

இந்தியாவில் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே ஒரு தபால் நிலையம் இயங்குகிறது. அது தான் சபரிமலையில் ஐயப்பன் சந்நிதிக்கு பக்கத்தில் இயங்கும் தபால் நிலையம். சன்னிதானம் தபால் நிலையம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 முதல் ஜனவரி 20 வரை திறந்திருக்கும். அஞ்சல் மற்றும் அஞ்சல் குறியீடு இந்த மூன்று மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இந்த தபால் நிலையம் விஷூ பண்டிகை ஒட்டி 10 நாட்களுக்கு திறந்திருக்கும்.
கடந்த 60 ஆண்டுகளாக சபரிமலையில் சாமி ஐயப்பன், சன்னிதானம் பி.ஓ. 689713 என்ற விலாசத்தில் சபரிமலையில் தபால் நிலையம்(Ayyappan post office) செயல்பட்டு வருகிறது. தற்போது மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு நடை திறக்கப்பட்டுள்ளதால், தபால் நிலைய பணியும் சுறுசுறுப்படைந்து உள்ளது.
இந்த தபால் நிலையத்தில் நான்கு பணியாளர்கள் உள்ளனர். ஆனால், தபால் நிலையத்தில் ஒருவர் மட்டும் உள்ளார். மற்றவர்கள் பிற பணிகள் செய்வர்.
சன்னிதானத்தில் இயங்கும் தபால் நிலையத்தில் உள்ள ஒரு அறையிலேயே அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்கி உள்ளனர். ஐயப்பன் சீசன் முடிந்து வீடு செல்கின்றனர்.
சபரிமலை சன்னிதான தபால் நிலையம் 1963-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த தபால் நிலையத்தில் பயன்படுத்தப்படும் அஞ்சல் முத்திரையில் சபரிமலையின் 18-ம் படி மற்றும் ஐயப்பன் சிலை உலோகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த உலோக அஞ்சல் முத்திரை 1974-ம் ஆண்டு முதல் சன்னிதானம் தபால் நிலையத்தில் அமலுக்கு வந்தது.
நமது நாட்டில் இதுபோன்ற உலோகத்தாலான தனி அஞ்சல் முத்திரையை தபால் துறை வேறெங்கும் பயன்படுத்துவதில்லை. நாடு முழுவதும் முப்பத்தொன்பது இடங்களில் மட்டுமே வெவ்வேறு தனி தபால் முத்திரைகள் உள்ளன. அதில் சன்னிதானத்தில் உள்ள இந்த தபால் நிலையமும் ஒன்று.
இந்திய ஜனாதிபதிக்கு அடுத்து சபரிமலை ஐயப்பனுக்கு மட்டும் தான் தனி அஞ்சல் குறியீடான பின்கோடு எண்ணை இந்திய தபால் துறை வழங்கியுள்ளது. இதுபோன்று வேறு யாரும் தனி அஞ்சல் முத்திரையை பயன்படுத்த தபால்துறை அனுமதிப்பதில்லை. ஐயப்ப சுவாமியின் அஞ்சல் குறியீடு எண் 689713. இந்த அஞ்சல் குறியீட்டு எண்ணில் சபரிமலை சன்னிதான தபால் நிலையம் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக் காலமான 62 நாட்கள் மகர லக்னத்தில் மட்டும் இயங்கும். அதற்குப் பின் அஞ்சல் குறியீட்டு எண் செயலிழப்பு செய்யப்படும்.
சன்னிதான தபால் நிலையத்திற்கு தினமும் அறுபது முதல் எழுபது மணியார்டர்களும், இன்லான்டு லெட்டர், கவர், தபால் அட்டை என நூற்றிலிருந்து இருநூறு கடிதங்களும் வருகின்றன. அதில் சபரிமலை ஐயனுக்கு தங்களது இல்ல குழந்தைகள் பெயர் சூட்டு விழா, புதுமனை புகு விழா மற்றும் திருமண விழாக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியும் மேலும் பலர் தங்களது வருத்தங்களையும் குறைகளையும், வாழ்க்கை துயரங்களை ஐயனுக்கு தெரிவித்துக் கொண்டும் கடிதங்கள் அனுப்புகின்றனர்.
தேர்வு வெற்றிக்காக மாணவர்களின் கடிதங்களும் சபரிமலை ஐயப்பன் பெயரில் வந்து சேரும். இந்த கடிதங்களை ஐய்யப்பன் சார்பில் தேவஸ்வம் செயல் அலுவலர் தபால் நிலையத்தில் இருந்து பெறுகிறார்.
சன்னிதானம் ஐயப்பன் பெயரில் வரும் கடிதங்களை பெறும் தபால் நிலைய நிர்வாகிகள் அதை சுவாமி பாதங்களில் வைத்து பின்னர் கோயில் சன்னிதான அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப் படுகின்றனர்.
தபால் நிலையம் மூடும் போது அஞ்சல் முத்திரையை பத்தனம்திட்டா தபால் நிலையத்தில் உள்ள அஞ்சல் காணிப்பாளரின் லாக்கரில் வைத்து விடுகின்றனர்.
சன்னிதானத்தில் பல்வேறு துறை சார்பில் வருபவர்கள் இந்த தபால் நிலையத்தில் இருந்து அப்பம் மற்றும் அரவணை போன்ற பிரசாத பொருட்களை தங்களின் சொந்த வீடுகளுக்கு தபால் மூலம் இங்கிருந்து அனுப்பி வைக்கின்றனர். பிற தபால் நிலையங்களில் உள்ளது போன்றே சன்னிதானத்தில் உள்ள தபால் நிலையத்தில் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி வசதியும் இங்கு கிடைக்கும்.
இத்தனை சிறப்பு பெற்ற சபரிமலை சன்னிதானம் தபால் நிலையத்திற்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து, 18ம் படி மற்றும் ஐயப்பன் முத்திரையிடப்பட்ட கவர்களை வாங்கி தங்கள் வீடுகளுக்கும் ஞாபகார்த்தமாக எடுத்துச் செல்கிறார்கள்.