எழுத்தாளர்கள் சமூகத்தின் கண்ணாடி போன்றவர்கள். சமகால நிகழ்வுகள் முதல் வரலாற்றுப் புதினங்கள், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு நூல்களைப் படைத்து வாசகர்களுக்கு இலக்கிய விருந்து படைக்கிறார்கள். எழுத்தாளர்களைப் போலவே மொழி பெயர்ப்பாளர்களும் மிகவும் முக்கியமானவர்கள். வெவ்வேறு மொழிகளில் இருக்கும் நூல்களை தமது சொந்த மொழியில் மொழிபெயர்ப்பு செய்து தரும் முக்கியமான பணியில் இருப்பவர்கள்.
இவர்கள் பல்வேறு மொழிகள் மற்றும் கலாசாரங்களின் தகவல் பரிமாற்றத்தை எளிதாக்கும் விதத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றார்கள். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30ம் தேதி அன்று சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் மொழியின் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தையும், மொழியியல் மற்றும் கலாசார இடைவெளிகளை குறைக்க பயனுள்ள மொழிபெயர்ப்புச் சேவைகளின் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
கலாசார வேறுபாடுகள், தொழில்நுட்பச் சொற்கள் மற்றும் நேரக்கட்டுப்பாடுகள் உட்பட மொழி பெயர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு இந்த நாள் கவனம் செலுத்துகிறது. உலகளாவிய தொடர்பு, வணிகம், கல்வி, சுகாதாரம் மற்றும் சர்வதேச உறவுகளில் மொழிபெயர்ப்பு ஏற்படுத்தும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை இது காட்டுகிறது.
நல்ல நூல்கள் மற்றும் திரைப்படங்கள் மொழிபெயர்க்கப்படும்போது பல நாட்டுக் கலாசாரங்களை பற்றி மக்கள் புரிந்து கொள்ளவும் ஏதுவாக அமைகிறது.
உலகப் பொதுமறையாம் திருக்குறள் தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. உலகின் பல பகுதிகளில் புனித நூலாக இது போற்றப்படுகிறது. இது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், சீன, ஜப்பானிய, அரபு, பாரசீக, பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது தமிழ் மொழிக்குக் கிடைத்த பெருமையாகும்.
சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கிய உலகில் மிகச் சிறப்பான இடம்பிடித்த கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பல படைப்புகள் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
பூமணி என்கிற தமிழ் நாவல் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜெயகாந்தனின் பல படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல பல திரைப்படங்கள் பிற மொழியில் இருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன.
ஆங்கிலம், ஜெர்மனி, ஜப்பானிய, கொரியன் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளில் இருந்தும், மலையாளம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, பெங்காலி போன்ற பிற மாநில மொழிகளில் இருந்தும் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு திரைப்படங்களும் நூல்களும் வெளியாகின்றன.
ஒரு மனிதன் தனது தாய்மொழி தவிர, ஒன்றிரண்டு பிற மொழிகளைக் கற்கலாம். ஆனால், எல்லா மொழிகளையும் கற்க முடியும் என்பது சாத்தியமில்லை. ஆனால், மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ள படங்களையும் நூல்களையும், பார்ப்பதன் மற்றும் வாசிப்பதன் மூலம் பல்வேறு நாட்டுக் கலாசாரங்கள், பண்பாடு போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.
மொழிபெயர்ப்பு உலகில் பரந்த பார்வையாளர்களுக்கு மிகச்சிறந்த விருந்தாக அமைகிறது. நல்ல படைப்பு ஒரு குறிப்பிட்ட மாநிலம் அல்லது நாட்டுக்கு மட்டும் சொந்தமாகி விடாமல் மொழிபெயர்ப்பின் மூலம் உலகமெங்கும் உள்ள மக்களை சென்று சேர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.