மனிதன் போர்க்களங்களைத் தொடர்ந்து நவீனப்படுத்தி வந்துள்ளான். அதன் அடிப்படையில் 14ம் நூற்றாண்டு முதல், மனிதன் பீரங்கிகளைப் பயன்படுத்தத் தொடங்கினான். முதலில் கற்குண்டுகளை பீரங்கி குண்டுகளாகப் பயன்படுத்தத் தொடங்கிய அவன், பின்னர் இரும்பு குண்டுகள், வெடிகுண்டுகள் என்று பீரங்கிகளை இன்னும் நவீனப்படுத்தினான். கற்குண்டுகளைப் பயன்படுத்தியபோது, பெரிய அளவில் பீரங்கிகளை உருவாக்கினான். பின்னர், எளிதில் கையாளத்தக்க இரும்பு குண்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், பீரங்கிகளின் விட்டத்தின் அளவும் குறையத் தொடங்கியது.
உலகின் மிகப்பெரிய பீரங்கிகளில் 7ஆவது இடத்தில் உள்ள, தஞ்சாவூர் பீரங்கி, பீரங்கிகளின் விட்ட அளவீடான கேலிபர் அளவீட்டின்படி 635 மில்லி மீட்டர் விட்டத்தினை உடையது. அது. 1620ம் ஆண்டு, தஞ்சாவூர் நாயக்கர்கள் வம்சாவழியைச் சேர்ந்த இரகுநாத நாயக்கரால், டேனிஷ் தொழில்நுட்ப உதவியுடன், தஞ்சாவூரில் கொல்லுமேட்டில் உருவாக்கப்பட்டது. இது தஞ்சாவூர் பீரங்கி, இராஜகோபால பீரங்கி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், இரகுநாத பீரங்கி என்றும் தாசிமேட்டு பீரங்கி என்றும் அழைக்கப்படுகிறது. இது 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே, உலோகவியல் தொழில்நுட்பத் துறையில் தஞ்சாவூர் பகுதியைச் சார்ந்த கொல்லர்கள் அடைந்த முன்னேற்றத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
தஞ்சாவூர் கோட்டையின், கிழக்குக் கொத்தளத்தில் 25 அடி உயர மேடையில் இது நிறுவப்பட்டுள்ளது. இதனால் இது, பீரங்கி மேடு எனப்படுகிறது. இந்தப் பகுதி கீழ அலங்கம் எனப்படுகிறது. கீழவாசல் அதாவது கிழக்குவாசல் வழியாக எதிரிகள் நுழையும் பட்சத்தில் அவர்களைத் தாக்குவதற்காக இது நிறுவப்பட்டது. இதனைத் தூக்குவதற்கு எட்டு சங்கிலிகள் தேவைப்பட்டிருந்தன. அவற்றில் தற்போது, இரண்டு மட்டுமே எஞ்சியுள்ளன. கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் ஆனபோதும், இது துரு பிடிக்காமல் இருப்பது, உலோகவியலில் அந்தக் காலத்திலேயே அடைந்த முன்னேற்றத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
இந்த பீரங்கி, கொல்லப்பட்டறையில், இரும்பினை அதிக வெப்பத்தில் உருக்கி, இணைத்து, சம்மட்டியால் அடித்து இணைக்கும் முறையில் பலஇரும்புச் சங்கிலிகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது போர்ஜூடு இணைப்பு இரும்பு (Forged welded iron) என்றழைக்கப்படுகிறது. இந்த 26 அடி நீள பீரங்கி, 22 டன் எடையை உடையது. 94 இரும்பு சங்கிலிகளை இணைத்து உருவாக்கப்பட்டது. இது தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது.
1650ம் ஆண்டு, எதிரிகள் கிழக்குப் புறமாக நுழைய முயன்ற போது, இந்த பீரங்கி பயன்படுத்தப்பட்டது. வரலாற்றில் போரில் பயன்படுத்தப்பட்ட 4 ஆவது மிகப்பெரிய பீரங்கியாக இது கருதப்படுகிறது.
தஞ்சாவூர் செல்லும்போது, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பீரங்கியைக் காணத் தவறாதீர்கள். இது தஞ்சாவூர் இரயில் நிலையத்திலிருந்து 2.7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.