மறைந்து வரும் பிரிமனை! மீட்டெடுக்க முயற்சிப்போம்!

Pirimanai
Pirimanai

பண்டைய தமிழர்கள் பயன்படுத்தி வந்த பொருள்கள் பலவும் தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொன்றாக அழிவின் விளிம்பில் இருக்கிறது. இப்படியான பழைய பொருள்களை மீட்டெடுக்க வேண்டுமானால் அதன் பட்டியல் நீண்டுகொண்டே போகும்‌. இப்பட்டியலில் இருக்கும் ஒரு பொருளான பிரிமனை குறித்து இப்போது காண்போம்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கூட பிரிமனையின் பயன்பாடு அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது முற்றிலுமாக குறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். பொதுவாக கிராமங்களில் பிரிமனையானது தேங்காய் நார் அல்லது வைக்கோல் பயன்படுத்தி செய்யப்படும். நாகரிகம் வளர்ந்து விட்டதால் தானோ என்னவோ இந்த பிரிமனை இப்போது இரும்பு மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்டு விற்பனையாகிறது.

கிராமங்களில் அவரவர் தேவைக்கு ஏற்ப பொங்கல் வைப்பதற்கு முன்பாக காலையில் வைக்கோல் பயன்படுத்தி பிரிமனையை புதிதாக தயாரிப்பார்கள். ஒருவர் கீழே அமர்ந்து கொண்டு வைக்கோலை சேர்த்துக் கொண்டே இருக்க, சிறுவர்கள் அதனை ஒரு குச்சியில் இறுக்கமாக பிடித்துக் கொள்ள, வைக்கோலில் நீண்ட தடிமனான கயிறு போல செய்வார்கள். இதனை வட்டமாக சுருட்டி பிரிமனை உருவாக்கப்படும். தைப் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பானையில் இருக்கும் கரி தரையில் பட்டு விடக் கூடாது எனக் கருதி பிரிமனையின் மேல் வைக்கப்படும்.

பொங்கல் பண்டிகையின் போது செய்யப்படும் இந்தப் பிரிமனை, பண்டிகை முடிந்த பிறகு சமையலறையில் சாதம், குழம்பு வைத்து பிறகு தரையில் படாமல் இருக்க உதவி வந்தது. ஆனால் இப்போது கிராமங்களில் கூட பிரிமனை செய்வதைப் பார்ப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. ஏனெனில் நாகரிகத்தின் வளர்ச்சி கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. முன்பெல்லாம் விறகடுப்பில் செய்த சமையல் பாத்திரத்தில் கரி இருக்கும் என்பதால் பிரிமனையின் பயன்பாடு அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது சிலிண்டர் பயன்பாடு அதிகரித்துள்ளதால் கரி அவ்வளவாக பூசுவதில்லை. இதனால் பிரிமனையின் பயன்பாடும் குறைந்து விட்டது.

இதையும் படியுங்கள்:
மறைந்து வரும் பாரம்பரிய விறகடுப்பு சமையல்!
Pirimanai

பொதுவாக பிரிமனை பயன்படுத்தி வந்ததில் ஒரு வாழ்வியல் தத்துவமும் அடங்கியுள்ளது. ஆண்பாவம் என்ற திரைப்படத்தில் வரும் ஒரு வசனம் பிரிமனையின் வாழ்க்கைத் தத்துவத்தை எடுத்துரைக்கிறது. “புதிதாக திருமணமான மகனைப் பார்த்து மனைவியை எப்படிப் பார்த்துக் கொள்வாய் எனத் தந்தை கேட்பார். அதற்கு பிரிமனைப் போல் மனைவியைத் தாங்குவேன் என்று பதிலளிப்பார் மகன்.” இது முற்றிலும் உண்மை தான். பானையின் பாரத்தை தாங்கி நிற்கும் பிரிமனைப் போல மனைவியைக் கணவன் தாங்க வேண்டும் என்ற வாழ்வியல் தத்துவத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

வைக்கோலால் செய்யப்படும் பிரிமனை பழையது ஆன பிறகு தூக்கி எறிந்தாலும், அது மண்ணிற்கு உரமாகி விடும். நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளும் நமக்கு நன்முறையில் பயனளித்தது மட்டுமின்றி, வாழ்க்கைக்கு உதவும் அடிப்படைத் தத்துவங்களையும் எடுத்துரைக்கிறது.

அழிவின் விளிம்பில் இருக்கும் பிரிமனைகளை மீண்டும் பயன்படுத்தி மீட்டெடுக்கும் முயற்சியில் நாம் களம் காண வேண்டியது அவசியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com