

உலகில் புதிய ரயில்பாதைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. மூன்றாம் அலெக்ஸாண்டர் ஜார் தென்கிழக்கு சைபீரியாவில் ட்ரான்ஸ் சைபீரியா ரயில் பாதையை அமைக்க 1891ம் ஆண்டு கட்டளை இட்டார்.
அப்போது தான் மிக அழகிய பைகால் ஏரி (Lake Baikal) பற்றி உலகிற்குத் தெரிய வந்தது. அதுவரை அந்தப் பகுதி டுங்கஸ் மற்றும் எவண்டி ஆதிவாசிகளுக்கு மட்டுமே தெரிந்த இடமாக இருந்தது.
அமாவாசைக்குப் பிறகு முதல் நாளில் தோன்றும் சந்திரப் பிறை போல மிக அழகிய வடிவில் அமைந்துள்ள பிரம்மாண்டமான ஏரி பைகால்.
636 கிலோமீட்டர் நீளமும் சராசரியாக 48 கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஏரி இது. இதன் பரப்பளவு 31500 சதுர கிலோமீட்டர் ஆகும். அதாவது, அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் மற்றும் கனெக்டிகட் ஆகிய இரு மாகாணங்களின் பரப்பளவைச் சேர்த்தால் வரும் பரப்பைக் கொண்டது இது.
உலகின் மிக அதிக ஆழம் கொண்ட ஏரியும் இது தான்! இதன் ஆழம் 1620 மீட்டர் ஆகும். அது மட்டுமல்ல உலகின் மிகப் பழமையான ஏரியும் இது தான்!
எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வெடிப்பு ஒன்று ஏற்பட நிலங்கள் நகர்ந்தன; மலைகள் உருவாயின. நடுவில் அழகிய ஏரி ஒன்று உருவாக ஆரம்பித்தது. இரண்டரை கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பைகால் என்ற இந்த ஏரி உருவானது.
இதில் மலைக்க வைக்கும் முந்நூறு நதிகள் நீரைக் கொண்டு வந்து சேர்த்தன. ஒரே ஒரு நதியான அங்க்ரா மட்டும் இதிலிருந்து நீரை வெளியே கொண்டு சென்றது. இதில் உள்ள நீரின் கொள்ளளவு 23000 கியூபிக் கிலோமீட்டர் ஆகும்.
விளக்கமாகச் சொல்வதென்றால் உலகில் உள்ள சுத்த நீரில் ஐந்தில் ஒரு பங்கை இந்த ஏரி கொண்டுள்ளது. 1862ல் ஒரு பூகம்பம் இங்கு ஏற்பட ஏரியிலிருந்து நீர் வெளியேறி ஒரு புதிய வளைகுடாவையே உருவாக்கி விட்டது.
600 வகையான தாவர வகைகளும் 1500 வகையான மிருக வகைகளும் இந்தப் பகுதியில் உள்ளன. உலகில் மூன்றில் ஒரு பங்கு ஷ்ரிம்ப் வகை மீன்கள் இங்குள்ள சுத்த நீரில் வாழ்கின்றன. இவற்றில் 255 வகைகள் இங்கு உண்டு!
வேறு எங்கும் காண முடியாத 50 வகை மீன் இனங்கள் இங்கு வாழ்கின்றன. பெரிய அளவிலான மீன் ஒன்று அசிபென்ஸர் என்று அழைக்கப்படுகிறது. அதன் நீளம் ஆறு அடி. எடையோ நூறு கிலோ!
இங்குள்ள பல மீன்கள் பற்றிய செய்திகளைக் கேட்டால் பிரமித்து விடுவோம்! ரயில் போக்குவரத்து இந்தப் பகுதியில் தொடங்கவே மீன் வியாபாரம் சூடு பிடித்தது. மக்களின் வருகையும் இங்கு அதிகரித்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி இறுதியில் ஏரியின் நீர் பனிக்கட்டியாக மாறி விடும். ஐந்து மாதங்கள் பனிக்கட்டியாகக் காட்சி அளிக்கும் இந்த ஏரியில் பனிக்கட்டியின் கனம் நான்கு அடியாக இருக்கும்.
ஆனால் இங்குள்ள நெர்பா சீல் என்ற ஒரு வகை மீன் பனிக்கட்டியில் துளைகளைப் போட்டு, தான் உயிர்வாழ்வதற்கான ஏற்பாட்டைச் செய்து கொள்கிறது.
ரஷியாவின் பெருமையைக் கூட்டும் இந்த அழகிய ஏரி உலக அதிசயங்களுள் ஒன்றாகும்!