
‘ஜோதிடம் உண்மையா? பொய்யா?’ என்கின்ற விவாதம் இவ்வுலகம் உள்ளவரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். கிரகங்கள்தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்று தீர்க்கமாக நம்புகிறார்கள் ஜோதிட ஆதரவாளர்கள். ஜோதிடம் ஒரு கலை என்று ஒரு சாராரும், இல்லை… அது ஒரு விஞ்ஞானம் என்று வேறு சிலரும் கூறுகிறார்கள்.
ஜோதிடம் இராமாயணம், மகாபாரதம் காலத்திலேயே இருந்திருக்கிறது. ஸ்ரீராமன் சுமார் 7000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்ததாக ஒரு சாரார் கூறுகின்றனர். இராமாயணம் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் திரேதா யுகத்தில் நடந்தது என்று சொல்பவர்களும் உண்டு. 7000 வருடங்கள் என்று வைத்துக் கொண்டாலும், ஒரு விஷயம் ஏழாயிரம் வருடங்களாக நிலைத்து, நீடித்து நிற்கிறது என்றால் அதில் கொஞ்சமாவது உண்மை இருக்க வேண்டும் அல்லவா?
கிரகங்கள் மனித வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன? கிரகங்களின் கதிர்வீச்சு பூமியிலும் அதில் வாழும் உயிரினங்களின் மீதும் எப்போதும் விழுந்து கொண்டே இருக்கின்றன. கிரகங்கள் சூரியனின் ஒளியை வாங்கி தம் இயல்பு குணங்களையும் கலந்து, தம் கதிர் வீச்சுகளை பூமிக்கு அனுப்பிக்கொண்டே இருக்கின்றன. கிரகங்கள் வான்வெளியில் பயணிக்கும்போது அதன் இயல்புகளும், சக்திகளும் மாறிக்கொண்டே இருக்கும்.
ஒரு குழந்தை பிறக்கும் அந்த வினாடியில், ஒவ்வொரு கிரகமும் வான்வெளியில், தான் நின்ற இடத்திற்கேற்ப தமது கதிர்வீச்சுகளை அந்தக் குழந்தையின் மீது செலுத்துகின்றன. அதன்படி அந்தக் குழந்தையின் தலைவிதி அந்த வினாடியே நிர்ணயிக்கப்படுகிறது.
உதாரணமாக, புதன் கிரகம் புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும். அவர் உச்ச பலத்துடன் இருக்கும்போது பிறக்கும் குழந்தை புத்திசாலியாக இருக்கிறது. சூரியன் தன்னம்பிக்கை மற்றும் தலைமைப் பண்பை கொடுக்கும் கிரகம். அவர் உச்சமாக இருக்கும்போது பிறக்கும் குழந்தை தன்னம்பிக்கை மிக்கதாகவும் தலைமை பண்புகள் நிறைந்ததாகவும் இருக்கிறது. இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.
ஜோதிடம் என்பது மாபெரும் கடல். ஒரு பிறவியில் ஜோதிடத்தை யாராலும் முழுமையாக கற்றறிய முடியாது. ஜோதிடர்கள் வெவ்வேறு குருமார்களிடம் கற்று இருப்பார்கள். ஜோதிட நூல்கள் மாற்றுக் கருத்துகளைக் கொண்டிருக்கின்றன. பஞ்சாங்கம் மாறுபடுகின்றது. பிறந்த நேரங்கள் துல்லியமாக இருப்பதில்லை. எனவே, எந்த ஜோதிடராலும் நூறு சதவீதம் துல்லியமாக ஒருவரின் பலன்களை கணிக்கவே முடியாது.
ஜோதிடத்தை ஒரு ‘வழிகாட்டி கையேடு’ (Reference Guide) போல் பயன்படுத்தலாம். கெட்ட நேரம் நடக்கும்போது வாழ்க்கையில் பெரிய ரிஸ்க் எடுக்காமல் சமாளிக்கலாம். நல்ல நேரம் நடக்கும்போது எதிலும் துணிகரமாக செயல்பட்டு வாழ்க்கையில் வேகமாக முன்னேறலாம். விபத்து காலங்களில் எச்சரிக்கையாக பயணிக்கலாம்.
பொதுவாக, ஒரு ஜாதகத்தைப் பார்த்தவுடன் அவர் வாழ்க்கையில் முன்னேறுவாரா? மாட்டாரா? என்று ஒரு நல்ல ஜோதிடர் எளிதில் சொல்லி விடுவார். ஒருவருக்கு திருமணம் தாமதமாகுமா, பூர்வீக சொத்துக்கள் கிடைக்குமா? போன்றவற்றை ஒரு திறமையான ஜோதிடர் எளிதாகச் சொல்லி விடுவார்.
இன்றைய ஜோதிட முறைகளில் நிறைய குறைபாடுகள் உள்ளன. அதனால்தான் ஜோதிடர்கள் ஒரேமாதிரியான பலன்களைக் கூறுவது அபூர்வமாகி வருகிறது. இவற்றையெல்லாம் ஆராய்ந்து சரி செய்தால் ஜோதிடம் நம் வாழ்க்கைக்கும் நம் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவக் கூடும் என நம்பலாம்.
‘ஜோதிடம் பொய். அது ஒரு குப்பை’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஜோதிடர்கள் சில விஷயங்களை சரியாக கணிப்பது தற்செயலாக நடக்கும் செயல். அவ்வளவுதான். அதில் துளியும் உண்மையில்லை என்பதுதான். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. எனவே, விமர்சனங்கள் தேவையில்லை. இரண்டு பக்கம் கொண்டதுதானே நாணயம்?