உருட்டி விட்டான் பாறை, தோல் உரிச்சான் மேடு, தொங்க விட்டான் குகை இதெல்லாம் உள்ள கோட்டை எங்குள்ளது தெரியுமா?

சங்ககிரி மலைக்கோட்டை
சங்ககிரி மலைக்கோட்டை

ங்ககிரி மலைக்கோட்டை ஈரோட்டில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டத்தில் "சங்கரி துர்க்கம்" என்ற மலையின் மேல் காணப்படும் கோட்டை இது. 

சேலத்திலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இது சங்கு போன்ற தோற்றம் கொண்டதால் இதற்கு "சங்ககிரி" என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 

இங்கு ஆள் இறங்கும் குழி, உருட்டிவிட்டான் பாறை, தோல் உரிச்சான் மேடு, தொங்கவிட்டான் குகை ஆகியவற்றில் தண்டனை பெறுபவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு கொல்லப்படுவதால் இதற்கு சங்ககிரி என்று பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்.

சங்ககிரி மலைக்கோட்டை
சங்ககிரி மலைக்கோட்டை

வரலாற்று சிறப்புமிக்க இந்த கோட்டை விஜயநகர அரசர்களால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின் ராணுவ துருப்பாக திப்பு சுல்தானுக்கும், பிறகு ஆங்கிலேயர்களால் கொங்கு நாட்டிற்கான வரி வசூல் கிடங்காகவும்  பயன்பட்டது.

1805 ல் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் இங்கு தூக்கிலிடப்பட்டார் என்று வரலாறு கூறுகிறது. இன்றளவும் அந்த தூக்கு மேடை இங்கு காணப்படுகிறது.

மலை உச்சியில் ஒரு சிறிய அனுமார் கோவிலிலும் அதன் அருகே வரதராஜ பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவில் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் மட்டும் பூஜை செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் இந்த கோவில் பூட்டியே உள்ளது.

இது தமிழகத்தின் மிக உயரமான மலைக் கோட்டையாகும். சங்ககிரி கோட்டை 700 அடி உயரத்தில் உள்ள மலையில் கட்டப்பட்டுள்ளது. 12 கோட்டை மதில்களுடன் உள்ள இந்த கோட்டையில் 10 நுழைவாயில்கள் உள்ளன.

சங்ககிரி மலைக்கோட்டை
சங்ககிரி மலைக்கோட்டை

கோட்டையின் பிரதான நுழைவாயில் மைசூர் கேட் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய வாயில் வழியாக உள்ளது.

இக்கோட்டையின் மலை அடிப்பகுதியிலிருந்து உச்சி வரை ஒன்பது வாயில்கள் உள்ளன. அழகான சிற்பங்கள் நிறைந்த கோட்டை இது. கோட்டையில் தானிய கிடங்கு,2 மசூதிகள், பெருமாள் கோவில், வீரபத்திரர் கோவில் மற்றும் படைவீடு என பல கட்டடக்கலை இடுப்பாடுகள் உள்ளது. நாயக்கர் காலத்து கட்டிடக்கலை கூறுகள் இதில் உள்ளன.

கோட்டையின் உச்சியில் சென்ன கேசவ பெருமாள் கோவில் உள்ளது. மலையடிவாரத்தில் சோமேஸ்வர சுவாமி கோவில் ஒன்று உள்ளது. தஸ்தகீர் மகான் தர்கா, கெய்த் பீர் மசூதி என இரண்டு இஸ்லாமிய வழிபாட்டு தலங்களும் உள்ளது.

சேலத்தில் உள்ள முக்கிய வரலாற்று இடமாகும் இக்கோட்டை. ஆனால் பராமரிப்பு இல்லாததால் இந்த புகழ்பெற்ற கோட்டை சிதிலமடைந்துள்ளது.

புதுக்கோட்டை வாசல்
புதுக்கோட்டை வாசல்

புலிமுக வாசல், கல் கோட்டைவாசல், கடிகார வாசல், இரண மண்டபம், புதுக்கோட்டை வாசல், ரொக்க திட்டி வாசல், இடி விழுந்தான் பாறை, கம்பெனி கேட் என ஒன்பது நுழைவாயில்களை தாண்டி சென்றால் 10 ஆவது கோட்டையின் கடைசி வாயில் இதைத் தாண்டினால் மலை உச்சிக்குச் சென்று விடலாம்.

இதையும் படியுங்கள்:
என்னது? இயந்திரங்கள்கூட கற்றுக்கொள்ளுமா? இயந்திரக் கற்றல் என்றால் என்ன?
சங்ககிரி மலைக்கோட்டை

இந்தப் பத்தாவது வாசல் நுழையும் போது பூதம் முகம் மற்றும் கஜேந்திர மோட்சம் பொறிக்கப்பட்டிருக்கும். எந்த திசையில் இருந்து பார்த்தாலும் ஒரு குரங்கு உருவம் தெரிவது போல் ஒரு சிற்பம் செதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

மலையில் உள்ள பாறைகள் மிக அழகான முறையில் செதுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. கோட்டை கட்ட பயன்படுத்தப்பட்ட செங்கற்களும் மிகவும் உறுதி வாய்ந்தவையாக உள்ளது.

இக்கோட்டை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் பாதுகாப்பில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com