வெள்ளிக்கிழமை விரதம்: வைகாசி மாத வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி, ஒரு ஆண்டு முழுவதும் வரும் வெள்ளிக்கிழமைகளில் விநாயகர் வழிபடும் விரதம் வெள்ளிக்கிழமை விரதம் ஆகும்.
சதுர்த்தி விரதம்: ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி திதி அன்று விநாயகர் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான பலனை தரும். இந்த நாளில் நாம் விநாயகரை வழிபாடு செய்தால் காரியத் தடைகள் நீங்கிவிடும்.
தூர்வா கணபதி விரதம்: கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடும் விரதம் இது. அன்றைய தினம் விநாயகப் பெருமானை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி வழிபாடு செய்வதன் மூலம் வம்ச விருத்தி உண்டாகும்.
செவ்வாய்க்கிழமை விரதம்: ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஓராண்டு முழுவதும் செவ்வாய்க்கிழமையில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் விரதம் இது. இதனால் செவ்வாய் தோஷம் நீங்கும்.
ஸித்தி விநாயகர் விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை 14ம் தேதியான சதுர்த்தி திதியில் விரதம் இருப்பது இந்த விரதத்தின் சிறப்பாகும். இந்த நாளில் விநாயகரை வழிபட்டு வந்தால் எதிரிகள் விலகுவார்கள்.
குமார சஷ்டி விரதம்: கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி மார்கழி சஷ்டி வரை 21 தினங்கள் விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். இந்த காலகட்டத்தில் 21 இலைகள் கொண்ட மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்ள வேண்டும். பிள்ளை, செல்வம், குடும்ப வளத்திற்காக இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு, ‘பிள்ளையார் நோன்பு’ என்று பெயர்.
விநாயகர் நவராத்திரி: ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து, அதாவது விநாயகர் சதுர்த்திக்கு பின்வரும் ஒன்பது நாட்கள் விநாயகர் வழிபாடு செய்வதற்கு ‘விநாயக நவராத்திரி’ என்று பெயர்.
செவ்வாய் பிள்ளையார் விரதம்: ஆடி மாத செவ்வாய் அன்று விரதமிருப்பது. இதனை பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும். இந்த விரத பூஜையை செய்யும் பெண்கள் வீட்டில் இருந்து பச்சரிசியை கொண்டு வந்து பொது இடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர். கன்று போடாத பசுசாணத்தால்விநாயகர் உருவம் செய்து புங்க மரக்கொழுந்து புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி அதில் விநாயகரை பிரதிஷ்டை செய்து ஆடிப் பாடுவர். செல்வ செழிப்புடன் வாழ இந்த பூஜை செய்வதாக நம்பிக்கை.
அங்காரக சதுர்த்தி விரதம்: பரத்வாஜ முனிவருக்கும் இந்திரலோகப் பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதை பூமா தேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைத்தாள். மகரிஷி அந்தப் பிள்ளைக்கு அங்காரகன் எனப் பெயர் சூட்டி, விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஒரு வருடம் இந்த விரதத்தை செய்து வந்தால் செல்வ வளம் பெற்றவனாக மாறுவான் என்பது ஐதீகம்.
வெள்ளிப் பிள்ளையார் விரதம்: ஆடி மற்றும் தை மாத வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நினைத்துக் கொண்டு விரதம் இருந்து, விநாயக துதிகள் பாடி, பலகார பட்சணங்கள் படைத்து வணங்க வேண்டும். இந்த விரத பூஜையையும் பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும். இந்த வழிபாட்டால் உங்களுடைய நல்ல எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.
தூர்வாஷ்டமி விரதம்: புரட்டாசி மாத வளர்பிறையில் அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை ஒரு ஆண்டு காலம் அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது இந்த விரதத்தின் சிறப்பாகும். இந்த வழிபாட்டால் உடல் வலிமை உண்டாகும்.