வெளியில் கிளம்பிச் செல்லும்போது பெரும்பாலான மக்களிடம் அவசியம் இருக்கும் ஒரு பொருள் கைக்குட்டை. வெயில் காலத்தில் வியர்த்து வழியும் முகத்தை துடைத்துக் கொள்ளவும், மழை பெய்யும்போது தலையில் ஸ்கார்ஃப் போல கட்டிக் கொள்ளவும் கைகளைத் துடைத்துக் கொள்ளவும் கைக்குட்டை உதவுகிறது. கைக்குட்டை எப்போது தோன்றியது? இதன் வரலாறு மற்றும் கலாசார முக்கியத்துவம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பல்வேறு கலாசாரங்களில் கைக்குட்டைகள்: கைக்குட்டைகள் பல்வேறு கலாசாரங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்துள்ளன. கி.மு. ஆயிரமாவது ஆண்டு முதல் சீனாவில் சௌ வம்சத்தின் உருவங்கள் துண்டுத் துணிகளை வைத்திருப்பதைக் காட்டும் தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்களின் முகங்களை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும் நடைமுறை நோக்கங்களுக்காக மற்றும் வியர்வையையும் மூக்கையும் துடைத்துக் கொள்வதற்காக அது பயன்படுத்தப்பட்டது.
பண்டையை எகிப்தில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு கைக்குட்டை போன்ற பொருட்கள் முதன்மையாக வியர்வையை துடைக்க கைத்தறி அல்லது பருத்தியால் தயாரிக்கப்பட்டது. பண்டைய கிரேக்கத்தில் சுடாரியம் என்று குறிப்பிடப்படும் ஒரு துணியை தயாரித்தனர். இது புருவத்தை துடைக்கப் பயன்படுத்தப்பட்டது.
ரோமானிய கலாசாரத்தில் கைக்குட்டைகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ரோமில் ஆண்களும் பெண்களும் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட சிறிய துணிகளை வெளியில் செல்லும்போது எடுத்துச் சென்றனர். பொது விளையாட்டுகளில் நூற்றுக்கணக்கான ரோமானியர்கள் தங்கள் கைக்குட்டைகளை காற்றில் அசைப்பதை போன்ற காட்சிகள் உள்ளன. தேர் பந்தயங்களுக்குத் தொடக்கத் துப்பாக்கியாகவும் கைக்குட்டைகள் பயன்படுத்தப்பட்டன.
கைக்குட்டைகள் மத்திய கிழக்கு கலாசாரம், உய்குர் சமூகங்கள், துருக்கி கலாசாரம் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல கலாசாரங்களில் வரலாறு முழுவதும் காணப்பட்டன. அவற்றின் நோக்கம் புனிதமானவற்றைப் பாதுகாப்பது, காயங்களைக் கட்டு போடுவது, பிறருக்கு சமிக்ஞை செய்யப் பயன்படுத்துவது நாணயங்களுக்கான பணப்பையாக பணியாற்றுவது அல்லது அலங்காரம் மற்றும் சடங்கு நோக்கங்களுக்காக சேவை செய்வது.
கைக்குட்டையின் பொருள்: கைக்குட்டை என்ற சொல் பழைய பிரெஞ்சு கூவ்ரே செஃப் என்பதிலிருந்து உருவாக்கப்பட்டது. இதற்கு தலையை மறைக்கும் துணி என்று பெயர். காலப்போக்கில் முகம் மற்றும் கைகளைத் துடைக்கும் துணியாக மாறியது. ஃபேஷன் மற்றும் சமூக அந்தஸ்தின் அடையாளமாகவும் மாறியது. பிரபுக்கள் எம்பிராய்டரி செய்யப்பட்ட கைக்குட்டைகளை வைத்திருந்தனர். இது செல்வத்தையும் செல்வாக்கையும் குறித்தது.
எங்கும் கைக்குட்டை: 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தொழில்துறை புரட்சியின் காரணமாக கைக்குட்டை உற்பத்தியில் புரட்சி உருவானது. இது வெகுஜன உற்பத்தியை அனுமதித்தது. பருத்தி மற்றும் செயற்கை இழைகள் போன்ற மலிவு விலையில் கிடைக்கும் பொருட்களால் செய்யப்பட்ட கைக்குட்டைகள் விற்பனைக்குக் கிடைத்தன. பல்வேறு வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளில் கைக்குட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. எல்லா வகுப்பு மக்களிடையேயும் காணப்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் கைக்குட்டைகள் ஆண்கள் மற்றும் பெண்களின் அலமாரிகளில் இன்றியமையாத பொருளாக மாறியது.
தற்காலத்தில் தூக்கி எறியப்படும் டிஷ்யூ பேப்பர்களின் பயன்பாடுகளால் கைக்குட்டைகள் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களிடையே குறைவாக பயன்படுத்தப்படுகிறது என்றாலும் அவற்றின் அழகியல் மற்றும் உணர்ச்சி மதிப்பை பாராட்டுபவர்கள் இடையே ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துதான் உள்ளது.
இலக்கியத்தில் கைக்குட்டைகள்: இலக்கியத்தில் கைக்குட்டைகள் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. பல்வேறு கவிதைகள் மற்றும் நாவல்களில், கைக்குட்டைகள் பெரும்பாலும் காதல், நம்பகத்தன்மை, இழப்பு மற்றும் சமூக நிலை போன்ற பல்வேறு கருப்பொருள்களை குறிக்கின்றன. ஷேக்ஸ்பியரின் ஒத்தலோ நாடகத்தில் கைக்குட்டை ஒரு முக்கியப் பங்கு வகித்தது. கதாநாயகி டெஸ்டி மோனோவின் கைக்குட்டை ஒரு முக்கியமான சதி சாதனமாகப் பயன்படுத்தப்பட்டது. ஒத்தலோவின் அன்பையும் நம்பிக்கையையும் குறித்தது. வில்லன் இயாகோவின் வஞ்சத்தால் அது நாயகன், நாயகி உள்ளிட்ட பலரின் உயிர் பறிக்கும் கருவியாக மாறியது.