அனுமன் ஆட்டம் அறிவோமா?

அனுமன் ஆட்டம் அறிவோமா?

வாய்மொழிக் கதையின் மூலமும், கம்பன் இயற்றிய காவியத்தின் மூலமும் நாம் அனைவருக்கும் தெரிந்த கதை இராமாயணம். இந்தக் கதையில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் ஒன்றான அனுமனை மையமாகக் கொண்டு ஒரு ஆடற்கலை உள்ளது? அது பற்றி உங்களுக்குத் தெரியுமா?

அனுமனை தெய்வமாக பாவித்து ஆடப்படும் ஆட்டம், ‘அனுமன் ஆட்டம்.’ குரங்கு முக வடிவ முகமூடி, உடல் முழுவதும் அடர்ந்து பரவி இருக்கும் ரோமம் நிறைந்த வடிவமைப்பைக் கொண்ட ஆடை மற்றும் வால் ஆகியவற்றை உடலில் கட்டிக்கொண்டு குரங்கு செய்யும் சேட்டைகள் எல்லாம் செய்துகாட்டி அனுமன் ஆட்டத்தை ஆடுவார்கள். குரங்கைப் போன்று குரல் கொடுத்து, பல் இளிப்புச் செய்து, கண்களை உருட்டி, வாலை ஆட்டி, மக்களை ரசிக்க வைப்பார்கள்; குஷிப்படுத்துவார்கள்.

தமிழகத்தில் இந்தக் கலை தென் மாவட்டங்களில் வைணவர்கள் அதிகம் வாழும் இடங்களில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த அனுமன் ஆட்டம் ஓர் உலகப் புகழ்பெற்ற கலையாகப் பார்க்கப்படுகிறது. குரங்கு ஆடல்கள் என்ற இந்த ஆட்டத்தை போர்னியோ நாட்டில், ‘மாக்காடு’ என்ற பெயரிலும், ஆப்பிரிக்க நாட்டில், ‘ஜவரா’ என்றும், ஜப்பானில், ‘நோ டிராமா’ என்றும் அழைக்கின்றார்கள்.

அனுமன் ஆட்டம் பற்றி பழங்கதை ஒன்று உண்டு. குமரி மாவட்டத்தில் நாராயண வடிவுச் சாமியார் என்பவர் இந்த அனுமன் ஆட்டத்தை ஆடி வந்தாராம். அப்போது வானத்தில் ஒரு கருடன் பறப்பதைப் பார்த்திருக்கிறார். உடனே ஆவேசமாக மருள் வந்தவர் போல், அருகிலிருந்த ஓர் அரச மரத்தில் சரசரவென்று ஏறி மரத்தின் உச்சிக்கே சென்று விட்டாராம். இதனால் அப்பகுதியில் அனுமன் ஆட்டம் மிகவும் பிரசித்தி பெற்று வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆட்டத்தை ஆண்கள் மட்டுமே ஆட முடியும் எனும் மரபு உள்ளது. அதுமட்டுமின்றி, இது அனுமன் வேடம் அணிந்து ஆடும் ஆட்டம் மட்டுல்ல; இது அனுமன் பக்தர் உடலில் மேவி வந்து ஆடும் தெய்வ ஆட்டம் என்றும் கூறுகிறார்கள்.

அனுமனின் மீது கிராமப்புற மக்கள் மிகுந்த அன்பு வைத்துள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு அதிகம் தெரிந்தது ஊர் சந்தியிலும், மக்கள் கூடும் இடங்களிலும் ஆடப்படும் குரங்கு ஆட்டம்தான். குரங்கை வளர்த்து, பழக்கி அதற்கு சில ஆட்ட முறைகளைக் கற்றுக் கொடுத்து, ஆட வைத்து யாசிக்கும் நிலையில் வைத்துள்ளனர். இந்தக் குரங்காட்டமும், அனுமன் ஆட்டமும் வேறு வேறு. அனுமன் ஆட்டத்தை ஒருபோதும் குரங்காட்டத்தோடு ஒப்பிட முடியாது.

அனுமன் ஆட்டத்தில் தலைசிறந்தவர்கள் யாரும் இல்லாத காரணத்தினால், பெரும்பாலான மக்களிடத்தில் இந்தக் கலை சென்று சேரவில்லை. இன்றளவும் பெரும்பாலான மக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் செவிவழிச் செய்தியாகவே உள்ளது அனுமன் ஆட்டம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com