவும் பயன்பட்டன. கோட்டையின் உள்பகுதியில் அமைந்துள்ள குகைக் கோயில்கள், பீரங்கி மேடுகள் மற்றும் எண்கோணக் குளம் ஆகியவை கோட்டையின் பிற வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களாகும். தற்பொழுது இந்த கோட்டை சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.

3. சித்தோர்கர் கோட்டை அகழி (ராஜஸ்தான்): 

Ancient Indian Forts - கோட்டை அகழிகள்
Ancient Indian Forts - கோட்டை அகழிகள்

ராஜஸ்தானின் மேவார் பகுதியில் அமைந்துள்ள சித்தோர்கர் கோட்டை ஆசியாவின் மிகப்பெரிய கோட்டைகளில் ஒன்றாகும். உலக பாரம்பரியத் தளமான இது எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள பிரம்மாண்டமான மற்றும் ஆழமான அகழி அமைப்புகளைக் கொண்டிருந்தன. கோட்டையின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருந்த இந்த அகழி, ராஜபுத்திரர்களின் வீர வரலாற்றைக் கூறுகிறது.

கோட்டையின் மலைப்பகுதியைச் சுற்றிலும் இயற்கையான மற்றும் செயற்கையான அரண்களுடன் இந்த அகழிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. போர்க் காலங்களில் எதிரிப்படைகள் கோட்டையின் சுவர்களை நெருங்க முடியாதபடி இந்த அகழிகள் தற்காப்பு அரணாக செயல்பட்டன.

கோட்டையின் 280 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள 84 நீர்நிலைகளில் இருந்து இந்த அகழிகளுக்கும், கோட்டைக்குள் இருக்கும் குளம் போன்ற நீர்நிலைகளுக்கும் நீர் விநியோகம் செய்யப்பட்டது. கௌமுக் நீர்த்தேக்கம் மற்றும் ராணி பத்மினி அரண்மனை போன்ற இடங்கள் இன்றும் சிறந்த நீர் மேலாண்மைக்கு சான்றாக விளங்குகின்றன.

4. செஞ்சிக் கோட்டை அகழி: 

Ancient Indian Forts - கோட்டை அகழிகள்
Ancient Indian Forts - கோட்டை அகழிகள்

'தென்னிந்தியாவின் ட்ராய்' என அழைக்கப்படும் இக்கோட்டை அகழிகள் மற்றும் இயற்கையான மலை அரண்களுடன் ஒருங்கிணைந்து மிகக்கடினமான பாதுகாப்பு அமைப்பைக் கொண்டுள்ளது. செஞ்சிக் கோட்டையைச் சுற்றியுள்ள பிரம்மாண்டமான அகழிகள் சுமார் 80 அடி அகலமும், ஆழமும் கொண்டவை. 60 அடி தடிமனான பிரம்மாண்ட மதில்களுக்கு வெளியே எதிரிகள் கோட்டைக்குள் நுழைய முடியாதவாறு தடுக்க, இந்த அகழிகள் நீர் நிரப்பப்பட்டு இயற்கை அரணாக மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மற்றும் பிற மன்னர்களால் பலப்படுத்தப்பட்டன.

எதிரிகளால் எளிதில் ஊடுருவ முடியாத பாதுகாப்பைக் கொண்டிருந்ததால் ஐரோப்பியர்கள் இதனை "கிழக்கு உலகத்தின் டிராய் கோட்டை" என்று புகழ்ந்தனர். ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திராயன் துர்க்கம், சங்கிலி துர்க்கம் ஆகிய மலைகளும், அவற்றை இணைக்கும் 12 கிலோமீட்டர் நீளமுள்ள மதில் சுவர்களும் கோட்டையின் முக்கிய பாகங்களாகும்.

இந்த அகழிகள் மற்றும் அரண்களின் வலிமையால்தான், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் படைகளால் கூட இக்கோட்டையை உடனடியாக கைப்பற்ற முடியாமல், சுமார் 7 ஆண்டுகள் முற்றுகையிட வேண்டியிருந்தது. இக் கோட்டை யுனெஸ்கோ உலக பாரம்பரிய அந்தஸ்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

5. ரஞ்சன்குடி கோட்டை அகழி (தமிழ்நாடு):

Ancient Indian Forts - கோட்டை அகழிகள்
Ancient Indian Forts - கோட்டை அகழிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டை இது. எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் நேர்த்தியான அகழி மற்றும் பல பாதுகாப்பு அரண்களுடன் கட்டப்பட்டுள்ளது. செஞ்சிக்கோட்டையை நினைவுபடுத்தும் வகையில், இந்த அகழிகளுடன் இணைந்து மூன்று அடுக்குகள் கொண்ட உயரமான மதில் சுவர்கள் மற்றும் பீரங்கி மேடைகளும் அமைந்துள்ளன.

17ஆம் நூற்றாண்டில் ஆற்காடு நவாபின் ஜாகிர்தாரால் இந்த மூன்றடுக்குக் கோட்டை தற்போதைய வடிவத்தில் மேம்படுத்தப்பட்டபோது, இதன் அகழியும் முக்கிய பாதுகாப்பு அம்சமாக மாற்றப்பட்டது. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோட்டை மலைக்குன்றின் மேல் அமைந்துள்ளது. இக்கோட்டையைச் சுற்றிலும் எதிரிகள் ஊடுருவாமல் இருக்க அகலமான அகழி அமைக்கப் பட்டுள்ளது. 44 ஏக்கர் கோட்டையின் மேல்புறத் தோற்றம், செஞ்சிக் கோட்டையை போல கம்பீரமாக காட்சி தருகிறது.

6. ரெட் ஃபோர்ட் அகழி (டெல்லி):

Ancient Indian Forts - கோட்டை அகழிகள்
Ancient Indian Forts - கோட்டை அகழிகள்

முகலாயர் காலத்தில் முகலாய பேரரசர் ஷாஜஹானால் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட டெல்லி செங்கோட்டையின் பாதுகாப்பு அரணாக இந்த அகழிகள் வடிவமைக்கப்பட்டன. கோட்டையின் கிழக்குப் பகுதியில் அமைந்த இந்த அகழி, முற்காலத்தில் யமுனை நதியின் நீரைக் கொண்டு நிரப்பப்பட்டது. எதிரிகள் கோட்டையை எளிதில் நெருங்க முடியாதபடி இந்த ஆழமான மற்றும் அகலமான அகழி ஒரு பெரும் தடையாகவே இருந்தது. தற்காலத்தில் இந்த அகழிகள் தண்ணீரின்றி வறண்ட நிலையில் காணப்படுகின்றன. ஆனால் கோட்டையின் கம்பீரமான தோற்றத்திற்கு இவை இன்றும் முக்கிய காரணமாகவே விளங்குகின்றது.

இந்த அகழியை அடுத்துள்ள செங்கோட்டையின் வெளிப்புற மதில் சுவர்கள் சுமார் 2.4 கி.மீ. நீளமும், இடத்திற்கு தகுந்தாற்போல் 18 முதல் 33 மீட்டர் வரை உயரமும் கொண்டவை. அகழியின் அடிப்பகுதியிலிருந்து செங்குத்தாக உயரும் இந்த சுவர்கள், எதிரிகள் கோட்டைக்குள் ஏறி வருவதை முற்றிலும் தடுத்தன. செங்கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கோட்டையின் பிரதான வாயிலான லாகூரி கேட் (Lahori gate) வழியாக நுழையும் போது இந்த பிரம்மாண்டமான அகழி அமைப்பைக் காணமுடியும்.

இதையும் படியுங்கள்:
அழிவின் விளிம்பில் நம் பாரம்பரியக் கலைகள்... மீட்டெடுக்கும் முதன்மை நிறுவனங்கள்!
Ancient Indian Forts - கோட்டை அகழிகள்

இந்தப் பதிவை வாசிப்பதன் மூலம், நம் முன்னோர்களின் போர்க்காலப் பாதுகாப்பு உத்திகள் மற்றும் அவர்களின் வியக்கத்தக்க நீர் மேலாண்மைக் கலை பற்றிய துல்லியமான அறிவைப் பெறுவீர்கள். வரலாற்றுச் சின்னங்களைப் வெறும் சுவர்களாகப் பார்க்காமல், அவற்றின் பின்னால் இருக்கும் அதிநவீனப் பொறியியல் சிந்தனையை உணர்ந்து ரசிக்கும் புதிய பார்வையை அடைவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com