‘சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டி விடவா’? பாடல் தெரியும்; புடவை தெரியுமா?

Chinnalapatti sungudi saree
Chinnalapatti sungudi sareeImg Credit: exporters india

சுங்குடிச் சேலை என்றாலே மதுரை சுங்குடிச் சேலைதான் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், தற்போது மதுரையைப் பின்னுக்குத் தள்ளி, சின்னாளபட்டி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டுவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் முதலில் ‘கண்டாங்கிச் சேலைகள்’ எனப்படும் ஒரு வகை பட்டுச்சேலைகள் அதிக அளவில் நெய்து விற்பனைக்கு அனுப்பப்பட்டன. இந்தச் சேலைகளுக்கு ‘சின்னாளபட்டி பட்டுச்சேலை’ என்று கூடப் பெயர் இருந்தது. ‘சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டி விடவா’ என்று பாட்டெல்லாம் பாடப்பட்டது. பெண்கள் மத்தியில் பிரபலமாக இருந்த, சின்னாளபட்டி கண்டாங்கி சேலைகளுக்கு ஒரு கட்டத்தில் மவுசு குறையத் தொடங்கியது. மதுரை சுங்குடிச் சேலைகளின் மேல் ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. சின்னாளபட்டி கண்டாங்கி சேலைகளின் விற்பனை குறையத் தொடங்கியது.

இந்நிலையில் ஜவுளி விற்பனையாளர்கள், சின்னாளபட்டி நெசவாளர்களிடம், கண்டாங்கிச் சேலைகளின் உற்பத்தியைக் குறைத்து, சுங்குடிச் சேலைகளை உற்பத்தி செய்து தர வேண்டினர். அதனைத் தொடர்ந்து, 1972 ஆம் ஆண்டில் சின்னாளபட்டி நெசவாளர்கள், மதுரையில் சுங்குடிச் சேலை உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நெசவுத் தொழிலாளர்கள் சிலரை அழைத்து வந்து, சுங்குடிச் சேலை உற்பத்தியைத் தொடங்கினர்.

சுங்கு என்ற தெலுங்குச் சொல்லுக்கு, ‘புடவையின் மடிப்பு’ என்று பொருள். புடவையை மடித்துப் பல்வேறு முடிச்சுகளை உருவாக்கி, அதன் மூலம் புதிய வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டதால் இச்சேலைகளுக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கிறது.

அதாவது, வெள்ளையாக நெய்யப்பட்ட துணிகளைப் பெறும் சாயமேற்றும் தொழிலாளர்கள், அதில் தேவையான சிறு சிறு முடிச்சுகளைப் போடுகின்றனர். அதன் பிறகு, கட்டைகளில் அத்துணிகளை ஏற்றித் தேவையான நிறங்களைச் சாயமேற்று வெயிலிலும், காற்றிலும் உலர வைக்கின்றனர். நன்கு உலர்ந்த பின்பு, அத்துணியில் போடப்பட்ட முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன. முடிச்சுகள் இருந்த இடங்களில் வெள்ளை நிறத்தில் முடிச்சுகளுக்கேற்றபடி முன்பேத் திட்டமிடப்பட்ட வடிவங்கள் தோன்றுகின்றன. இது மிகவும் நுட்பமாகச் செய்ய வேண்டிய பணி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த முறையைத் தவிர்த்து, தற்போது சேலைக்குத் தேவையான வடிவங்களை அச்சிடும் முறையும் பயன்படுத்தப்படுகிறது. அழகிய விலங்குகள் மற்றும் பறவைகள், கடவுள் படங்கள் என்று பல்வேறு உருவங்கள் சேலைகளில் அச்சிடப்பட்டு வருகின்றன. நவீன காலத்திற்கேற்ற வகையில் கணினி உதவியுடன் சேலையில் பல வண்ணங்களில் பல உருவங்கள் உருவாக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முந்தைய 'சுடுமண்' சிற்பங்கள்!
Chinnalapatti sungudi saree

சின்னாளபட்டியில் சுமார் 60 சதவீத மக்கள் ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கு 50-க்கும் அதிகமான ஜவுளி உற்பத்தியாளர்கள், 40-க்கும் அதிகமான சாயப்பட்டறைகள், 55-க்கும் மேற்பட்ட அச்சுக்கூடங்கள் இருக்கின்றன. சின்னாளபட்டியில் சுங்குடிச் சேலைகள் மட்டுமின்றி, ஜவுளி விற்பனையாளர்கள் வேண்டுகோளுக்கேற்றபடி வேட்டிகள், பிற வகைச் சேலைகளும் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன.

சின்னாளபட்டியில் உற்பத்தி செய்யப்படும் சுங்குடிச் சேலைகளை ஜவுளி விற்பனையில் ஈடுபட்டிருக்கும் வணிகர்கள் நேரில் வந்து விலைபேசி வாங்கிக் கொண்டு, அதனை நகரங்களில் இருக்கும் ஜவுளி விற்பனையகங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். சில உற்பத்தியாளர்கள், தாங்களே நேரடியாக ஜவுளி விற்பனையகங்களுக்கு அனுப்பி வைப்பதுமுண்டு.

சின்னாளபட்டி சுங்குடி சேலைகளுக்கு, இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் வரவேற்பு இருப்பதால், சில உற்பத்தியாளர்கள் ஏற்றுமதித் தொழிலையும் செய்து வருகின்றனர்.

தற்போது புதிய ஆடை ரகங்கள் நிறைய வந்து விட்டன. இருப்பினும், பெண்களிடம் சின்னாளபட்டிச் சுங்குடிச் சேலைகளுக்கு இன்னும் மதிப்பு குறையவில்லை, இச்சேலைகளின் மீதான விருப்பம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. சின்னாளபட்டி சுங்குடிச் சேலைகளின் விலை, அதன் தரத்திற்கேற்ப, 350 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com