பழந்தமிழர்கள் தங்கள் வாழ்வியலை இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தனர். குறிப்பாக வேளாண்மை அவர்களின் முக்கிய தொழிலாக இருந்ததால், மழை என்பது அவர்களது வாழ்வின் பொக்கிஷமாகும். மழையின் அளவை துல்லியமாக அளவிட நவீன கருவிகள் இல்லாத காலத்தில், பழந்தமிழர்கள் தங்கள் அறிவையும், இயற்கையை நோக்கிய கூர்மையான பார்வையையும் கொண்டு மழையை அளவிடும் பல்வேறு முறைகளைக் கையாண்டனர்.
ஆட்டுக்கல் - பழங்கால மழைமானி
பழந்தமிழர்கள் மழையின் அளவை அளவிட பயன்படுத்திய மிகவும் பிரபலமான கருவி ஆட்டுக்கல். இது வெறும் மாவு அரைக்கும் கருவி மட்டுமல்ல மழை பெய்த அளவை அளவிடவும் பயன்படுத்தப்பட்டது. வீட்டு முற்றத்தில் இருந்த ஆட்டுக்கல்லின் குழி மழை பெய்தால் நீரால் நிரம்பும். அந்த நீரின் அளவை விரலால் அளந்து பார்த்து அது ஒரு உழவுக்கு ஏற்ற மழையா அல்லது இரண்டு உழவுக்கு ஏற்ற மழையா என்பதை தீர்மானிப்பார்கள்.
மழை பொழிவின் பழைய கணக்கு முறை “செவி” அல்லது “பதினு” எனப்படும். இது 10 மில்லி மீட்டர் மழைக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்திற்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர். அறிவியல் கணக்குப்படி 18 மில்லி மீட்டர் வரை மழை பெய்தால்தான் அதை ஒரே முறையில் மண் உறிஞ்சும். ஆக எத்தனை பதினு மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துகொண்டு முதல் உழவுக்கு தயாராகுவார்கள்.
தமிழர்கள் மழைக்குரிய பெயர்களை அதன் தன்மைக்கேற்ப வைத்திருந்தனர். தூறல், சாரல், மழை, பெருமழை, அடைமழை, கனமழை போன்றவை சில உதாரணங்கள். இதன் மூலம் அவர்கள் மழையின் தன்மையை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மழையைப் பற்றி “மாறாநீர்” என குறிப்பிட்டுள்ளார். இது நீரின் தன்மை நிலையானது என்பதை உணர்த்துகிறது. இது பழந்தமிழர்களின் நீர் மற்றும் மழை குறித்த ஆழமான அறிவின் சான்றாகும்.
சில சமயங்களில் மழையை கணிக்க இயற்கை அறிகுறிகளையும் பயன்படுத்தினர். வானில் தோன்றும் மேகங்கள், காற்றின் திசை, விலங்குகளின் நடத்தை போன்றவற்றை கனித்து மழை வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்வர். நவீன கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பே பழந்தமிழர்களின் மழை அளக்கும் முறைகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. அவர்கள் இயற்கையை நெருங்கி கவனித்து அதிலிருந்து பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்தனர்.