மும்பையின் புறநகர் பகுதியில் பாயின்சூர் அருகே உள்ள போரி வலி என்ற இடத்தில் உள்ளது மண்டபேஷ்வர் குகை. இது சிவபெருமானுக்காகஅர்ப்பணிக்கப்பட்ட எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த குடைவரை கோயிலாகும். இதற்கு முன்னர் இந்த இடம் புத்த விகாரங்களாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
மண்டபேஸ்வரர் குகை என்பதற்கு கடவுள் வாழும் இடம் என்று பொருள். இந்த குகைகள் ஏறக்குறைய 1500 முதல் 1600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் ஆரம்பகால கல்வெட்டு கோயில்கள் மற்றும் கலை வடிவம் போன்றவை புத்த துறவிகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இந்தக் குகையானது மிகப்பெரிய மண்டபத்தையும் முக்கிய கர்ப்பக் கிரகத்தையும் கொண்டிருக்கிறது. புத்த துறவிகளால் உருவாக்கப்பட்ட இந்தக் குகை பின்னர் பாரசீகர்களால் வண்ணம் தீட்டப்பட்டிருக்கிறது. 1739ம் ஆண்டு இந்தப் பகுதியில் மராத்தியர்களின் படையெடுப்புக்கு பிறகு பல ஆண்டுகள் இந்தப் பகுதி வனமாக மாறிப்போனது.
இந்தக் குகையானது காலப்போக்கில் உலகப் போரின்போது வீரர்கள் தங்கப் பயன்படுத்தும் வகையில் மாறியிருக்கிறது. பொதுமக்களும் கூட இதில் தங்கி இருந்திருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் போர்ச்சுகீசியர்கள் இந்த இடத்தை பிரார்த்தனை நடத்தும் இடமாகப் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த மண்டபேஷ்வர் குகை பல்வேறு ஆட்சியாளர்களின் தொடர்ச்சியான படையெடுப்பின் சாட்சியாக நிற்கிறது.
ஒவ்வொரு முறையும் குகைகள் வேறு வேறு காரணத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சில நேரங்களில் ராணுவத்தினரால் அகதிகளுக்கான வீடாக இருந்திருக்கிறது. அது போன்ற காலகட்டத்தில் தனித்துவம் பெற்ற பல ஓவியங்கள் மோசமான வகையில் தகர்க்கப்பட்டுள்ளன. பின்னர் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு தற்போது பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த குடைவரையில் காணப்படும் பெரும்பாலான ஓவியங்கள் அழிந்துவிட்டன. அவை அதன் புகழ்பெற்ற கடந்த காலத்தை நினைவூட்டுவதாக உள்ளது. குகை வளாகங்களுக்கு மேல் ஒரு தேவாலயம் காணப்படுகிறது. குகைகளின் மேல் பகுதியில் பழைய கட்டடங்களின் இடிபாடுகளும் உள்ளன.
தற்போது இந்த மண்டபேஷ்வர் குகைகளில் நடராஜர், சிவபெருமான், அர்த்தநாரீஸ்வரர் போன்ற தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. மேலும், விநாயகர், பிரம்மன், விஷ்ணு சிலைகளும் இருக்கின்றன. இங்குள்ள சில படைப்புகள் இந்து கடவுள்களின் புராண சித்தரிப்புகளாக உள்ளன. சிவன், பார்வதி திருமணத்தை குறிக்கும் ஒரு விரிவான சிற்பம் இந்த குகைகளின் தெற்கே ஒரு பெரிய சதுர ஜன்னல் வழியாக பார்க்கும் வகையில் இருக்கிறது.