குமரி பேச்சிப்பாறை அணை பற்றி தெரியுமா உங்களுக்கு?

பேச்சிப்பாறை அணை
Pachiparai Dam

மிழகத்தில் உள்ள அணைக்கட்டுகள் பெரும்பாலும் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டவைதான். நமக்கு அணைக்கட்டுகள் கட்டிக் கொடுத்ததில் அவர்களின் பங்கு அதிகம் என்று சொன்னால் அது மிகையில்லை. அதேசமயம், அவர்கள் கட்டிக் கொடுத்த அணைகள் இன்று வரை நிலைத்து நிற்பது எவ்வளவு பெரிய ஆச்சரியம்.

ஆங்கிலேயே பொறியாளர்கள் கட்டிய ஒவ்வொரு அணையிலும் ஒவ்வொரு சிறப்பம்சங்கள் உண்டு. மேட்டூர் அணை தொடங்கி, பல அணைகளில் நாம் ஆங்கிலேயரின் கைவண்ணத்தைப் பார்க்கலாம். நவீனமாக யோசித்து, நவீன காலம் என்று சொல்லும் நாம் இப்பொழுது ஒரு அணை கட்ட முடியுமா என்றால் மௌனம்தான் பதில். கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் பேச்சிப்பாறை அணை பற்றியும், அது கட்டப்பட்ட பொறியாளர்களை அந்த மக்கள் கடவுளாய் வணங்குவது பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

தமிழகத்தின் தென்கோடியில் உள்ளது கன்னியாகுமரி மாவட்டம். இந்த மாவட்டத்தின் பாசனத்தின் உயிராக விளங்குவது பேச்சிப்பாறை அணை. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் மூலம் குமரி மாவட்டத்தில் இரு போக சாகுபடிகள் நடக்கின்றன. இந்த அணை 1897ம் ஆண்டு தொடங்கி 1906ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அணை கட்டி 111 ஆண்டுகள் ஆன பின்னரும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இது, முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டது.

இதைக் கட்டியவர், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இன்ஜினீயர் ஹம்ப்ரே அலெக்ஸ்சாண்டர் மிஞ்சின். இவர், இங்கிலாந்து நாட்டின் ஐரீஸ் பகுதியில், கடந்த 1868ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி பிறந்துள்ளார். அலெக்ஸ்சாண்டர் மிஞ்சினின் தந்தை ஜான் வில்லியம் மிஞ்சின், ஊட்டியில் தேயிலைத் தோட்ட அதிகாரியாகப் பணியாற்றினார். அலெக்ஸ்சாண்டர் மிஞ்சின், இன்ஜினீயரிங் படித்து முடித்தவர். எனவே, மகனை இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்தார். இந்தியா வந்ததும், மதுரையில் அரசாங்க இன்ஜினீயராகப் பணியில் சேர்ந்தார்.

ஹம்ப்ரே அலெக்ஸ்சாண்டர் மிஞ்சின் நினைவிடம்
Memorial to Humphrey Alexander Minch

அப்போது, தற்போதைய கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை கட்டத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான திட்டமும் உருவானது. இதற்கு, அலெக்ஸ்சாண்டர் மிஞ்சின் இன்ஜினீயராக நியமிக்கப்பட்டார். நாகர்கோவில் கலெக்டர் ஆபீஸ் அருகே அவருக்கு பங்களாவும் ஒதுக்கப்பட்டது. அங்கிருந்து பேச்சிப்பாறை அணை கட்டுமானப் பணிகளைக் கவனித்து வந்தார். 1906ம் ஆண்டு அணை கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டன. மொத்த நீளம் 425.51 மீட்டர். இதனால், குமரி மாவட்டத்தின் கடைவரம்பு நிலங்களும் பயனடைந்தன. இந்த அணையின் உயரம், முதலில் 42 அடியாக இருந்தது. பின்பு 1964ம் ஆண்டு மேலும் 6 அடிகள் அதிகப்படுத்திட முடிவு செய்து 1969ம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக உயர்த்தப்பட்டது.

பேச்சிப்பாறை அணையை உருவாக்கிய இன்ஜினீயர் ஹம்ப்ரே அலெக்ஸ்சாண்டர் மிஞ்சின், மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் 1913ம் ஆண்டு  செப்டம்பர் 25ம் தேதி இறந்தார். அவர் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த திருவிதாங்கூர்  மன்னர், அவர் உடலை பேச்சிப்பாறை அணைப் பகுதியிலேயே அரசு மரியாதையுடன் அடக்கம் செய்து, அந்தப் பகுதியில் கல்லறை கட்டவும் உத்தரவிட்டார். அதன்பேரில், அங்கு கல்லறை கட்டப்பட்டு இன்று நினைவுச் சின்னமாகக் காட்சியளிக்கிறது.

இதையும் படியுங்கள்:
'கப்ளி வீட்'டில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
பேச்சிப்பாறை அணை

அணைக்கட்டுக்கு வேலை செய்ய  நெல்லை மாவட்டம், பணகுடி, வள்ளியூர்க்காரர்களும்  கடுக்கரை மலை தாண்டிப்போய் வேலையில் சேர்ந்தார்கள். மிஞ்சின் என்பதை மக்கள் 'மூக்கன் துரை' என்று அழைத்தனர். அணை கட்டப்போன தெற்கு வள்ளியூர் அம்மச்சி கோயில் சின்ன பெருமாளும் அவரது  உறவினர்களும் ஊருக்குத் திரும்பி வந்து, ஏற்கெனவே தாங்கள் வணங்கிவந்த பேச்சியம்மன், சுடலை மாடசாமி கோயிலில் கூடுதல் பீடம் ஒன்று போட்டு , மூக்கன் துரை மிஞ்சினையும் வழிபடத் தொடங்கினர். கொடை விழா எடுத்தனர். வெள்ளைக்கார சாமி, மூக்கன் துரை சாமி என்றும் மக்கள் இவரை அழைக்கின்றனர். ஹம்ப்ரே அலெக்ஸ்சாண்டர் மிஞ்சினின் 150வது பிறந்தநாள் விழா, 2017ம் ஆண்டு குமரியில் விவசாயிகளால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

அணை கட்டும் அளவிற்கு இப்பொழுது நாம் சிந்திக்கவில்லை என்றாலும், கட்டி வைத்த அணைகளை காப்பாற்ற வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். அணைகள் வெறும் நீர் பாசனத்திற்காக மட்டுமல்ல, கலாசாரத்தின் சின்னமாகவும் திகழ்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com