நம் நாட்டின் மிகப் பெரிய NLC சுரங்கம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
நெய்வேலி நிலக்கரி சுரங்கம்

ம் அன்றாட அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் எப்படி உருவாகிறது? அதற்கான கட்டமைப்புகள் என்ன? அது எங்கிருந்து வருகிறது? என்பதைப் பற்றியெல்லாம் நாம் யோசிப்பதே கிடையாது. நம் தமிழ்நாட்டின் மிகப் பெரிய சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, விநியோகிக்கப்படுகிறது. அதைப் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

இந்தியாவிலேயே மிகப்பெரிய, திறந்தவெளியில் அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கம் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ளது. பழுப்பு நிலக்கரியைக் கொண்டு இங்கு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக இங்கு பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு மட்டுமல்லாது, தென் மாநிலங்கள்அனைத்திற்கும் தேவையான மின் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது நெய்வேலி அனல் மின் நிலையம்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
நெய்வேலி நிலக்கரி சுரங்கம்

நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பழுப்பு நிலக்கரி அபரிமிதமான அளவில் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி இன்னும் பல வருடங்களுக்கு மின் உற்பத்தி செய்ய முடியும் என்கிறது ஒரு ஆய்வு.

நெய்வேலியில் 1934ம் ஆண்டுதான் பழுப்பு நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் கூட அதற்கு முன்பே, அதாவது, 1828ம் ஆண்டே பழுப்பு நிலக்கரி தொடர்பான ஆய்வுகள் இங்கு தொடங்கி விட்டன. 1828ல் நெய்வேலி அருகே நிலக்கரி வகையைச் சேர்ந்த பீட் என்ற நிலக்கரி படிவம் இருப்பதாக அப்போதைய சென்னை மாகாண அரசுக்கு, தஞ்சாவூர் (நெய்வேலி அப்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்தது) கலெக்டர் நெல்சன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, 1830ம் ஆண்டு வேறு எங்காவது பழுப்பு நிலக்கரி இருக்கிறதா என்பதை அறிவதற்காக முழுமையான ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. முதல் கட்டமாக பாண்டிச்சேரியைச் சுற்றிலும் உள்ள பகுதிகளை ஆராய இந்திய புவியியல் ஆய்வுக் கழகத்தின் டபிள்யூ. கிங் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் பயனாக, பிரெஞ்சு அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பாஹூர் பகுதியில் பழுப்பு நிலக்கரி இருப்பதாக பிரெஞ்சு பொறியாளர் போய்லாய் தெரிவித்தார். இதே வகையிலான நிலக்கரி படிவங்கள் உத்தரமாணிக்கம், அரங்கனூர், கன்னியார்கோவில், கடலூர் ஆகிய பகுதிகளிலும் இருப்பதாகத் தெரிய வந்தது. இது 1884ல் நடந்த ஆய்வில் தெரிய வந்தது.

1934ம் ஆண்டு நெய்வேலி அருகே பழுப்பு நிலக்கரியைத் தோண்டியெடுக்கும் முயற்சி தொடங்கியது. முதல் முறையாக தோண்டப்பட்டபோது, கருப்பு நிறத்தில் களிமண் போல கிடைத்தது பழுப்பு நிலக்கரி. ஏராளமான தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
நெய்வேலி நிலக்கரி சுரங்கம்

1935ம் ஆண்டு நெய்வேலியில் உள்ள ஜம்புலிங்க முதலியார் என்பவருடைய வீட்டிலுள்ள பெரிய கிணற்றில், போர் போட்டபோது, கருப்பு நிறத்திலான பொருட்கள் நிறைய வந்தன. இது, நிலக்கரி தோண்டும் பணியில் இருந்த பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கிணற்றில் கிடைத்த பொருட்கள் சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அது பழுப்பு நிலக்கரிதான் என்பது ஆய்வில் உறுதியானது. பிறகு, 1941ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த பின்னி நிறுவனம், நெய்வேலி அருகே ஆசிஸ் நிகர் பகுதியில் ஐந்து பெரும் கிணறுகளைத் தோண்டியது. அதில் இரண்டு கிணறுகளில் பழுப்பு நிலக்கரி இருப்பது தெரிய வந்தது. ஆனால், தொடர்ந்து தோண்டுவதற்கு போதிய கருவிகள் இல்லாததால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.

1943ம் ஆண்டு முதல் 1946ம் ஆண்டு வரை இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுவீச்சில் நிலக்கரியைத் தோண்டும் பணியைத் துவக்கியது. இந்தப் பணியின்போது அப்பகுதியில் 500 டன் அளவிற்கு பழுப்பு நிலக்கரி புதைந்து கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி இருப்பை முழுமையாக வெளிக் கொண்டு வர அப்போதைய இந்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பான பணிகளைக் கவனிக்க இந்திய அரசு எச்.கே.கோஸ் என்பவரை நியமித்தது. கோஸ் தனது பணிகளைத் துவக்கினார்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
நெய்வேலி நிலக்கரி சுரங்கம்

1948ம் ஆண்டு தோண்டப்பட்ட சுரங்கத்தில் நீர் சேர்ந்து கொண்டதால் அது அப்படியே விடப்பட்டது. மூன்றாவது தோண்டப்பட்டதில் பழுப்பு நிலக்கரி தென்பட்டது. இந்தக் கிணற்றுக்கு ‘செப்டம்பர், 1951’ என்று பெயர்.

1949ம் ஆண்டு சுரங்கம் தோண்டும் பணிக்கான டெண்டர்களை அறிவித்தார் கோஸ். 1951ம் ஆண்டு மொத்தம் 175 ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டன. அப்போதுதான் நெய்வேலியில் மறைந்து கிடந்த பழுப்பு நிலக்கரியின் உண்மையான அளவு தெரிய வந்தது. அப்பகுதியில் 2000 மில்லியன் டன் அளவிற்கு பழுப்பு நிலக்கரி புதைந்து கிடப்பது தெரிய வந்தது.

மாநில அரசும் தனது பங்கிற்கு விருத்தாச்சலம் அருகே 150 கிணறுகளைத் தோண்டியது. சென்னை மாகாண அரசுக்கு உதவுவதற்காக அமெரிக்க அரசின் சுரங்கத்துறை பொறியாளர் பால் எரிச் அனுப்பப்பட்டார். அவரது பரிந்துரையின் பேரில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி குறித்து ஆய்வு செய்ய அமெரிக்க அரசு ஒப்புக் கொண்டது.

இதையும் படியுங்கள்:
எந்த வயதில் சர்க்கரை வியாதி வர வாய்ப்புகள் அதிகம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 
நெய்வேலி நிலக்கரி சுரங்கம்

1952ம் ஆண்டு உயர் மட்டக் குழு ஒன்று குவாரிகளை அமைப்பது தொடர்பான திட்ட அறிக்கையை இந்திய அரசிடம் சமர்ப்பித்தது. 1953ம் ஆண்டு சென்னை மாகாண அரசின் தொழில்துறை அமைச்சர் டாக்டர் கிருஷ்ணராவ் தலைமையில் குவாரி தோண்டும் திட்டம் தொடங்கியது. 1954ம் ஆண்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு சுரங்கம் தோண்டும் பணிகளைப் பார்வையிட்டார். இந்திய அரசின் சி.வி.நரசிம்மன், ஏ.சி.குஹா, லாஹிரி ஆகியோர் அடங்கிய குழுவினர் சுரங்கம் தோண்டும் பணிகளைப் பார்வையிட்டனர்.

1955ம் ஆண்டு நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் மாநில அரசின் கையிலிருந்து மத்திய அரசுக்கு மாறியது. முழு அளவில் நிதியுதவி செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டது. திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியாக மத்திய தொழில்துறை செயலாளர் டி.எம்.எஸ். மணி பொறுப்பேற்றுக் கொண்டார்.1956ம் ஆண்டு நெய்வேலி அனல் மின் நிலையம் முழுமையான உற்பத்தி நிறுவனமாக மாறியது. அன்று தொடங்கி இன்று வரை அது தனது மின் உற்பத்தியைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com