அண்டை நாடுகளை இணைக்கும் 7 ரயில் நிலையங்கள் தெரியுமா?

ஜெய்நகர் ரயில்வே ஜங்ஷன்
ஜெய்நகர் ரயில்வே ஜங்ஷன்

லகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் என்றால் அது இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க்தான். நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் நமது இந்திய ரயில்களில் பயணம் செய்கின்றனர். மாவட்டத்திற்குள் செல்வது, ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்வது என நமது போக்குவரத்தை பாதுகாப்பானதாகவும், வேகமானதாகவும், எளிதானதாகவும் மாற்றி இருக்கின்றன ரயில் போக்குவரத்துகள். நமது இந்திய ரயில்வே மூலம் நாம் வெளிநாடுகளுக்குக் கூட சென்று வர முடியும். நமது இந்தியாவில் உள்ள ஏழு ரயில் நிலையங்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு உள்ளது. இந்த ரயில் நிலையங்கள் வழியே நாம் இந்திய எல்லையைக் கடந்து பயணிக்கலாம். அந்த ஏழு ரயில் நிலையங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஜெய்நகர்: பீகார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்தில் அமைந்திருக்கக் கூடிய ஜெய்நகர் ரயில் நிலையம் இந்தியா மற்றும் நேபாள எல்லையில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்திலிருந்து நாம் நேபாளத்தின் ஜானக்பூரில் உள்ள குருதா ரயில் நிலையம் வரை பயணிக்க முடியும்.

பெட்ராபோல் ரயில் நிலையம்: பிரிட்டிஷ் ஆட்சியின்போது வங்கதேசத்தில் உள்ள குல்னா என்ற இடத்தில் இருந்து பாங்கோன் வழியே கொல்கத்தாவிற்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த ரயில் நிலையம் 1904ம் ஆண்டு கிழக்கு வங்காள ரயில்வே அமைப்புடன் இணைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது . மேற்கு வங்க மாநிலத்தில் இந்தியா மற்றும் வங்கதேச எல்லையில் அமைந்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சரக்கு போக்குவரத்திற்கு இந்த ரயில் நிலையம் முக்கியப் புள்ளியாக செயல்பட்டு வருகிறது. அதேபோல உரிய விசா மற்றும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கும் இந்த ரயிலிலேயே பயணம் செய்ய முடியும்.

ஹல்திபாரி ரயில் நிலையம்: இந்தியா - வங்கதேச எல்லையில் அமைந்திருக்கக்கூடிய மற்றொரு ரயில் நிலையம் இது. இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கும் இந்த ரயிலிலேயே பயணம் செய்ய முடியும். இந்தியாவையும் வங்கதேசத்தையும் இணைக்கக்கூடிய ஒரு பாலமாக இது செயல்பட்டு வருகிறது. இந்திய எல்லையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிலாஹடி ரயில் நிலையம் வழியே வங்கதேசத்துக்கு செல்கிறது. இந்த ரயில் நிலையம் சென்றால் நாம் வங்கதேசத்தின் டாகா வரை சென்று வரலாம்.

அட்டாரி ரயில் நிலையம்
அட்டாரி ரயில் நிலையம்

அட்டாரி ரயில் நிலையம்: இது இந்தியாவின் புகழ் பெற்ற ஒரு ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இதுதான் இந்திய பகுதியில் அமைந்துள்ள கடைசி ரயில் நிலையம். வாகா எல்லையில் அமைந்திருப்பதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து மற்றும் மக்கள் போக்குவரத்து ஆகியவற்றையும் கவனித்துக் கொள்ளக்கூடிய மிக முக்கிய ரயில் நிலையமாக செயல்பட்டு வருகிறது.

டெல்லி ஜங்ஷன்: பொதுவாக, இது பழைய டெல்லி ரயில்வே நிலையம் என அறியப்படுகிறது. இந்தியாவிலேயே மிகவும் பழைமையான மற்றும் எப்பொழுதும் பரபரப்பாகக் காணப்படக்கூடிய ஒரு ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்திலிருந்துதான் பாகிஸ்தானிற்கும் இந்தியாவிற்கும் இடையே பல்வேறு ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது.

ராதிகாப்பூர் ரயில் நிலையம்: இது மேற்கு வங்க மாநிலத்தின் உத்தார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வங்கதேச மற்றும் இந்திய எல்லைக்கு இடையே அமைந்துள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து மற்றும் மக்கள் போக்குவரத்திற்காக இது பயன்படுத்தப்படுகிறது.

ரக்சால் ரயில்வே ஜங்ஷன்
ரக்சால் ரயில்வே ஜங்ஷன்

ரக்சால் ஜங்ஷன்: இந்த ரயில் நிலையம் பீகார் மாநிலத்தின் பிர்ஜங் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இது இந்தியாவையும் நேபாளத்தையும் இணைக்கும் ஒரு ரயில் நிலையம் ஆகும். நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கும் செல்வோர் பயன்படுத்தும் முக்கிய ரயில் நிலையம் இது.

இதையும் படியுங்கள்:
காய்ச்சல் நின்றதும் இதை செய்யுங்கள்… சோர்வே இருக்காது!
ஜெய்நகர் ரயில்வே ஜங்ஷன்

அண்டை நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் விமானப் போக்குவரத்து மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதைத் தாண்டி இந்த ஏழு ரயில் நிலையங்களும் இங்கிருந்து புறப்படும் ரயில்களும் நம் இந்தியாவை அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகியவற்றுடன் இணைக்கிறது.

- ம.வசந்தி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com