இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் பொதுவாகக் காணப்படும் ஒரு சுவையான வெப்பமண்டலப் பழம் சப்போட்டா. இதில் ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, இதில் வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் சப்போட்டா பழம் சிறப்பான இடம் பிடிக்கிறது.
25 வகையான வேதியியல் பொருட்களைக் கொண்ட மருத்துவ குணம் கொண்ட பழம் சப்போட்டா. இதன் இலை, மரப்பட்டை கூட மருந்தாகப் பயன்படுகிறது. தொண்டை, உணவுக் குழாய், வயிற்றுப் புற்று நோயை சரி செய்யும் ஆற்றல் இந்தப் பழத்துக்கு உண்டு.
சப்போட்டாவில் உள்ள வைட்டமின்கள் இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் தன்மை கொண்டது. இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கின்றது. இதனால் கொலஸ்டிரால் பிரச்னை உள்ளவர்களுக்கு இது ஒரு அற்புதமான இயற்கை மருந்தாகும். தினமும் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிட்டால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பை மெல்ல குறைத்து விடலாம். இதயம் சம்பந்தமான பிரச்னைகளிலிருந்தும் நம்மை பாதுகாக்கும். மேலும், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளையும் தடுக்கும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.
சப்போட்டா பழச்சாறுடன், தேயிலை சாறு கலந்து சாப்பிட இரத்த பேதி குணமாகும். தூக்கமின்மையினால் அவதிப்படுபவர்கள் இரவில் படுக்கும் முன்பு ஒரு டம்ளர் சப்போட்டா பழச்சாறு குடித்தால் நிம்மதியாக தூங்குவார்கள். மனப்பதற்றம், மன அழுத்தம் உள்ளவர்கள் ஒரு டம்ளர் சப்போட்டா பழச்சாறு சாப்பிட சரியாகும். ஜப்பான் நாட்டில் தேர்வு எழுதச் செல்லும் குழந்தைகள் மனப் பதற்றத்தைக் குறைக்க தேர்வுக்கு முன் சப்போட்டா பழச்சாறு சாப்பிடுவது அங்கு வழக்கமாக உள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் அசைவு உணவு சாப்பிட்ட பிறகு சப்போட்டா பழம் சாப்பிடும் பழக்கம் இன்றும் அங்கு வழக்கமாக உள்ளது. தினமும் ஒரு சப்போட்டா பழம் சாப்பிட தலை முடி கொட்டும் பிரச்னை சரியாகும். சப்போட்டா அதிக ஊட்டச்சத்துகள் தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். சப்போட்டாவில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை எலும்புகளை வலுப்படுத்தவும், செரிமான மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
சப்போட்டா பழத்தில் நல்ல நார்ச்சத்து இருப்பதால், கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது செரிமானத்திற்கு மிகவும் உதவும். இது குமட்டலைப் போக்கவும், வயிற்றில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்களின் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் சப்போட்டா பழம் உதவுகிறது. இந்தப் பழத்தில் நல்ல அளவு மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது.
சப்போட்டாவில் அதிக சுக்ரோஸ் உள்ளடக்கம் உள்ளது. இது உடனடி ஆற்றலை வழங்க உதவுகிறது. இந்தப் பழத்தை காலை வேளையில் சிற்றுண்டியாக சாப்பிடுவது, கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல ஆற்றலை பராமரிக்க சிறந்த வழியாகும். இந்தப் பழத்தில் அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரை உள்ளடக்கம் இருப்பதால், ஒரு நாளைக்கு 100 கிராம் பழங்களை மட்டுமே உட்கொள்வது நல்லது.