கலவைக்கீரையில் உள்ளது கலக்கல் நன்மைகள்!

Kalavai Keerai Masiyal
Kalavai Keerai Masiyal
Published on

வாரம் ஒரு முறை கலவைக்கீரை செய்து சாப்பிட அற்புதமான பலன்கள்  உண்டாகும். கிராமங்களில் ஏழெட்டு கீரை வகைகளை சேர்த்து ஒன்றாக்கி சமைப்பதுதான் ‘கலவைக் கீரை’ எனப்படும். கலவை கீரை செய்வது மிகவும் சுலபம் மற்றும் சுவையும் கூட.

கீரைகள் எப்போதும் சத்து நிறைந்தவை. மூலிகை தாவரங்களாக இருந்தாலும் நம் முன்னோர்கள் அவற்றையும் கீரையில்தான் சேர்ப்பார்கள்.மழைக்காலங்களிலும், மழைக்கு பிந்தைய காலங்களிலும் வயல் ஓரங்களிலும், வேலிப் பகுதியிலும், தோட்டங்களிலும், வரப்புகளிலும் எண்ணிலடங்கா கீரை வகைகள் காணப்படும். இவற்றைக் கண்டறிந்து பறித்து வந்து சமைப்பார்கள். தினம் ஒரு கீரை என்ற கணக்கெல்லாம் அப்பொழுது கிடையாது. கிடைக்கும் கீரை வகைகள் 10க்கும் மேற்பட்டிருந்தாலும் அதை சேர்த்து மசியலாக்கி விடுவார்கள்.

பொதுவாக கீரைகள் எல்லாம் அதிக சத்துக்கள் கொண்டவை. பல நோய்களை தடுக்கவும், உடலில் சத்து குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் உதவுகிறது. இரத்த சோகை, ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்னைகளைத் தடுக்கக் கூடியவை. மலச்சிக்கல், மாதவிடாய் தொந்தரவுகள், கெட்ட கொழுப்பு போன்ற பிரச்னைகள் வராமல் தவிர்க்கக் கூடியவை.

தூதுவளை, முடக்கத்தான், வல்லாரைக் கீரை, கற்பூரவல்லி, கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி போன்ற கீரை வகைகளை ஒன்றாக சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி, கபம் ஆகியவை முறிந்து வெளியேறிவிடும். வாரத்துக்கு ஒரு முறை இப்படி சமைத்து சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட லைஃப் ஸ்டைல் நோய்கள் எனப்படும் நீரிழிவு, மாரடைப்பு போன்றவை நம்மை அணுகாது.

பொதுவாக, மழைக் காலங்களில் கிராமங்களில் வீட்டைச் சுற்றி வளரக்கூடிய கீரை வகைகளை பறித்து உப்பு, சின்ன வெங்காயம், மிளகாய், சிறிது புளி தண்ணீர் சேர்த்து கலவைக்கீரை கடையல் செய்வார்கள். முள்ளிக்கீரை, குப்பைக் கீரை, அம்மான் பச்சரிசி, முடக்கத்தான், மூக்கிரட்டை, சாரணைக்கீரை, பொன்னாங்கண்ணி போன்ற கீரைகளை பறித்து வந்து வெள்ளைப் பூண்டு, சின்ன வெங்காயம், புளிக் கரைசல், மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து வேகவிட்டு கடைந்து உப்பு சேர்த்து சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட ஆஹா அமிர்தம்தான்.

இதையும் படியுங்கள்:
மாணவர்கள் ஹேர் கலரிங் மற்றும் மேக்கப் போட்டுக்கொள்ள தடை விதித்துள்ள நாடுகள்!
Kalavai Keerai Masiyal

இப்படி சமைப்பதால் எல்லாவிதமான சத்துக்களும் கிடைக்கும். வாதம், பித்தம், கபம் போன்ற அனைத்தும் சமநிலைக்கு வரும். கிராமங்களில் சரி, சென்னை போன்ற நகரங்களில் இந்த கலவைக்கீரையை எங்கு போய் தேடுவது என கவலைப்பட வேண்டாம். கீரைக்கார அம்மாவிடம் சொல்லி வைத்தால் கொண்டு வந்து தருவார்கள்.

கலவைக் கீரைகள்: சக்கரவர்த்தி கீரை, சுக்கான் கீரை, வள்ளல் கீரை, அகத்திக்கீரை, காசினிக்கீரை, காட்டுத்துத்தி, கீழாநெல்லி, மணத்தக்காளி, குப்பைக் கீரை, முடக்கறுத்தான், மூக்கிரட்டை, முள் முருங்கை, நச்சுக்கொட்டை கீரை, குத்து பசலைக் கீரை, பண்ணைக் கீரை, பொடுதலைக் கீரை, பொன்னாங்கண்ணி, புளிச்ச கீரை, புளியாரைக் கீரை, சாரணைக்கீரை, சிறுகண்பீளை, தரை பசலை, தவசிக் கீரை, தூதுவளை, தும்பைக் கீரை, துத்திக் கீரை, வாதநாராயணன் கீரை, வல்லாரைக்கீரை என இருக்கும் கீரை வகைகளில் ஏழெட்டு கீரை வகைகளை சேர்த்து ஒன்றாக்கி சமைப்பதுதான் கலவைக்கீரை.

அடிக்கடி கிடைக்கும் கீரைகளான அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை ஆகியவற்றை தவிர்த்து வாரத்திற்கு ஒரு முறை கலவைக் கீரை கொண்டு சமைத்து உண்ண, உடலுக்குத் தேவையான ஊட்டம் கிடைப்பதுடன் ருசியும் அபாரமாக இருக்கும். செய்துதான் பாருங்களேன்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com