பரபரப்பான சென்னையில் அமைந்த அமீர் மஹால் அரண்மனை பற்றி தெரியுமா?

Do you know about Amir Mahal Palace?
Do you know about Amir Mahal Palace?https://indiancolumbus.blogspot.com
Published on

சென்னையில் வசிக்கும் மக்களுக்கு பொழுதுபோக்கு இடங்களாக கடற்கரை, ஷாப்பிங் மால்கள், சினிமா தியேட்டர்கள்தான் தெரிந்திருக்கிறது. சென்னையில் அதுவும் பரபரப்பான இடமான ராயப்பேட்டை பகுதியில் மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க அமீர் மஹால் உள்ளது. 1798ம் ஆண்டு இந்தோ சராசெனிக் பாணியில் பிரிட்டிஷ் நிறுவனத்தின் நிர்வாக அலுவல்களுக்காகக் கட்டப்பட்டது. 1855ம் ஆண்டில் நவாப்களின் அதிகாரப்பூர்வ இல்லமான சேப்பாக்கம் அரண்மனை ஏலம் விடப்பட்டு சென்னை அரசால் வாங்கப்பட்டது.

நவாப் குடும்பம் ஷாதி மஹால் என்ற கட்டடத்திற்கு இடம் பெயர்ந்தது. இருப்பினும் ஷாதி மஹால் ஆற்காடு இளவரசர் வசிக்கும் இடமல்ல என்று கருதிய ஆங்கிலேயர்கள் அவருக்கு ராயப்பேட்டையில் அமீர் மஹாலை வழங்கினர். அலுவலக கட்டடத்தை அரண்மனையாக மாற்றி 1876ம் ஆண்டு நவாப் தனது குடும்பத்துடன் அமீர் மஹாலுக்கு குடிபெயர்ந்தார். இன்றும் இந்த மஹால் ஆற்காடு நவாப்களின் வசிப்பிடமாக இருந்து வருகிறது.

அரச குடும்ப மாளிகை என்றால் நம் நினைவுக்கு வருவது மைசூர் பேலஸ், தாஜ்மஹால், திருமலை நாயக்கர் மஹால் ஆகியவைதான். சென்னையில் இப்படி ஒரு அரச மாளிகை இருக்கிறது என்பது நிறைய பேருக்குத் தெரியாது. ஏறத்தாழ 150 ஆண்டுகள் தாண்டியும் இந்த அமீர் மஹாலின் தோற்றம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

இந்த மஹாலின் நுழைவாயிலின் இரண்டு பக்கங்களிலும் இரு கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களின் மேற்பகுதியில் 'நகர கானா' எனப்படும் முரசு மண்டபம் உள்ளது. மிகப்பெரிய கோட்டை சுவரை கடந்து சென்றால் (பரிந்துரை கடிதம் இருப்பவர்களை மட்டும் உள்ளே அனுமதிக்கிறார்கள்) அழகிய பெரிய அரண்மனை நம் கண் முன்னே தெரிகிறது. இந்த அமீர் மஹால் 14 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 70  அறைகளை கொண்டுள்ள இந்த அரண்மனை மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. முதல் தளத்தில் தர்பார் மண்டபமும் அதற்கு பின்பகுதியில் மிகப்பெரிய பொது விருந்து அறையும் உள்ளது. நவாபின் தற்போதைய வாரிசுகளான முஹம்மது அப்துல் அலி மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் தங்கள் குடும்பங்களுடன் அரண்மனையில் வசித்து வருகின்றனர்.

அமீர் மஹால் உட்புறத் தோற்றம்
அமீர் மஹால் உட்புறத் தோற்றம்http://kungumam.co.in

நீண்ட சாலையின் வலது புறத்தில் அரசு வழங்கிய பீரங்கி வண்டிகள் மரப் பெட்டிகள் தாங்கி வரிசையாக இருக்கின்றன. ஓங்கி உயர்ந்த மாளிகை ஒன்று மிக அழகாக தென்படுகிறது. முகப்பினை தாண்டி உள்ளே நுழைந்ததும் சிவப்பு கம்பளம் நம்மை அரச மரியாதையோடு வரவேற்கிறது. இரு பக்கங்களும் விருந்தினர்கள் அமர்வதற்கு ஏற்ப நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மஹாலின் ஒவ்வொரு பகுதியும் கலை நுணுக்கத்துடன் மிகவும் அழகாகக் கட்டப்பட்டுள்ளது. பூ வேலை செய்யப்பட்ட திரைச்சீலைகள், அழகிய தொங்கும் அரேபிய தொங்கு விளக்குகள், சுவர்களில் நவாப்களின் ஓவியங்கள், பட்டு நூலால் எழுதப்பட்ட இஸ்லாமிய இறை வசனங்கள் என இப்படி ஒரு குட்டி முகலாயப் பேரரசையே அங்கு நம்மால் காண முடிகிறது.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகப்பெரிய பீரங்கிகளில் ஒன்றான தஞ்சாவூர் பீரங்கியைப் பற்றித் தெரியுமா?
Do you know about Amir Mahal Palace?

மாளிகையின் நடுப்பகுதியில் இருக்கும் படிக்கட்டு வழியாக முதல் தளத்திற்குச் செல்ல முடிகிறது. அங்கு மிகப்பெரிய அரண்மனை போன்ற வரவேற்பறை, நடுநாயகத்தில் நவாப்கள் அமரும் உயர்ந்த நாற்காலிகள், பட்டுக்கம்பளத்தில் சிவப்பு நிற பட்டு கம்பளத்தில் மிளிரும் தரைப்பகுதி என ராஜ தர்பார் போல் காட்சியளிக்கிறது.

அதன் பின்பகுதியில் மிகப்பெரிய பொது விருந்து அறை மற்றும் பல ரகசிய அறைகளும் இந்த மஹாலில் உள்ளன. ஆனால், இந்த அறைகள் விருந்தினர் பார்வைக்கு வைக்கப்படுவதில்லை. இப்போதும் அங்கு நவாப்களின் குடும்பம் வசித்து வருவதால் பொதுமக்கள் பார்வைக்கு விடாமல் தடை செய்யப்பட்ட இடமாகத்தான் இது உள்ளது. உயரத்தில் பொருத்தப்பட்ட குறுவாள்களும், கத்திகளும், துப்பாக்கிகளும், தோட்டாக்களுடன் இணைக்கப்பட்ட துப்பாக்கிகளும் நவாப்களின் போர்க் குணங்களை நம் கண் முன்னே நிறுத்துகின்றன. அழகிய பல்லக்குகள், தூண்கள், பளிங்கு தரைகள் என மிகவும் அற்புதமாக இந்து சாராசெனிக் பாணியில் கட்டப்பட்டுள்ளது. அமீர் மஹாலின் உட்பகுதியில் ஒரு சிறிய கிரிக்கெட் விளையாட்டு மைதானமும் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com