விடுதலைப்போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலைக்கு வீரவணக்கம் செலுத்துவோம்!

விடுதலை போரில் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போரிட்டு இன்னுயிர் ஈந்தவர்களில் கொங்கு நாட்டின் தீரரான தீர்த்தகிரி என்ற மாவீரன் தீரன் சின்னமலைக்கு தனியிடம் உண்டு. இன்று தீரன் சின்னமலைக்கு 269-வது பிறந்த நாள்
தீரன் சின்னமலை சிலை
தீரன் சின்னமலை சிலை
Published on

விடுதலை போரில் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போரிட்டு இன்னுயிர் ஈந்தவர்களில் கொங்கு நாட்டின் தீரரான தீர்த்தகிரி என்ற மாவீரன் தீரன் சின்னமலைக்கு தனியிடம் உண்டு. கொங்கு வேளாளர் மரபில் பயிர குலத்தில் ரத்தினம் சர்க்கரை-பெரியாத்தா தம்பதியின் மகனாக தீர்த்தகிரி என்ற சின்னமலை 1756-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே மேலப்பாளையத்தில் பிறந்தார்.

சின்னமலை தமிழ் செய்யுளில் வீரச்சுவை பாடல்களை விரும்பி படித்தார். தமிழ் அறிவு மட்டும் இல்லாமல் தமிழ்ப்பற்றும் சின்னமலைக்கு அதிகமாகவே இருந்தது. சிலம்ப பயிற்சியுடன் கட்டுத்தடி வீச்சு, சொட்டைமுனை தாக்குதல், வாள்வீச்சு, புலிப்பாய்ச்சு, மற்போர் கலைகளை கற்றுத்தேர்ந்தார். கருகருவென வளர்ந்த தலைமுடி, கழுத்து வரை நீண்டு சுருண்டு அடர்த்தியாக இருக்கும். கத்தியை வளைத்தது போல் மீசை. அகன்ற நெற்றி, அதன் நடுவே வட்டமான பொட்டு என முகத்தோற்றமும், நடையின் கம்பீரமும் சின்னமலை யாருக்கும் அடங்கிப்போகும் சுபாவம் உடையவர் அல்ல என்பதை தெளிவாக உணர்த்தும். கனிவான பேச்சில் கண்ணியமும் நிறைந்திருக்கும்.

கொங்கு நாட்டை கொங்குநாட்டுக்காரர்கள் தான் ஆள வேண்டும். அன்னிய நாட்டுக்காரன் நம்மை ஆள்வதை, அதிகாரம் செலுத்துவதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சின்னமலை தீர்க்கமாக கூறி வந்தார். கொங்குநாட்டை மைசூர் மாமன்னர் ஹைதர் அலி ஆண்டபோது, அவருடைய பணியாட்கள் வரிப்பணத்தை வசூலித்து விட்டு குதிரையில் சென்றபோது அவர்களை வழிமறித்து சின்னமலை கேள்வி கேட்டார். கொங்கு நாட்டு வரிப்பணம் மைசூர் கஜானாவுக்கு செல்வதை நினைத்து கோபம் கொப்பளித்தது. அவர்களிடம் இருந்து வரிப்பணத்தை சின்னமலை பறித்தார்.

மைசூர் மன்னருக்கு என்ன பதில் சொல்வது என்று கேட்ட வீரனை பார்த்து சின்னமலை, ‘வீரனே, வடக்கே சென்னிமலை, தெற்கே சிவன்மலை, இரண்டு மலைகளிலும் முருகன் எழுந்தருளியுள்ளார். சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை வந்து வரிப்பணத்தை வாங்கிக்கொண்டதாக சொல்' என்று கட்டளையிட்டார். அன்றிலிருந்து தீர்த்தகிரியாக இருந்தவர் சின்னமலை என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். சின்னமலையின் புகழ் கொங்குநாடு முழுவதும் பரவியது. மைசூருக்கு செல்லும் வரிப்பணத்தை சின்னமலை அடிக்கடி எடுத்துக்கொண்ட செய்தி, சீரங்கப்பட்டணத்தில் திப்பு சுல்தான் அரசவையிலும் எதிரொலித்தது.

திப்புசுல்தான் சின்னமலையின் வீரத்தை அறிந்து ஆங்கிலேயரை எதிர்க்க தனது படைத்தளபதியாக நியமித்தார். கொங்குப்படையினருக்கு தீவிர போர்ப்பயிற்சி அளிக்கப்பட்டது. திப்புசுல்தான் படையில் சின்னமலை தலைமையிலான கொங்குப்படை சிறப்பாக போரிட்டது. கொங்கு படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வெள்ளையர்களை அலறவிட்டனர். இருப்பினும் திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்கு பின்னர் கொங்குபடையுடன் சின்னமலை கொங்குநாட்டுக்கு திரும்பினார்.

மேலப்பாளையம் அருகே ஓடாநிலையில் கோட்டை கட்டிய சின்னமலை, வீரர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்தார். வடக்கே மைசூரு, மேற்கே கேரளா, கிழக்கே சேலத்தையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றியிருந்தனர். ஆனால் இடையில் உள்ள இன்றைய கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தின் பெரும்பகுதி சின்னமலை அதிகாரத்துக்கு உட்பட்டதாக இருந்தது.

சின்னமலை மீது போர் தொடுக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். 1801-ம் ஆண்டு ஒருநாள் கர்னல் மேக்ஸ்வெல் தலைமையில் ஆங்கிலேயர்கள் பெரும்படையோடு வந்து காவிரிக்கரையில் போரிட்டனர். சின்னமலை போரிட்டு ஆங்கிலேய படையை ஓட, ஓட துரத்தி வெற்றி கண்டார்.

1802-ம் ஆண்டு ஒருநாள் 10 ஆயிரம் பேரை கொண்ட பெரிய படையுடன் சங்ககிரியில் இருந்து கர்னல் மேக்ஸ்வெல் தலைமையில் ஆங்கிலேயர்கள் ஓடாநிலைநோக்கி வந்தனர். சின்னமலையும், கர்னல் மேக்ஸ்வெல்லும் நேரடியாக போரிட்டனர். இறுதியில் கர்னல் மேக்ஸ்வெல்லின் தலையை சின்னமலை வெட்டி சாய்த்தார். இதைக்கண்ட ஆங்கிலேய படை புறமுதுகிட்டு ஓடியது.

காலாட்படையால் சின்னமலையை வெல்ல முடியாது என நினைத்த ஆங்கிலேயர்கள் 3 ஆயிரம் குதிரை படையினரை திரட்டி சங்ககிரி கோட்டையில் இருந்து கர்னல் ஹாரிஸ் தலைமையில் புறப்பட்டு அறச்சலூருக்கு வந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும், தனி ஆளாக சின்னமலை குதிரையில் எதிர்நோக்கி சென்றார். மின்னல் வேகத்தில் வந்த சின்னமலை, எறிகுண்டை எடுத்து ஹாரிஸ் ஏறி வந்த குதிரை மார்பில் வீசினார். பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. குதிரைக்கு காயம் ஏற்பட்டு ஓட, ஹாரிஸ் நிலைகுலைந்து போனான். குதிரைகள் நாலாபுறமும் சிதறி ஓடின. இந்த போரில் சின்னமலை வெற்றி பெற்றதால் அறச்சலூர் போர் என்று அழைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
உருட்டி விட்டான் பாறை, தோல் உரிச்சான் மேடு, தொங்க விட்டான் குகை இதெல்லாம் உள்ள கோட்டை எங்குள்ளது தெரியுமா?
தீரன் சின்னமலை சிலை

3 போரில் ஆங்கிலேயர்களை ஓட, ஓட துரத்திய சின்னமலையை வீழ்த்த ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டி வந்தனர். இதனால் சின்னமலையும் அவற்றை எதிர்நோக்கி உஷாராகவே இருந்தார்.

சின்னமலையை சூழ்ச்சி செய்து தான் பிடிக்க முடியும் என்று முடிவு செய்து ஆங்கிலேயர்கள் அதற்காக தக்க நேரம் பார்த்து காத்திருந்தனர். கருமலையில் சமையல்காரர் நல்லப்பனுக்கு பணத்தாசையை காண்பித்து சின்னமலையை பிடிக்க ஆங்கிலேயர்கள் திட்டம் வகுத்தனர். ஆங்கிலேயரின் பணத்தாசைக்கு நல்லப்பன் சிக்கினான். அந்த நாளும் வந்தது. சின்னமலை, தம்பி கிலேதார், பெரியதம்பி ஆகியோர் வீட்டில் அமர்ந்து சாப்பிடும்போது சமையல்காரர் நல்லப்பன், சமிக்ஞை கொடுக்க, வீட்டுக்கு அருகே சுரங்கப்பாதை வழியாக ஏற்கனவே மறைந்து இருந்த ஆங்கிலேய படையினர் வீட்டிற்குள் வந்தனர். சின்னமலை நிலைமையை அறிந்து நல்லப்பனை ஓங்கி அறைய அந்த இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்து இறந்தார். அதற்குள் ஆங்கிலேய படையினர் சின்னமலை மற்றும் 2 சகோதரர்களையும் கைது செய்தனர்.

1805-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி, ‘எங்களுக்கு கப்பம் கட்ட மறுத்ததால், கீழ்படிய மறுத்ததால் அந்த குற்றத்துக்காக தூக்கிலிட உத்தரவிடப்படுகிறது' என்று மார்ஷல் கூறினான். சின்னமலை மற்றும் அவரது சகோதரர்களும் தாங்களே கழுத்தில் கயிற்றை மாட்டினார்கள். 3 முறை முரசு ஒலித்தது. கயிறு 4 பேரின் கழுத்தையும் இறுக்கின. சுதந்திர சுடர் அணைந்தது. கொங்கு மாவீரர்கள் கொடியவர்களின் சூழ்ச்சிக்கு இரையானார்கள். சின்னமலையின் வாழ்வு சமயசார்பின்மைக்கும், சமுதாய ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியது.

விடுதலை போரில் ஒரு விடிவெள்ளியாக திகழ்ந்தவர் தீரன் சின்னமலை. அவரின் புகழ் சுடரொளியாய் என்றும் ஒளிவீசிக்கொண்டே இருக்கும். அவர் வீரம் என்றும் நிலைத்து நிற்கும். இன்று அவருக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

இதையும் படியுங்கள்:
தீரன் சின்னமலை வீர வரலாறு:218 ஆம் ஆண்டு நினைவு தினம்!
தீரன் சின்னமலை சிலை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com