ஆம்லெட், அசைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவாகும். பசியோடு இருக்கும்போது எளிதாக சமைத்து சாப்பிட ஏற்றது. ஒன்று அல்லது இரண்டு முட்டைகளைக் கொண்டு ஆம்லெட் தயாரித்து விடலாம். 15 ஆயிரம் முட்டைகளைக் கொண்டு ஆம்லெட் தயாரித்துக் கொண்டாடும் கலாசாரத்தைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நெப்போலியன் போனபர்ட் பிரான்ஸ் நாட்டை ஆண்ட பேரரசர். ராணுவ மற்றும் போர் தந்திரங்களுக்குப் புகழ் பெற்றவர். இத்தாலி மற்றும் எகிப்தில் அவரது பிரச்சாரங்கள் குறிப்பிடத்தக்கவை. பிரான்சில் அரசியல் அதிகாரத்தைப் பெற அவரது ராணுவ வலிமை உதவியது. நெப்போலியன் போர்களுக்கு பெயர் பெற்றவர். பிரான்சில் குறிப்பிடத்தக்க நிர்வாக சட்ட மற்றும் கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தினார்.
மெகா சைஸ் ராட்சத ஆம்லெட்: ஒருமுறை பிரான்சின் தெற்கில் உள்ள பெஸ்ஸியர்ஸ் நகரத்தின் வழியாக அவரது படைகள் அணிவகுத்திருக்கும்போது ஒரு சிறிய சத்திரத்தில் நெப்போலியன் தங்கினார். அந்த விடுதியின் காப்பாளர் அவருக்கு ஒரு ஆம்லெட்டை பரிமாறினார். அந்த உணவின் சுவை அவருக்கு மிகவும் பிடித்துப்போனது. அடுத்த நாள் தனது படைகளுக்கு ஒரு பெரிய ஆம்லெட் தயாரிக்க உத்தரவிட்டார். நகரத்தில் உள்ள அனைத்து முட்டைகளையும் கைப்பற்றி அதை வைத்து ஒரு பெரிய மெகா சைஸ் ஆம்லெட் தயாரிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். அப்படி உருவானதே மெகா சைஸ் ராட்சத ஆம்லெட்.
ராட்சத ஆம்லெட் திருவிழா: இந்த வரலாற்றுக் கதையால் ஈர்க்கப்பட்டு பெஸ்ஸியர்ஸ் நகரம் ஒவ்வொரு ஈஸ்டருக்கும் ராட்சத ஆம்லெட் திருவிழாவை நடத்துகிறது. இது 1973 முதல் கொண்டாடப்படுகிறது. அந்தத் திருவிழாவின்போது 15 ஆயிரம் முட்டைகளைப் பயன்படுத்தி ஒரு மிகப்பெரிய பேனில் தயாரிக்கப்படுகிறது இந்த ஆம்லெட். இந்த செய்முறை ஒரு சமூக முயற்சியாகும். பல சமையல்காரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இதில் பங்கேற்பார்கள். முட்டைகளை உடைத்து பெரிய துடுப்புகளைக் கொண்டு ஆம்லெட் செய்வார்கள். இது சமையல் நகர சதுக்கத்தில் நடைபெறுகிறது. அந்த ஆம்லெட் பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் இடையே விநியோகிக்கப்படுகிறது. இந்தப் பாரம்பரியம் மற்ற நாடுகளுக்கும் பரவியது. பெல்ஜியத்தில் உள்ள மால்மெடி நகரமும் அமெரிக்காவின் லூதியானாவில் உள்ள அபே வில்லி நகரமும் இதேபோன்ற திருவிழாக்களை நடத்துகின்றன. அங்கும் மாபெரும் ஆம்லெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
கலாசார பாரம்பரிய நிகழ்வு: மாபெரும் ஆம்லெட் திருவிழா ஒரு சமையல் நிகழ்வு என்பதை விட, சமூக உணர்வையும் ஒத்துழைப்பையும், உணவைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள மகிழ்ச்சியையும் குறிக்கிறது. இது ஒரு தனித்துவமான கலாசார பாரம்பரிய நிகழ்வாகவும் இருக்கிறது. சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது மட்டுமின்றி, உள்ளூர் பெருமையையும் இந்தத் திருவிழா வளர்க்கிறது.
ஜூலை 9, தேசிய ஆம்லெட் திருவிழா: அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி (இன்று) தேசிய ஆம்லெட் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று ‘உங்கள் முட்டைகளை ஒரே கூடையில் வைக்க வேண்டாம்’ என்கிற தலைப்புடன் அந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். பசியோடு இருக்கும்போது அதிக முட்டைகளை உடைத்து ஊற்றி ஒரே ஒரு ஆம்லெட் செய்து யாரும் சாப்பிட மாட்டார்கள். அதேபோல தங்கள் வாழ்வாதாரத்திற்கும் மற்றும் பிற முயற்சிகளுக்கும் ஒன்றே ஒன்றை மட்டும் நம்பி கொண்டிராமல் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டும் என்கிறார்கள்.