விஜயதசமியின் பின்னால் இருக்கும் வியப்பூட்டும் வரலாறு தெரியுமா?

விஜயதசமியின் பின்னால் இருக்கும் வியப்பூட்டும் வரலாறு தெரியுமா?

நேற்று விஜயதசமி. இந்த நாளை எல்லாரும், ஒரு பண்டிகையாகக் கொண்டாடிக்கொண்டு உள்ளார்கள். ஆனால், உண்மை இந்தப் பண்டிகை எப்படி வந்தது? இதன் பின்னணியில் இருக்கும் வரலாறு என்ன?

அசோக மாமன்னர், கலிங்கத்தை வென்ற பத்தாவது நாள்தான் விஜயதசமி. விஜயதசமி, இதில் விஜய என்றால் வெற்றி என்று பொருள். தசமி என்றால் பத்தாவது நாள் என்று பொருள். ஒன்று, இரண்டு, மூன்று என்ற பெயர்களைத்தான் வடமொழியில் பிரதமை, துதியை, திருதியை என்று பயன்படுத்துகிறோம். அதில், பத்தாவது நாள்தான், தசமி என்கிறார்கள். விஜயதசமி என்றால் வெற்றி பெற்ற பத்தாவது நாள் என்று அர்த்தம்.

இந்த நாளை ஏன் கொண்டாடினார்கள்? ஒரு முறை மாமன்னர் அசோகன், கலிங்கத்தை வென்ற மகிழ்ச்சியில் தன் அரண்மனைக்கு வந்து உள்ளார். அவர் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார். அப்போது சபையிலிருந்து பௌத்த துறவி ஒருவர் அசோகரைப் பார்த்து, “மன்னா! நீ வெற்றி அடைந்ததாக, மகிழ்ச்சி அடையாதே. நீ தோல்வி அடைந்திருக்கிறாய்” என்று கூறினார்.

“என்ன சொல்கிறீர்கள்?” என்று மன்னன் ஆச்சரியத்துடன் கேட்டார்.
நீ தோற்றுப் போனாய் என்று துறவி கூறியது அவருக்குப் புரியவில்லை. “நீ சென்று கலிங்கத்தைப் பார்த்துவிட்டு வா” என்றார் துறவி.  

மன்னர் அந்த யுத்த களத்துக்குச் செல்கிறார். அங்குச் சென்று பார்த்தால், ரத்த ஆறு ஓடுகிறது. ஏராளமான படை வீரர்கள் இறந்துகிடக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான படை வீரர்கள், குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடந்து துடிக்கிறார்கள். இதைப் பார்த்த உடனே, மன்னர் பெரும் அதிர்ச்சி அடைகிறார். பகைவர் மட்டுமல்லாமல், தன்னுடைய படை வீரர்களும், இறந்துகிடக்கிறார்கள். பெற்றவர்கள் அங்கு வந்து, கத்தி, கதறி, அழுது, புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சியைப் பார்த்த உடனேயே, மன்னனுடைய மனம் அதிர்ச்சிக்கு உள்ளாகிறது.  ‘ச்சீ, போர் இவ்வளவு மோசமானதா? ரத்த ஆறு ஓடுகிறதே, எவ்வளவு கொடூரம் நிறைந்தது?’ என்றபடி நினைத்துக்கொண்டே அரண்மனைக்குத் திரும்புகிறார்.

அரண்மனையில் இருக்கக்கூடிய, பௌத்தத் துறவி, “மன்னா சொல்.
நீ, வெற்றி பெற்றாயா? தோல்வி அடைந்தாயா?” என்று கேட்க, “நான் ஒப்புக்கொள்கிறேன். நான் தோற்றுப்போனேன்” என்றார் மன்னன்.

அப்போதுதான், துறவி சொல்கிறார்,  “இனிமேல், நீ உண்மையிலேயே மனிதநேயம் உள்ளவனாக இருந்தால், எந்தக் காலத்திலும் போர் செய்ய மாட்டேன் என்று உறுதி எடு. போர் தொழிலைக் கைவிடு. போர் கூடவே கூடாது என்று முடிவெடு.”

அன்றைக்கு முடிவெடுத்தார் அசோக மன்னன். எல்லா ஆயுதங்களையும் தூக்கிப்போட்டார். இனி, எந்த காலத்திலும் யுத்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்த பத்தாவது நாள்தான், இந்த விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது.

அசோகர் போர் தொழில் இல்லை என்று கைவிட்ட பத்தாவது நாள் விஜயதசமி. நம் முன்னோர்கள் போருக்குச் சென்று அந்த ஆயுதங்களால் பலர் கொல்லப்படுகிறார்கள் என்ற காரணத்திற்காகப் போர் தொழிலைக் கைவிட்டு ஆயுத பூஜை கொண்டாடினார்கள். ஆயுதங்களையும் போர் தொழிலையும் விட்டபிறகு அடுத்து என்ன? கல்விதான். அதைத்தான் இன்றைக்கு சரஸ்வதி பூஜை என்று கொண்டாடுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com