இந்தியாவின் மிகச்சிறந்த கட்டடக்கலைக்கு புகழ் பெற்ற ஜெயின் ஆலயங்களில் ஒன்று தில்வாரா கோயில். ராஜஸ்தானின் ஒரே மலைவாசஸ்தலமான மவுண்ட் அபுவிலிருந்து 2.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தில்வாரா கோயில் 11 மற்றும் 16ம் நூற்றாண்டுகளுக்கிடையே கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்தக் கோயில் அதன் நேர்த்தியான பளிங்கு கட்டடக்கலை மற்றும் சிக்கலான கல் சிற்பங்களுக்கு பெயர் பெற்றது. ஐந்து கோயில்களை உள்ளடக்கிய வளாகமான இந்த தில்வாரா கோயில் ஜைனர்களின் புனிதத் தலமாகவும் விளங்குகிறது. பளிங்குக் கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோயில்கள் உலகில் இருக்கும் மிக அழகான ஜைன கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த வளாகத்திலிருக்கும் ஐந்து கோயில்கள் ஸ்ரீ மகாவீரர், ஸ்ரீ ஆதிநாத், ஸ்ரீ பார்ஷவநாத், ஸ்ரீ ரிஷப்தாவ் மற்றும் ஸ்ரீ நேமிநாத் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் நேர்த்தியான கைவினைத்திறனை எடுத்துக்காட்டுகின்றன. இந்தக் கோயில்கள் முற்றிலுமாக வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளன.
மகாவீர் சுவாமி கோயில்: ஜைன மதத் துறவிகளில் மிக முக்கியமானவராகக் கருதப்படும் மகாவீரரை மூலவராகக் கொண்ட இக்கோயில் 1582ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் உள்ள சுவர்களில் சிறிய மிக நுணுக்கமான சிற்பங்களைக் காணலாம்
விமல் வசஹி கோயில்: 1031ம் ஆண்டு கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கோயிலில் ஜைன மதத்தை தோற்றுவித்தவரும் அம்மதத்தின் முதல் தீர்த்தங்கரருமான ஸ்ரீ ஆதிநாத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் உள்ளே உள்ள அறைகள் பளிங்கு கற்களில் செதுக்கப்பட்ட சமண துறவிகளின் சிறிய உருவங்களைக் கொண்டுள்ளன. மேல் கூரைகள் விதவிதமான பூக்கள் மற்றும் தாமரை இதழ்களின் வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயில் தூண்கள் இசைக்கருவிகளை வாசிக்கும் பெண் உருவங்களின் செதுக்கல் வேலைப்பாடுகளால் நம்மை ஈர்க்கின்றன.
கர்தார் வசஹி கோயில்: இந்தக் கோயில் 1458 - 59க்கு இடையில் மண்டிகா வம்சத்தாரால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் மிக உயரமான சன்னிதியையும், நான்கு பெரிய மண்டபங்களையும் கொண்டுள்ளது. இந்தக் கோயிலின் தூண்களில் உள்ள சிற்பங்கள் சமண கோயில்களின் கட்டடக்கலை மேன்மைக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இங்குள்ள சுவர்களில் கஜுராஹோ கோயிலும், கோனார்க் சூரியக் கோயிலிலும் இருப்பது போல சிற்ப்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ நேமி நாத்ஜி கோயில்: வஸ்துபால், தேஜ்பால் சகோதரர்களால் 1230ம் ஆண்டு நேமிநாத் என்பவருக்காகக் கட்டிய கோயில். இந்தக் கோயிலில் இருக்கும் மத்திய மண்டபத்தின் மேற்கூரையில் பளிங்கு கற்களில் குடையப்பட்ட கல் ஆபரணங்கள் நம்மை நிச்சயம் பிரம்மிப்பில் ஆழ்த்தும். இந்தக் கோயிலின் மண்டபங்களில் ஒன்றில், ஜெயின் துறவிகளின் 360 சிறிய சிலைகள் உள்ளன. இவை அனைத்தும் வெள்ளை பளிங்குக் கற்களில் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால்,
ஸ்ரீ நேமி நாத்ஜியின் சிலை மட்டும் கருப்பு பளிங்கு கல்லினாலானது. ஹச்திசாலா என்ற மண்டபத்தில் உயிர்ப்புடன் வடிவமைக்கப்பட்ட 12 யானைகளின் சிற்பங்கள் உள்ளன. உலகிலேயே மிக அழகான மற்றும் நுணுக்கமான பளிங்கு சிற்பங்கள் உள்ள கோயிலாக இது சொல்லப்படுகிறது.
பீதல்ஹார் கோயில்: இந்தக் கோயிலில் உள்ள பெரும்பாலான சிலைகள் பித்தளை உலோகத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டவை. அழகிய கட்டடக் கலை நுணுக்கங்களைக் கொண்ட தில்வாரா கோயில் சமண மதத்தினர் மட்டுமல்லாது, மற்ற மத மக்களும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும்கூட வருகை தரும் வகையில் அமைந்துள்ள ஒரு தலமாக விளங்குகிறது. இதற்கு முக்கியக் காரணம் இந்தக் கோயில் முழுக்க பளிங்குக் கற்களால் வடிவமைக்கப்பட்டு தனித்துவமாகத் திகழ்கிறது. மேலும், பளிங்குத் தூண்கள் மற்றும் கூரைகளில் உள்ள சிக்கலான கல் செதுக்கல்கள் உண்மையிலேயே பிரம்மிக்க வைக்கின்றன.