மண்ணுக்குள் பூக்கும் விசித்திர மலர்: தாய்லாந்து காட்டில் கண்டறியப்பட்ட 'டெவில் ஃப்ளவர்'!

ஒளிச்சேர்க்கை இன்றி பூஞ்சைகளின் உதவியால் மண்ணுக்கு அடியில் வாழும் அரிய வகை தாவரத்தின் ஆச்சரியமூட்டும் பின்னணி.
டெவில் ஃப்ளவர் - Devil Flower
டெவில் ஃப்ளவர் - Devil Flower
பிருந்தா நடராஜன்

என் பெயர் பிருந்தா நடராஜன். நான் எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாக ஆனந்த விகடனின் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வு பெற்று விகடன் மாணவ பத்திரிகையாளராக 1987-88 வருடம் பணியாற்றினேன். கவிதைகள் கதைகள் மற்றும் நேர்காணல் போன்ற படைப்புகள் ஆனந்த விகடன் மற்றும் ஜுனியர் விகடனில் பிரசுரமாகி உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுத ஆரம்பித்தேன். வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் கல்கியின் பணி போற்றத்தக்கது. மேலும் பல படைப்புகள் கல்கி குழுமத்திற்கு எழுதி அனுப்புவேன். கல்கியில் என்னுடைய படைப்புகள் பிரசுரம் ஆவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

Updated on: 

பூக்கள் என்றாலே பசுமையான இலைகள், தண்டுகள், சூரிய ஒளி ஆகியவை நினைவுக்கு வரும். ஆனால் இயற்கை அதற்கெல்லாம் முற்றிலும் மாறான ஒரு தாவரத்தையும் உருவாக்கியுள்ளது. தாய்லாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை மலர், பெரும்பாலான காலத்தை மண்ணுக்கு அடியில் மறைந்தபடியே கழிக்கிறது. ‘டெவில் ஃப்ளவர்’ என்று அழைக்கப்படும் இந்த வினோதத் தாவரம், தாவர உலகின் ஆச்சரியங்களை மீண்டும் நமக்கு உணர்த்துகிறது.

தாய்லாந்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தாங் பா பும் தேசியப் பூங்காவில் இந்த புதிய தாவர இனம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் ரீதியாக Thismia daemona என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன் விசித்திரமான தோற்றத்தைக் கருத்தில் கொண்டு ‘டெவில் ஃப்ளவர்’ என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2026-ல் வெளியான ஆய்வில் இதன் தனித்துவமான உடல் அமைப்புகள் மற்றும் மரபணு ஆதாரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக தாவரங்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை மூலம் தங்களுக்குத் தேவையான உணவைத் தயாரித்துக்கொள்கின்றன. ஆனால் இந்த தாவரத்திடம் குளோரோஃபில் எனப்படும் பச்சை நிறமி இல்லை. அதனால் இது ஒளிச்சேர்க்கை செய்ய முடியாது. அதற்குப் பதிலாக, மண்ணுக்குள் இருக்கும் பூஞ்சைகளுடன் தொடர்புகொண்டு அவற்றின் மூலம் ஊட்டச் சத்துகளைப் பெறுகிறது. இந்த தன்மை ‘மைக்கோ-ஹெட்டிரோட்ரோபிக்’ எனப்படுகிறது.

இந்த தாவரத்தின் மற்றொரு வியப்பான அம்சம், அதன் வாழ்க்கையின் பெரும்பகுதி நம் கண்களுக்குத் தெரியாமல் மண்ணுக்குள் அல்லது உதிர்ந்த இலைகளுக்கு அடியில் நடைபெறுவதாகும். குறிப்பிட்ட சூழல் கிடைக்கும்போது மட்டுமே அதன் விசித்திரமான மலர் வெளிப்படுகிறது.

இலைகள், கிளைகள், பச்சை நிறப் பகுதிகள் போன்ற வழக்கமான தாவர அடையாளங்கள் இல்லாததால், தரையில் கிடக்கும் சிறிய உயிரியல் அமைப்புகளில் இருந்து இதை அடையாளம் காண்பதும் ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக உள்ளது.

டெவில் ஃப்ளவர் - Devil Flower
டெவில் ஃப்ளவர் - Devil Flower

Thismia இனத்தைச் சேர்ந்த தாவரங்கள் பொதுவாக ‘ஃபேரி லாந்தர்ன்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் குழுவில் உள்ள பல இனங்கள் அரிதாகவே காணப் படுகின்றன. சில இனங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களிலேயே பதிவு செய்யப் பட்டுள்ளதால், அவற்றின் வாழிடங்களைப் பாதுகாப்பது முக்கியமானதாகிறது.

புதிய இனத்தின் கண்டுபிடிப்பு, தாய்லாந்தின் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் இன்னும் முழுமையாக அறியப்படாத உயிரினங்கள் இருக்கக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

இத்தகைய தாவரங்களின் வாழ்க்கை முறை, ஒரு உயிரினம் தன்னைச் சுற்றியுள்ள சூழலுடன் எவ்வளவு நுட்பமாக இணைந்து வாழ்கிறது என்பதற்கான சிறந்த உதாரணமாகும். வெளியில் இருந்து பார்த்தால் இது உணவைத் தயாரிக்காத, சாதாரண விதிகளுக்கு உட்படாத தாவரமாகத் தோன்றலாம்.

ஆனால் மண்ணுக்குள் இருக்கும் பூஞ்சை உலகத்துடன் உருவாக்கிய உறவுதான் அதன் உயிர்வாழ்வுக்கு அடிப்படையாகிறது. இதனால் ஒரு காடு என்பது மரங்களும் மலர்களும் மட்டுமே நிறைந்த இடம் அல்ல; மண்ணுக்குள் செயல்படும் நுண்ணுயிர்கள், பூஞ்சைகள், வேர்கள், சிறிய தாவரங்கள் எனப் பல உயிரினங்களின் சிக்கலான கூட்டமைப்பு என்பதும் புரிகிறது.

இப்படிப்பட்ட அரிய தாவரங்கள் வாழும் காடுகள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்தக் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. இயற்கையின் ஒவ்வொரு மூலையும் இன்னும் பல புதிர்களை நமக்காக வைத்திருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு உலகின் அறியப்படாத தாவர உலகை மீண்டும் நமக்கு காட்டுகிறது.

இதையும் படியுங்கள்:
எக்ஸ்ரேயில் சிக்கிய அதிர்ச்சி தகவல்… பாம்பின் உடம்புக்குள்ள இப்படி ஒரு ரகசியமா?
டெவில் ஃப்ளவர் - Devil Flower

இந்த தாவரத்தின் கண்டுபிடிப்பு, உயிரினங்களைத்தேடும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் வெளிப்படுத்துகிறது. அடர்ந்த காடுகளில் தரையைச் சுற்றியுள்ள உதிர்ந்த இலைகள் மற்றும் மண்ணுக்குள் மறைந்து கிடக்கும் மிகச் சிறிய தாவரங்களைக் கண்டறிவது எளிதானதல்ல. குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் மலர் வெளியே வருவதால், ஆராய்ச்சியாளர்கள் சரியான இடத்தையும் நேரத்தையும் தேர்வு செய்ய வேண்டி உள்ளது.

மேலும் இதுபோன்ற அரிய தாவரங்கள் காணப்படும் பகுதிகளில் காடழிப்பு, காலநிலை மாற்றம், மண் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை அவற்றின் வாழ்வைப் பாதிக்கக்கூடும்.. எனவே புதிய உயிரினங்களைப் பதிவு செய்வதுடன் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாப்பது அவசியமாகிறது.

இதையும் படியுங்கள்:
மழை பெய்ததும் கண்ணாடி போல் மாறும் தாய்லாந்தின் அதிசய பாறைக் குளம்!
டெவில் ஃப்ளவர் - Devil Flower

இன்னும் கண்டறியப்படாத பல தாவர இனங்கள் உலகின் வெப்பமண்டலக் காடுகளில் இருக்கலாம் என்பதையும் இந்த ஆய்வு உணர்த்துகிறது. மண்ணுக்கு அடியில் நடைபெறும் பூஞ்சை மற்றும் தாவர உறவுகள் பற்றிய ஆராய்ச்சிகள், எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் புதிய அறிவியல் புரிதல்களுக்கும் உதவக்கூடும். இயற்கையின் மறைக்கப்பட்ட பகுதிகளை ஆராய்வது,உயிரினப் பன்மையின் மதிப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் முக்கியப் பணியாகும்.

சூரிய ஒளியை நம்பாமல், பசுமை நிறமியின்றி, மண்ணின் அடுக்குகளுக்குள் ஒளிந்து, பூஞ்சைகளின் துணையுடன் வாழும் இந்த ‘டெவில் ஃப்ளவர்’, இயற்கையின் சிருஷ்டி திறனை வெளிப்படுத்தும் வியப்பூட்டும் ஒரு உதாரணம். நம் பார்வைக்கு எட்டாத அந்த மறைமுக உலகில் எண்ணற்ற உயிரியல் மர்மங்கள் பதுங்கியுள்ளன என்பதை இது நினைவூட்டுகிறது.

இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் இயற்கையைப் பற்றிய நமது ஆச்சரியமும், அரிய தாவரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலும் வளரட்டும்.

logo
Kalki Online
kalkionline.com