
நாணயத்தின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. நாணயம் என்பது பொருட்களையும், சேவைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு பரிமாற்ற அலகாகும்.
பண்டைய தமிழர்களின் நாணயங்கள் பொன்னாலும், வெள்ளியாலும், செம்பாலும் செய்யப்பட்டன. அவை அக்கம், மாடை, கழஞ்சு, அன்றாடு, நற்காசு, கருங்காசு, ஈழக்காசு என அழைக்கப்பட்டன. பண்டைய காலத்தில் மக்கள் பொருட்களை பண்டமாற்று முறையில் பரிமாறி கொண்டதற்கு ஆதாரமாக சம்பளம் என்ற சொல் சான்றாகும். ‘சம்பு என்றால் நெல், அளம் என்றால் உப்பு’ என்றும் பொருள். இயற்கை பொருளாதாரம் மாறி பண பொருளாதார முறை வந்தவுடன் கட்டிப்பொன், காணம், காசு, பொன், அணா, பைசா என வழங்கும் சொற்கள் தமிழில் வந்தது.
ஆதி நாணயம்
கி.மு 680 இல் கிரேக்க நாட்டில் ஆசியா மைனரில் 'லிடியா' நகரில் வாழ்ந்த வணிகர் ஒருவரின் முத்திரை பதித்த காசே உலகின் முதல் காசு எனக் கருதப்படுகிறது. இக்காசு பொன்னும், வெள்ளியும் கலந்த ’எலக்ட்ரம்' என்னும் கலப்பு உலோகத்தால் செய்யப்பட்டது.
நாணயச் சாலை
காசுகளை அச்சடிக்கும் இடத்தை அக்கசாலை என சிலப்பதிகார உரையில் எடுத்தாளப்பட்டுள்ளது. தங்கசாலை, கம்பட்டம், இடங்கன் சாலை எனவும் நாணய சாலைக்கு தமிழ் மொழியில் சொற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
நாணயங்கள் தயாரிக்க பயன்படும் உலோகம்
செம்பு, ஈயம், வெள்ளி, ஒருசில பொற்காசுகள் ஆகியவை வைகை, தாமிரபரணி, அமராவதி, தென்பெண்ணை, காவிரி ஆறுகளின் மேற்பரப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பு
சதுரம், நீள் சதுரம், போன்ற வடிவில் சேர, சோழ, பாண்டியன், மலையமான் மன்னர்களின் காசுகள் கிடைத்துள்ளன. நெல்லிக்காய் வடிவிலும், வேப்பம் பழம் வடிவிலும் சில பொற்காசுகளை சேகரிப்பாளர் சேகரித்துள்ளனர். காசுகளின் புறத்தில் வில், அம்பு, புலி, அங்குசம் மற்றும் மீன் சின்னம் பதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் முகப்பில் யானை, குதிரை, மாடு, சிங்கம், மீன், ஆமை சின்னங்களும் பொறிக்கப் பட்டுள்ளன. காசுகளின் எடை 500 மி.கி முதல் 16 கிராம் வரை பல்வேறு அளவுகளில் செப்பு காசுகள் கிடைத்துள்ளன.
யானை சின்னம்: இதன் நோக்கம் அரசர்களின் வலிமையையும், மேன்மையையும், காட்டுவதற்காக இருந்திருக்கலாம்.
மாடு அல்லது காளை: செல்வத்தை குறிப்பிட மாடு சின்னம் கருதப்பட்டது. வலிமையையும், பொலிவையும், காட்டும் சின்னமாக காளை அமையும்.
மீன் சின்னம்: வளமான வாழ்வையும், செல்வச் செழிப்பையும், நீரின் ஆற்றலையும், கடல் கடந்து தம் ஆட்சி பரந்து உள்ளதையும் காட்ட மீன் சின்னம் இடம் பெற்றுள்ளது. மீன்கள் தன் குஞ்சுகளை கண் இமைக்காது காப்பது போல அரசர்கள் தம் மக்களை பகைவர்களிடமிருந்து காத்து ரட்சிக்க வேண்டும் என்பதை காட்ட மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது எனலாம்.
புலி சின்னம்: வேங்கை புலி எப்படி பகைவரை தாக்கி வீழ்த்தும் என்பதை சுட்டிக் காட்ட புலி சின்னம் பொறிக்கப்பட்டிருக்கலாம்.
குதிரை சின்னம்: வேந்தன் தன் பகை மன்னர்களை வென்று தன் பெருமையை நிலைநாட்ட பிற மன்னர்களுடன் குதிரை மீது ஏறி போர் புரிகிறான். குதிரைகள் வேகம் மற்றும் வீரத்திற்கு பெயர் பெற்றவை.
சிங்கம்: கானகத்தில் வாழும் மிருகங்களிலும், ராஜாவாக சிங்கம் கருதப்படுவது போல மண்ணகத்து மன்னன் சிங்கம் போன்றவன் என்பதை காட்ட நாணயங்களில் சிங்க சின்னத்தை பொறித்துள்ளனர்.