வாக்காளர் அடையாள அட்டை உருவானது எப்படி தெரியுமா?

Do you know how the Voter ID Card was created?
Do you know how the Voter ID Card was created?

ந்தியாவில் நடக்க இருக்கும் 18வது மக்களவைத் தேர்தல் என்னும் திருவிழாவை கொண்டாடிட அரசியல் கட்சிகள் மற்றும் மக்களாகிய நாம் தயாராகி வருகிறோம். அனல் பறக்கும் பிரச்சாரங்கள் ஒரு பக்கம், தெருமுனைப் பிரச்சாரம் வீதி வீதியாக பிரச்சாரம், சமூக வலைதளங்களில் பிரச்சாரம் என தேர்தல் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இப்பொழுது நாம் பயன்படுத்தும் வாக்காளர் அடையாள அட்டை எப்படி உருவானது என்று விவரம் உங்களுக்குத் தெரியுமா? அதற்கு யாரெல்லாம் காரணம்? எப்படி இந்த அட்டை உருவானது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நம் நாட்டில் வாக்களிக்கும் வாக்காளர் அனைவருக்கும், இவர்தான் வாக்காளர் என்று அறிவதற்கும், வாக்குப்பதிவில் நடைபெறும் முறைகேட்டை தவிர்ப்பதற்கும் ஒரு அடையாள ஆவணம் வேண்டும் என்று முடிவு செய்த இந்திய தேர்தல் ஆணையம், கடந்த 1957ம் ஆண்டு வாக்காளர் அடையாள அட்டை திட்டத்தை முன்மொழிந்தது.

இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையாளராக இருந்த சுகுமார் சென்தான், வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வரவேண்டும் என்ற விதையை போட்டவர். அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, அதாவது 1958ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ந் தேதி, இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதை அறிமுகம் செய்தவர் அப்போதைய சட்ட மந்திரியாக இருந்த அசோக்குமார் சென். இவர், சுகுமார் சென்னின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 1958ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ந்தேதி, இந்தியாவின் இரண்டாவது தலைமை தேர்தல் ஆணையாளராக கே.வி.கே.சுந்தரம் பதவி ஏற்றார். அடுத்த சில நாட்களில் அடையாள அட்டை வழங்க வகை செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாகியது.

வாக்காளர் அடையாள அட்டையை நடைமுறைப்படுத்த, தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டபோதும், ஏனோ தாமதாமாகிக் கொண்டே சென்றது. இருப்பினும் 1960ம் ஆண்டு மே மாதம் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா தென்மேற்கு பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை சோதனை முயற்சியாக கொண்டு வந்தது.

பலர் புகைப்படம் எடுக்க முன்வரவில்லை. குறிப்பாக, பெண்கள் தங்களை புகைப்படம் எடுக்க மறுப்பு தெரிவித்தனர். இடைத்தேர்தல் நடைபெற்ற அந்த ஒரு தொகுதிக்கே அக்காலத்தில் 25 லட்சம் ரூபாய் வரை தேவைப்பட்டது. அன்றைய காலத்தில் இது மிகப்பெரிய தொகையாகும். தேர்தல் நடத்தும் செலவை விட, வாக்காளர் அடையாள அட்டைக்கான செலவு அதிகமாக இருந்த காரணத்தால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

அதன் பிறகு 19 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தத் திட்டம் மீண்டும் உயிர் பெற்றது. 1979ம் ஆண்டு சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இது ஓரளவு சாத்தியமானதால், அசாம், மேகாலயா, நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டது. இதில் கிடைத்த வெற்றியே 1993ம் ஆண்டு அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை என்பது சாத்தியமானது.

இதை செய்து காட்டியவர், அப்போது தேர்தல் ஆணையாளராக இருந்த டி.என்.சேஷன். அவரது காலத்தில்தான், தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்கள், கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. பல்வேறு தடைகளைத் தாண்டி 1993ம் ஆண்டு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் வாக்காளர் அடையாள அட்டை என்பது கறுப்பு நிறத்தில் இருந்தது. அதன் முதல் பக்கத்தில் வாக்காளரின் புகைப்படம், பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம் ஆகியவை இடம் பெற்று இருக்கும். பின்பக்கத்தில் வீட்டு முகவரி, தொகுதி, பாகம் (வாக்குச்சாவடி எண்) ஆகியவை இடம் பெற்று இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஹோலி வண்ணப் பொடிகள்: ஜாக்கிரதை!
Do you know how the Voter ID Card was created?

இதில் வேடிக்கை என்னவென்றால், ஆரம்ப காலங்களில் வாக்காளர் அடையாள அட்டைக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அந்த அட்டையில் இடம்பெறும்போது தெளிவற்றதாகவும், கேலிக்குரியதாகவும் இருந்தது. அதனால் இது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது. பின்னர் அந்தத் தவறுகள் படிப்படியாக சரிசெய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து வாக்காளர் பட்டியலும் புகைப்படத்துடன் வந்தது. தற்போது அழகிய வண்ணப்புகைப்படத்துடன், பிளாஸ்டிக் அட்டையில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

இந்த வளர்ச்சியின் காரணமாக கடந்த 2021ம் ஆண்டு முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை நடைமுறைக்கு வந்தது. மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை என்பது, வாக்காளர் அடையாள அட்டையின் திருத்த முடியாத, பாதுகாப்பான 'பி.டி.எப்' பதிப்பாகும். மேலும், இதில் வரிசை எண், பகுதி எண் மற்றும் பிற புள்ளிவிவரங்களுடன், பாதுகாப்பான 'கியூ-ஆர்' குறியீடும் உள்ளது. இதனை செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து, சேமித்து வைக்கலாம்.

மன நோயாளிகள், கடன் வாங்கி திவால் ஆனவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படாது. இப்பொழுது உங்களுக்குத் தெளிவாக புரிந்திருக்குமே வாக்காளர் அடையாள அட்டை எப்படி உருவானது? யாரால் உருவானது என்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com