
ஜாதகம் கணிப்பவர்கள் ஒரு குழந்தை எங்கு, எந்த நாட்டில் அதிலும் அங்குள்ள எந்த ஊரில் பிறந்தது, நேரம், மாதம், வருடம் என்று ஒவ்வொன்றாக பார்த்துக் கேட்டு கேட்டு தான் ஜாதகத்தை கணிப்பார்கள். அப்படி கணிக்கும் பொழுது இந்தியாவில் பிறந்த குழந்தைக்கும் அதே நேரத்தில் அயல்நாடுகளில் பிறந்த குழந்தைக்கு ஒரே மாதிரி ஜாதகம் இருக்காது. அதே போல் நம் நாட்டவர்கள் கணிப்பதற்கும் அயல் நாட்டவர்கள் கணிப்பதற்கும் வித்தியாசங்கள் அதிகமாக உள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கு பார்ப்போம்...
இந்திய ஜோதிடத்தில் கிரகங்களின் உண்மையான பலத்தை அறிய ஏராளமான கணித முறைகள் உள்ளன.
ஆனால் வெளிநாட்டு ஜோதிடத்தில் அப்படியல்ல. அங்கே உள்ள கணித முறைகள் மிக மிக எளிதானவை. பலன் கிடையாது. திரேக்காணம், சப்தாம்சம், தசாப்தம் என்பவையெல்லாம் வெளிநாட்டு ஜோதிடத்தில் கிடையாது.
கிரக மாற்றத்தின் நிலையை சந்திரன் நின்ற நிலையில் இருந்து இந்தியர்கள் கணித்துப் பார்க்கின்றனர். ஆனால் மேல் நாட்டவரோ கிரக மாற்றத்தின் நிலையை சூரியனுடைய நிலையில் இருந்து கணித்துப் பார்க்கின்றனர்.
மேல்நாட்டவரின் ராசி மண்டலம் சாயன ராசி எனப்படும் . இந்துக்களுடையது நிராயனம் எனப்படும்.
ஒரு சூரிய உதயம் முதல் மறு சூரிய உதயம் வரை ஒரு நாள் என நம் நாட்டில் கணக்கிடுகின்றனர். ஆனால் மேல் நாட்டவரோ நள்ளிரவு 12 மணியை நாள் தொடக்கமாக வைத்திருக்கின்றனர்.
யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கிரகங்களுக்கு மேல் நாட்டவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் நம் நாட்டில் இதை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
அவர்கள் அட்சாம்சம், ரேகாம்சம் ஆகியவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் நம் நாட்டில் இவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.